SETU-25

தர்ம யுத்தத்தை களங்கப்படுத்த தலைகீழாக நின்று பார்க்கிறார்கள்!

கோழிக்கோடு (கேரளா) ஜனவரி 8
மாநில கம்யூனிஸ்ட் அரசின் இந்து விரோதப் போக்கை எதிர்த்து சபரிமலை போராட்டக் குழுவினர் ஜனவரி 3 அன்று அறிவித்திருந்த கேரளா முழு அடைப்பு சமயத்தில் கோழிக்கோடு மசூதி ஒன்றை தாக்கியதற்காக சி பி எம் கட்சி கிளை செயலாளரும் டிஒய்எப்ஐ மண்டல கமிட்டி உறுப்பினருமான அதுல் தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கம்யூனிஸ்ட் தலைவரும் டிஒய்எப்ஐ காரர்களும் மசூதியை தாக்கிய காட்சிகள் மசூதியின் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவில் தெரிந்தது. மதவெறி அமைப்புகளுடனும் பயங்கரவாத அமைப்புகளுடனும் சேர்ந்து சிபிஎம் கட்சியினர் மாநில கடையடைப்பு நாளில் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினார்கள். மத மோதல் போக்கை உருவாக்கி ஹிந்து அமைப்புகள் மீது பழி சுமத்துவது இந்த கும்பல்களின் நோக்கம் என்பது தெளிவு. மதங்களிடையே பதற்றத்தை தூண்டியது உள்பட பல குற்றங்கள் புரிந்ததாக அதுல் தாஸ் மீது வழக்கு பதிவாகியுள்ளது. முன்னதாக டிசம்பர் 23 அன்று கோட்டயம் அருகே உள்ள பாதமுட்டம் என்ற ஊரில் உள்ள சர்ச் ஒன்றில் சிபிஎம் - டிஒய்எப்ஐ குண்டர்கள் வன்முறைத் தாக்குதல் நடத்தியதில் பெண்களும் குழந்தைகளுமாக நிறைய பேர் படுகாயம் அடைந்தார்கள். ஐந்து கிறிஸ்தவ குடும்பங்கள் ஒரு வார காலம் பயத்தோடு சர்ச்சிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஆறு சிபிஎம் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப் பட்டு விட்டார்கள் தாக்கப்பட்டவர்கள் மதம் மாறுவதற்கு முன் பட்டியல் சமூகத்தார். எனவே கேரளத்தின் மேல்தட்டு பாதிரிகள் இதைப் பற்றி கண்டும் காணாதவர்களாக இருந்துவிட்டார்கள். மாநிலத்தில் சபரிமலை போராட்டக்குழு கிளர்ச்சி நடத்தி வரும் வேளையில் இது போன்ற தாக்குதல்கள் ஹிந்து சமுதாயத்தின் மீது பழி சுமத்தும் நோக்கம் கொண்டது என்பதும் தெளிவாகியுள்ளது.

அதிர்ச்சி தருகிறது அந்தமானில் அன்னியர் நடமாட்டம்
போர்ட் ப்ளேர் (அந்தமான்-நிகோபார்), ஜனவரி 8
அந்தமான்-நிக்கோபார் தீவுப் பகுதியில் உள்ள சென்டினல் தீவில் மதமாற்றம் நடத்த ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்கப் பாதிரி போன சம்பவம் நினைவிருக்கலாம். தடை செய்யப்பட்ட அந்த தீவுக்கு சென்று அங்கு சாவ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தமானில் மதமாற்றம் தொடர்ந்து நடப்பதை மட்டுமல்லாமல் தேசத்தின் பாதுகாப்புக்கும் ஆபத்து என்பதை சுட்டிக்காட்டுகிறது. தேசத்தின் சட்டங்களை மீறி பல முறை அந்த தீவுக்கு அமரிக்கப் பாதிரி போக முடிந்தது என்றால் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் கிறிஸ்தவர்கள் என்று அந்தமானில் உள்ள ஒரு ஆன்மிகப் பெரியவர் தெரிவிக்கிறார். அந்தமான் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புச் செயலர் பார்த்தோ மண்டல், இதேபோல நான்கு ஆண்டுகளுக்கு முன் 3 பிரெஞ்சுக்காரர்கள் தேச சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட பகுதியான ஜராவா தீவுக்கு சென்று அங்குள்ள பழங்குடி மக்களை காட்சிப் பொருள் போல புகைப்படம், வீடியோ எடுத்து அதை யூடியூபில் வெளியிட்ட பிறகுதான் அன்னியர்கள் தீவுக்கு வந்து சென்றது அரசு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது என்கிறார். இது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து. அந்தமானில் பழங்குடி மக்களுக்கு சேவை செய்வதில் ஈடுபட்டுள்ள பல அமைப்புகள் மத மாற்றத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வனவாசி கல்யாண் ஆசிரம் அமைப்பு..

