மகர ஜோதியை பாரதத்தின் மற்றொரு தீபாவளியாக மாற்றுவோம், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் .

பத்திரிகை செய்தி 

மகர ஜோதியை பாரதத்தின் மற்றொரு தீபாவளியாக மாற்றுவோம் . 

= சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் 

மும்பை, ஜன.5 
2020 மகரஜோதியிலிருந்து பாரதம் முழுவதும் ஒவ்வொரு மகரஜோதியையும் திருவிழாவாக கொண்டாடுவோம் என்றும், எல்லா மாநிலங்களிலும் அன்றைய தினம் மாலையில் பொது இடங்களிலும், வீடுகளிலும், கோவில்களிலும் தீபஜோதியை ஏற்றுவோம் என்றும் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் தேசீயபொதுச்செயலாளர் ஈரோடு ராஜன் கூறினார். இனி வரக்கூடிய மகரவிளக்கு தினத்தை பாரதம் முழுவதும் மற்றொரு தீபாவளித் திருவிழாவாக மாற்றுவதற்கு சமாஜம் பக்தர்களை ஊக்குவிக்கும். இந்த தகவலை மும்பை அனுமன் டெக்கடியிலுள்ள சிவகல்யாண் கேந்திரத்தில் வைத்து நடைபெற்ற சமாஜத்தின் மகாராஷ்ட்ரா மாநில செயற்குழு கூட்டத்தை துவக்கிவைத்து அவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டு கேரளாவின் வடக்கு எல்லையான மஞ்சேஸ்வரத்தில் துவங்கி தெற்கு கன்னியாகுமரி வரையிலான 860 கிலோமீட்டர் தூரம் சங்கிலித் தொடராக நடத்திய 'தீபஜோதி மாலை' கேரளா வரலாற்றிலேயே ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்கியது. ஒரு மீட்டரில் மூன்று அய்யப்ப பக்தர்களை நிற்க வைக்க வேண்டுமென்றும், அதன்படி இருபத்தி ஐந்து லட்சம் பக்தர்களை அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செய்யவேண்டுமென்றும் தீர்மானித்திருந்தோம். ஆனால், எம்பெருமான் அய்யப்பனுடைய ஆசியருளால் முப்பத்தி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்துகொண்டு, சாலையில் அதிசயம் நிகழ்த்தி, இந்த வரலாற்று நிகழ்வை சாதித்தார்கள். இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் அதன் நினைவாக மகரவிளக்கு தினத்தில் அய்யப்ப பக்தர்கள் தேசம் முழுவதும் பொது இடங்களில் தீபம் ஏற்றி கொண்டாடுவார்கள். 

கடந்த வருடம் உச்சநீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தியே தீருவோம் என்று கேரளா அரசு எடுத்துக் கொண்ட முயற்சி உண்மையானதாக இருந்தால், அதே உச்சநீதிமன்றம், அந்த தீர்ப்பையே மறுபரிசுசீலனை செய்யவேண்டுமென்று வேறொரு பெரிய அமர்விற்கு மாற்றி தீர்ப்பு வழங்கியதையும் ஏற்றுக்கொண்டு, அதையும் நடைமுறைப்படுத்தும் விதமாக, கேரளா அரசு அநியாயமாக அய்யப்ப பக்தர்கள் மீதும் ஹிந்து இயக்க தலைவர்கள் மீதும் போடப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொய்வழக்குகளையும் வாபஸ் வாங்கி இருக்க வேண்டாமா ? பாகுபாடு மனப்பான்மையுடன் மற்ற சமுதாயத்திலிருந்து ஹிந்து சமுதாயத்தை மட்டும் பிரித்து நோக்கும் தரமற்ற அணுகுமுறையை கேரளா அரசாங்கம் கைவிட வேண்டுமென்றும் ஈரோடு ராஜன் கேட்டுக்கொண்டார். 

மற்ற ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த வருடம் அய்யப்ப பக்தர்களுக்காக செய்யப்பட்ட அடிப்படை வசதிகள் கூட பற்றாக்குறையாக இருந்தது. அதற்க்கு காரணம் கேரளா அரசும்,காவல்துறையும், திருவிதாம்கூர் அறநிலை துறையும் அய்யப்ப பக்தர்களிடம் காட்டிய மெத்தனப்போக்கும் இயலாமையும் தான். 

மேலும் செயற்கையான போக்குவரத்து நெரிசலை உருவாக்கி, சபரிமலை பக்தர்களின் பயணத்திற்கு மிகவும் இடையூறும் தடையும் ஏற்படுத்தும் விதமாக சில காவல் துறை அதிகாரிகள் முயற்சித்ததாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வந்துள்ளன. மண்டலபூஜைக்கு முன்னதாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு இவர்களே காரணகர்த்தாக்கள் என்பது தெரிய வந்துள்ளது. தேவைக்கேற்ப பேருந்துகளை பம்பைக்கு அனுப்பாமல், நிலக்கல்லிலேயே நிறுத்திவைத்து, திட்டமிட்ட வகையில், தரிசனம் முடித்து திரும்பி வரும் அய்யப்ப பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கும் எண்ணத்துடன் கேரளா மாநில போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சில அதிகாரிகளும் நடந்துகொண்டதாக அறிய வருகின்றோம். 

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்க்கேற்ப, கேரளா அரசு தயார் செய்யும் "சபரிமலை நிர்வாக சட்டத்தின்" வரைவு நகலை மக்களின் பார்வைக்காக வெளியிட வேண்டும் எனவும், அய்யப்ப பக்தர்கள் மற்றும் ஆன்மீக குருமார்களின் கருத்துகளையும்,ஆலோசனைகளையும் கேட்டு, அதற்க்கேற்ற படி அச் சட்டத்தினை மாற்றியமைக்க அரசாங்கம் தயாராக வேண்டுமென்றும் ஈரோடு ராஜன் கேட்டுக் கொண்டார். 

இம்மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டோர்களை சமாஜத்தின் இணை அமைப்பு செயலாளர் உண்ணி பாத்திரமங்கலம் வரவேற்று பேசினார். மகாராஷ்ட்ரா மாநில தலைவர் கராத்தே முருகன் தலைமை உரை ஆற்றினார். துணைத் தலைவர்கள் பிரகாஷ் பை, சுமதி வேணுகோபால், பொதுச் செயலாளர் என்.முத்துக்கிருஷ்ணன், மக்கள்தொடர்ப்பு செயலாளர் ஷீலாஅய்யர் ஆகியோர் பேசினார். கூட்டத்தின் இறுதியில் மாநில செயலாளர் நந்தகுமார் நன்றியுரையாற்றினார். இக்கூட்டத்தில் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பத்து மாவட்டங்களிலிருந்து மாவட்ட பொறுப்பளர்களும் மற்றும் மாநில பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். 

இவண், 

கராத்தே ஆர் முருகன், 
மாநிலத் தலைவர் 
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் (SASS ) 
மகாராஷ்ட்ரா மாநிலம்.

Post a Comment

0 Comments