SETU-36

ஒரு மாவோயிஸ்ட், காங்கிரசின் சட்டமன்ற வேட்பாளர்!
புவனேஸ்வர் (ஒரிசா), மார்ச் 27

மாநிலத்தின் கடலோர மாவட்டமான நயாகரில் உள்ள ரணபூர் தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்த காங்கிரசுக்கு கிடைத்த ஆள் யார் தெரியுமா? ஒரு மாவோயிஸ்ட் பெண். பெயர் சுபஸ்ரீ பண்டா. மிலி என்றும் பெயர் கொண்ட இந்தப் பெண், மாநிலத்திலேயே படுபயங்கரமான மாவோயிஸ்ட்டான சவ்யசாச்சி பண்டாவின் மனைவி. 5ஆண்டுகளாக சிறையில் உள்ள சவ்யசாச்சி தலைக்கு ஐந்து லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. பல படுபயங்கரமான மாவோயிஸ்ட் வன்முறை சம்பவங்களை நடத்தி வந்த அந்த நபர் ஹிந்து துறவி நிஸ்சலானந்தாவின் கொலையிலும் தொடர்பு உள்ளவர் என்று தகவல். அந்தக் கொலையை அடுத்து கந்தமாலில் ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மோதலும் ஏற்பட்டது. 2012ல் இரண்டு இத்தாலிய சுற்றுலாப் பயணிகளைக் கடத்தினார் இந்த மாவோயிஸ்ட். நாடு நெடுகவும், சர்வதேச அளவிலும் பரபரப்பு ஏற்படக் காரணமான சம்பவம் அது. சுபஸ்ரீயும் மாவோயிஸ்டு தொடர்பு காரணமாக இரண்டு ஆண்டுக் காலம் சிறை வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டவர்தான். நூறாண்டு கடந்த காங்கிரஸ் கட்சிக்கு எப்படிப்பட்ட வேட்பாளர்கள்தான் கிடைக்கிறார்கள்!

ஒட்டகக் கடத்தல் பணம் பயங்கரவாதத்திற்கு ஊட்டம்!
ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), மார்ச் 27
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ராஜஸ்தானிலிருந்து பீகார், மேற்குவங்கம், அசாம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு கடத்திக் கொண்டு போகப்பட்ட 700 ஒட்டகங்கள் கசப்புக்காரர்களின் கையில் சிக்காமல் மீட்கப்பட்டு மீண்டும் ராஜஸ்தான் கொண்டுவரப்பட்டு அவற்றின் சொந்த மண்ணில் சுதந்திரமாகத் திரிய விடப்பட்டன என்கிறார்கள் இந்திய பிராணி நல போர்டின் அதிகாரிகள். “பாலைவனப் பிரதேசத்தில் திரிந்துகொண்டிருந்த ஒட்டகங்களை அவற்றின் மாமிசத்திற்காக கடத்திக் கொண்டு போய் விற்பனை செய்த சம்பவங்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன. இது ஒட்டகங்களை மிகவும் நேசிக்கும் ராஜஸ்தானியப் பண்பாட்டிற்கு நேர் விரோதம். சட்டவிரோத ஒட்டக விற்பனை பங்களாதேஷ் எல்லையை ஒட்டிய மேற்கு வங்க பகுதியில் அதிகம் நடைபெறுகிறது. அங்கிருந்து நமது ஒட்டகங்கள் கசாப்புக்காக பங்களாதேஷிற்கு அனுப்பப்படுகின்றன” என்கிறார் போர்டின் கௌரவ அதிகாரி சுதர்சன் கவுசிக். ஒட்டகக் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு போகிறது. கோடிக்கணக்கில் கருப்பு பணம் உருவாவதற்கும் ஒட்டகக் கடத்தல் காரணம் ஆகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவிக்கிறார். மாபியா கும்பல் ராஜஸ்தானில் இருந்து ஒரு ஒட்டகத்தை 10,000 ரூபாய்க்கு வாங்கி மனிதத் தன்மையற்ற முறையில் 14, 15 ஒட்டகங்களை ஒரே லாரியில் அடைத்து கொண்டுபோய் கசாப்புக்காரரிடம் தலா ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கையில் காசில்லாமல், ஆயுதமில்லாமல் போன பயங்கரவாதிகள் சீனாவுக்கு ஓட்டம்!
குவாஹாட்டி (அஸ்ஸாம்), மார்ச் 27

வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. மறுபுறம் பாரத அரசு அருணாச்சலப் பிரதேச காவல் துறைக்குக் கூடுதல் ஆயுதங்கள் வழங்கி வருகிறது. நோக்கம், மூன்று மாவட்டங்கள் வழியே இன்னும் ஆயுதங்கள் வந்து கொண்டிருக்கின்றன, அதை தடுக்க வேண்டும் என்பதுதான். அரசின் நடவடிக்கைகளால் வடகிழக்கில் உள்ள எல்லா பயங்கரவாத, பிரிவினைவாத குழுக்களுக்கும் பணவரவு ஒடுக்கப்பட்டுவிட்டது. எனவே முன்பு போல பிரம்மாண்டமான அளவில் ஆயுதங்களை வாங்கிக் குவிக்க அவர்களால் முடியவில்லை. அது மட்டுமல்ல, முன்பு பூட்டானிலும் பங்களாதேஷிலும் பாசறைகளை அமைத்துக் கொண்டு செயல்பட்ட அந்த குழுக்கள் அங்கிருந்து துரத்தப்பட்டு விட்டன. கடைசியாக மியான்மர் எல்லைக்குள் இருந்த ஒரு சில பயங்கரவாத குழுக்களும் அந்த நாட்டு ராணுவத்தால் துரத்தப்பட்டுவிட்டன. பணமும் இழந்து, ஆயுதம் இல்லாமல் பாசறைகளும் பறிபோய் பயங்கரவாத குழுக்களின் தலைவர்கள் சீனாவுக்கு ஓட்டம் எடுக்கிறார்கள் என்று பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அவர்களை ஒப்படைக்குமாறு பாரதம் கேட்டதை சீனா காதில் வாங்கிகொள்ளாமல் இருந்து வருகிறது. பயங்கரவாத்த்திற்கு எதிரான போரில் சீனாவின் யோக்கியதை அப்படி.

வாழ்க குஷ்பூ, வளர்க சுமன்!
இந்தூர் (மத்தியப் பிரதேசம்), மார்ச் 27

தேர்தல் செய்திகள் மீடியாவை வியாபிக்கிற இந்த கட்டத்தில் இரண்டு போலிஸ் சப் இன்ஸ்பெக்டர்களின் மனிதாபிமான செயல் கவனத்திற்கு வந்துள்ளது. மத்திய பிரதேசம் இந்தூர் மாநகரின் ஹீராநகர் காவல் நிலைய வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் வறுமை காரணமாக ஒரு பெண் மாற்றுத் திறனாளியான தன் 75 வயது மாமியாரை தெருவில் அனாதையாக விட்டு விட்டுப் போய்விட்டார். குஷ்பூ பர்மார், சுமன் திவாரி என்ற இந்த இரு காவல்துறை அதிகாரிகளின் கண்ணில் பட்டார் அந்த மூதாட்டி. இருவரும் அவருக்கு உடனடியாக உணவு வரவழைத்து ஊட்டினார்கள். மிகவும் சிரமப்பட்டு முக்கால் மணி நேரம் தேடி அந்த மருமகளைக் கண்டுபிடித்தார்கள். அந்த ஏழைப் பெண்ணுக்கு உரிய ஆலோசனைகள் கூறி மருமகளையும் மாமியாரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த அதிகாரிகளின் மனிதாபிமான செயலைக் கேள்விப்பட்டு மாநில முதல்வர் ட்விட்டரில் பாராட்டினார்.

Post a Comment

0 Comments