மறக்காமலிருக்க மபொசி: சில குறிப்புகள்

மாநிலங்கள் மறுசீரமைப்புப் பணி 1950 களில் நடந்தது. அந்த காலகடத்தில் திருத்தணி தமிழ்நாடு மாநிலத்துடன் இணையக் காரணமாக இருந்தவர் ம பொ சி என்று புகழ்பெற்ற ம பொ சிவஞானம். கன்யாகுமரி மாவட்டப் பகுதிகள் தமிழகத்துடன் இணைவதில் சூட்சுமப் பங்காற்றியவர் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர். இந்த விஷயத்தில் திமுக பரிதாபமாக தோல்வி அடைந்தது. தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று திமுக வன்முறைப் போராட்டம் உள்பட கிளர்ச்சிகளில் இறங்கியது பயனற்றுப் போயிற்று. அந்தப் பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. அதாவது தமிழகத்தின் நாடி நரம்புகளில் தேசிய உள்ளம் கொண்டவர்கள் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதை திமுக கவனித்ததால் பிற்காலத்தில் ம பொ சிக்கு சட்ட மேலவைத் தலைவர் பதவி கொடுத்து தன் பக்கம் இழுத்துக் கொள்ளப் பார்த்தது.

ஆனாலும் மபொசி மபொசியாகவே இருந்தார். பாரதத்தின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகம் தேசிய உணர்வுடன் எப்படியெல்லாம் பங்காற்றியது என்று விளக்கி நூல் எழுதினார். வாழ்வின் கடைசி நாட்களில் சென்னை ஆழ்வார்பேட்டை ஆஸ்திக சமாஜம் அரங்கில் நடந்த அறுசமய மாநாட்டில் காஞ்சி மஹாஸ்வாமிகள் முன்னிலையில் பேசும்போது ம பொ சி "ஹிந்து சமய தொண்டனாக முழு நேரமும் பணியாற்றவே விரும்புகிறேன்" என்று சொன்னது அவரது மனதின் ஆழத்தில் இருந்த நாட்டத்தை நாட்டுக்கு எடுத்து இயம்பியது என்று சொல்லலாம்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ம பொ சியின் பள்ளிப் படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்தார். இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்தது. ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள். பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார். பின்னாளில் சிலம்புச் செல்வர் என்று புகழ் பெற்றார்.

(மபொசி பிறந்த நாள்: ஜூன் 26).

Post a Comment

0 Comments