நல்ல செய்தி - 5

மாதவன் விரும்பும் மக்கள் சேவை: திரிபுரா தொழிலாளி  கௌதம் தாஸின் அன்னதானம்!

கொரோனா சூழ்நிலையால் நாடெங்கிலும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நாட்டின் பல பகுதியினரும் உதவிவரும் வேளையில், கைவண்டி இழுத்து பிழைப்பு நடத்தும் கௌதம் தாஸ் செய்யும் பணி தனித்தன்மையானது. கௌதம்தாஸின் மனைவி சில வருஷங்களுக்கு முன் காலமாகிவிட, அவரது பிள்ளைகளும் தனியே வசிக்க, திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவிலிருந்து சற்று தொலைவில் உள்ள சாதுடில்லா கிராமத்தில் ஒரு குடிசையில் தனியாக வசித்து வருகிறார். ஒரு நாளைக்கு ரூ.200 வீதம் சம்பாதிக்கும் கௌதம் தாஸுக்கு பொருளாதார சூழ்நிலையும் சாதகமாக இல்லை. அப்படி இருந்தும் அவர் தன்னால் முடிந்ததை சேமித்து வந்தார். அவர் சேமிப்பு ஊரடங்கு சமயத்தில் ரூ.20,000 ஐ தொட்டது. தான் வாழும் பகுதியில் மக்கள், பசியோடும், பீதியோடும் இருப்பதைக் கண்ட கௌதம் தாஸ் தான் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்து செயல்பட ஆரம்பித்தார். 8,000 ரூபாய்க்கு அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களை வாங்கி பொட்டலமாக்கி தனது வண்டியில் வைத்து மக்களுக்கு பசியால் வாடும் குடும்பங்களுக்கு கொடுத்து வந்தார். அதை அவர் செல்பி (சுயஒளிப்படம்) எடுக்கவில்லை, சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை. தேவையுள்ளவர்களுக்கு அவர் கொடுத்துகொண்டே வந்தார். ஏப்ரல் முதல் வாரம் வரையில் அவரால் 160 குடும்பங்களுக்கு அரிசியும் பருப்பும் கொடுக்க முடிந்தது. ஊரடங்கு தொடரும் என அரசாங்கம் கணித்ததால், கௌதம் தாஸும் தன்னுடைய பங்கை தொடர முடிவு செய்திருக்கிறார். திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் மாநிலத்தின் தொழிலதிபர்களை, வியாபாரிகளை மக்களின் பசியாற்றும் உன்னதப் பணியில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். கௌதம் தாஸ் பெரிய வியாபாரியோ, தொழிலதிபரோ இல்லை, அவர் தொழிலாளி. ஆனால் மக்கள் சேவையை மாதவன் சேவை என்பதை கௌதம் தாஸ் செய்துகாட்டிவிட்டார்..

Post a Comment

0 Comments