ஆர்.எஸ்.எஸ்ஸின் அருமை அறிந்த தெய்வம்!

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பந்தலின் கீழ் அமர்ந்திருந்தார் மகா ஸ்வாமிகள். அது நெருக்கடி நிலவர காலம் (1975 -77). ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டிருந்தது. 25-30 வயது மதிக்கத்தக்க ஒரு ஸ்வயம்சேவக் மகா ஸ்வாமிகளை தரிசிக்க மடத்துக்குள் வந்தார். அன்று சுவாமிகளை தரிசிக்க நெரிசல் ஏற்படும் அளவுக்கு கூட்டம். கர்நாடகாவில் இருந்து ஒரு மடாதிபதி பெரிய வேனில் 20-25 பேரோடு வந்திருந்தார். அவரும் பந்தலில் நின்று கொண்டிருந்தார். அது தவிர சென்னை பல்கலைக்கழகத்தில் உயர் தத்துவ பேராசிரியரான டி.எம்.பி மகாதேவன் வந்திருந்தார். அவர் நின்று கொண்டிருந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் தத்துவம் படித்துக்கொண்டிருந்த கிரேக்க நாட்டு இளவரசி அவருடன் வந்திருந்தார். அவரும் நின்று கொண்டிருந்தார். மடத்து அலுவலர்கள் சுவாமிகளிடம் வந்திருந்தவர்கள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள். எல்லாவற்றையும் கேட்டு அசைவே இல்லாமல் அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள். ஒரு ஆர்எஸ்எஸ் காரர் வந்திருக்கிறார் என்று தகவல் மஹாஸ்வாமிகள் காதில் விழுந்தது. உடனே அவரை கூப்பிடு என்று சொன்ன ஸ்வாமிகள் அவர் வந்ததும் பக்கத்தில் அமரச் செய்து விட்டார். அந்த ஸ்வயம்சேவகருக்கு பிரமிப்பில் வியர்த்துக் கொட்டியது. இந்த நெரிசலை பார்த்துவிட்டு இன்று ஸ்வாமிகளை தரிசனம் செய்யக்கூட முடியாது என்று நினைத்திருந்த அவருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து இன்னொரு அதிர்ச்சி. ஸ்வாமிகள் அந்த ஸ்வயம்சேவகரிடம் வந்த விஷயத்தை கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கான நடவடிக்கை எடுக்க மடத்து அலுவலர்களை பணித்தார். இன்றைய தேதியில் கூட ஆர்எஸ்எஸின் அருமை பற்றி பல அரசியல் பிரமுகர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மகாஸ்வாமிகள் போன்ற ஒருவர் அதை புரிந்து கொண்டிருப்பதால் சங்கத்தின் இடையறாத தேசப் பணிக்கு முன்னுரிமை கொடுத்தது அந்த ஸ்வயம்சேவகருக்குப் புரிந்தது. ஸ்வாமிகளை நமஸ்கரித்து விடைபெற்றார்.

Post a Comment

0 Comments