நாம் யார் என்பதை இவர்கள் சொல்லித் தருகிறார்கள்
ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), ஜனவரி 8

                                           
ஜனவரி 27 அன்று ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வம்சாவளி எழுதுவோர் பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பின் செயற்குழு கூட இருக்கிறது. 2007 குரு பூர்ணிமா அன்று இந்த அமைப்பை நிறுவியவர் ராம்பிரசாத். இந்த ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் தர்ம ஜாகரண் பணி செய்து வந்தவர். ஒருநாள் முஸ்லிம் நண்பர் ஒருவர் அழைத்ததன் பேரில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை அடுத்த குல்பாடா என்ற கிராமத்தில் உள்ள மசூதியில் ஒரு கூட்டத்திற்குப் போனார். அங்கு பல முஸ்லிம்கள் தாங்கள் எந்த தலைமுறையில் முஸ்லிமாக மாறினோம் என்று தங்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்கள். எப்படி தெரியும் என்று ராம்பிரசாத் கேட்டார். வம்சாவளி எழுதும் கலைஞர்கள் இன்றும் தங்கள் குடும்பத்திற்கு வந்து கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். அந்த வட்டாரத்தில் அவர்களை ஜாகா என்று அழைக்கிறார்கள். ராம்பிரசாத் பல ஜாகாக்கள சந்தித்தார். அப்போது அந்த கலைஞர்களின் நிலை பரிதாபகரமாக இருந்ததை கண்டார். வம்சாவளி எழுதும் கலையும் நசித்து வருவதை உணர்ந்தார். அந்த கலையை மீட்டு அந்த கலைஞர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படச் செய்ய வம்சாவளி எழுதுவோர் பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பை உருவாக்கினர். தற்போது 5,200 வம்சாவளி எழுதும் கலைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்தி ருக்கிறார்கள். யாருக்காவது தங்கள் முன்னோர் யார், தாங்கள் ஹிந்து அல்ல என்றால் முன்னர் எந்த மதத்தில் இருந்தோம், எப்போது மதமாற்றம் செய்யப்பட்டோம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வம்சாவளி எழுதும் கலைஞர்களை அணுகலாம். அந்த அமைப்பின் தலைமையகம் ஜெய்ப்பூரில் உள்ளது.

வாட்ஸப் வழியே வேளாண் சந்தை விளம்பரம்!
ராஞ்சி ( ஜார்க்கண்ட்), ஜனவரி 8

இப்போதெல்லாம் மக்கள் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை காட்டுவதால் இயற்கை வேளாண்மையில் விளைந்த பண்டங்களை நாடுவது அதிகரித்திருக்கிறது. ஜார்க்கண்ட் மக்கள் காங்கே அணை, மொராபாதி ஆகிய இடங்களில் வாரம் மூன்று முறை கூடும் இயற்கை வேளாண் காய்கறி சந்தைக்கு போவதை வழக்கமாகக் கொண்டு விட்டார்கள். அந்த இடங்களில் பல இயற்கை விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை விற்பனை செய்ய ஒன்று கூடுகிறார்கள். இந்த விவசாயிகளுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கிறது. காய்கறி முதலியவையும் ஒரு சில மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து விடுகிறது. இந்த விவசாயிகள் பாரம்பரிய விதைகளையே விதைக்கிறார்கள். பசுஞ்சாணமே இவர்களது வயல்களில் உரம். அதனால் விளையும் காய்கறி விஷம் இல்லாமல் ஊட்டம் மிகுந்ததாக உள்ளது. காய்கறி அறுவடை என்றைக்கு நடைபெறும் என்பதை விவசாயிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துவிடுகிறார்கள். அன்றைய தினம் சந்தைக்கு வாடிக்கையாளர்கள் வந்து காய்கறி வாங்கிச் செல்கிறார்கள் இவ்வாறு தகவல் பரப்ப இவர்கள் வாட்ஸப் குரூப் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை வேளாண்மையில் விளைந்த காய்கறிகள் அதிக நாள் கெடாமல் இருக்கின்றன என்பதே வாடிக்கை யாளர்களின் அனுபவம்.

Post a Comment

0 Comments