நல்ல செய்தி - 4

பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர்
சென்னை திருவொற்றியூரில் நெகிழ்ச்சி சம்பவம் ; பகுதி மக்கள் பாராட்டு !

சென்னை, திருவொற்றியூர், உதயசூரியன் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி கலைவாணி, 24. நிறைமாத கர்ப்பிணியான அவர், நேற்று முன்தினம் இரவு, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.கணவர், ஆம்புலன்சிற்கு போன் செய்து, வலியால் துடித்த மனைவியுடன், வீட்டு வாசலில் காத்திருந்தார். அப்போது, அவ்வழியே கொரோனா ஊரடங்கு சூழ்நிலையில் ரோந்து சென்ற, திருவொற்றியூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி, நிலைமையை உணர்ந்து, வலியால் துடித்த பெண்ணை, போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.

கலைவாணி மற்றும் அவரது கணவரை, வாகனத்தில் அழைத்துச் சென்ற ஆய்வாளர், ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சேர்த்தார்.நள்ளிரவு, கலைவாணிக்கு, ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.நேற்று காலை, கலைவாணியின் தந்தையை பார்த்து, தாய், சேய் நலம் விசாரித்த ஆய்வாளர், பழங்கள் வாங்கிக் கொடுத்து, செலவுக்கு, 1,௦௦௦ ரூபாய் பணமும் வழங்கி, குழந்தையின் படத்தை மொபைலில், பார்த்து மகிழ்ந்தார்.பெண் ஆய்வாளரின் இந்த மனித நேய செயலை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


*சபாஷ் கண்ணகி !*

அரியலுார், தூப்பாபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 34 மாணவர், 28 மாணவியர் படிக்கின்றனர். இவர்களது பெற்றோர், பெரும்பாலும் விவசாயக் கூலி தொழிலாளர்கள். கொரோனா ஊரடங்கால், இவர்கள், வேலைக்கு செல்ல இயலாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி, பள்ளியில் படிக்கும், 62 மாணவர்களின் குடும்பத்தினருக்கும் தலா, 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்க முடிவு செய்தார்.இதன்படி, ஒவ்வொரு மாணவர்களின் வீடுகளுக்கும் நேரில் சென்று, பெற்றோரிடம் பணத்தை வழங்கி, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆசிரியையின் பொறுப்பு கல்வி கற்றுகொடுப்பது மட்டுமே என்ற நிலையோடு நின்று விடாமல், சமுதாய பொறுப்போடு ஏழை மாணவ மாணவிகளின் பெற்றோரின் பொருளாதார சுமையை குறைக்க முற்பட்ட திருமதி கண்ணகிக்கு ஒரு சபாஷ்.

Post a Comment

0 Comments