நல்ல செய்தி - 9

தாயையும் சிசுவையும் காப்பாற்ற‌ மருத்துவர் முஹம்மது முக்ரம் செய்த அதிரடி காரியம், அபாரம் !

தெலங்கானா மாநிலம், மெஹபூபாபாத் மாவட்டத்தில் கோலாராம் கிராமத்தைச் சேர்ந்த கோயா பழங்குடி இளம்பெண் மஞ்சுளா கருத்தரித்து தாயாகும் நாளுக்காக காத்திருந்தார். மே12 அன்று பிரசவ வலியால் துடித்தார். கோலாராம் கிராமத்திலிருந்து 20கி.மீீ தூரம் கடந்தால் தான் ஆரம்ப சுகாதார நிலையம். கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், மருத்துவமனைக்கு எப்படி செல்வது, பிரசவ வலி திடீரென்று அதிகமாகியதால் கவலையுற்றார். சுகாதார பணியாளர் ஒருவர் மூலமாக நகரத்தில் உள்ள மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டதால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர் முஹம்மது முக்ரம், சுகாதார பணியாளருடன் தனது சொந்த காரில் மொத்தமாக் 70கி.மீ காடுகளுக்கிடையே பயணம் செய்து கங்காராம் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்திற்கு இரவு 9:30க்கு வந்து சேர்ந்தார். 28 வயது மஞ்சுளாவிற்கு பெண்குழந்தை பிறந்தது; ஆனால் குழந்தையின் உடலோ நீல நிறத்தில் இருந்தது. மருத்துவரும் உடனே விரைந்து செயல்பட்டு குழந்தையின் நுரையீரலிருந்து கழிவுகளை அகற்றி குழந்தையை காப்பாற்றினார்.

மெஹபூபாபாத் மாவட்ட ஆட்சியர் கௌதம், மருத்துவர் முஹம்மது முக்ரமின் அதிரடி சேவையை பாராட்டி சமூக வலைதளத்தில் தகவலை பதிவிட்டார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், அரசு சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு சூழ்நிலை, பல சிரமங்களை ஏற்படுத்தினாலும், மக்களுக்கு, அரசு மருத்துவ சுகாதார மையங்களின் மேல் நம்பிக்கையை அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அதிரடி ஹீரோ போல் களத்தில் இறங்கி தாயையும் குழந்தையையும் காப்பாற்றி, நம்பிக்கை நட்சத்திர மருத்துவராக ஜொலிக்கிறார் 35 வயது முஹம்மது முக்ரம்.

Post a Comment

0 Comments