SETU-24

“அரசு இந்த ஆட்சிக் காலத்திலேயே ராமர் கோயில் கட்ட வழி செய்யட்டும்”: ஆர்.எஸ்.எஸ்
புதுடில்லி (டில்லி), ஜனவரி 3

ஆர்.எஸ்.எஸ் அகில பாரத இணை பொது செயலர் தத்தாத்ரேய ஹொசபளே வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்: “பாரதப் பிரதமர் (2019 ஜனவரி 1 அன்று ANI செய்தி ஸ்தாபனத்திற்கு அளித்த பேட்டியில்) வெளியிட்டுள்ள கருத்து ராமர் கோவில் கட்டும் திசையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று நாங்கள் கருதுகிறோம். அயோத்தியில் பிரம்மாண்டமான ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவோம் என்று பிரதமர் மீண்டும் உறுதி கூறியிருப்பது, 1989 ல் பாலம்பூரில் பா.ஜ.க. நிறைவேற்றிய தீர்மானத்தின் படி அமைந்துள்ளது. இரு சமூகங்களும் கலந்துரை யாடுவதன் மூலமோ, தேவையான சட்டமியற்ற வழிவகை செய்வதன் மூலமோ அயோத்தி ராமஜன்ம பூமியில் மாபெரும் ராமர் கோவில் கட்டுவோம் என்று அந்த தீர்மானத்தில் பாஜக சொல்லியிருந்தது. ஸ்ரீ நரேந்திர மோடி தலைமையில் 2014 ல் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் கூட, அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கட்டுவதற்கு அனுகூலமான, அரசியல் சாஸன வரம்பிற்குட்பட்ட சாத்தியங்கள் அனைத்தையும் ஆய்வு செய்வோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. பாரத மக்கள் இதில் முழு நம்பிக்கை வைத்து பாஜகவிற்கு முழு அளவில் ஆதரவு கொடுத்தார்கள். இந்த ஆட்சிக்காலத்தின் போதே அந்த வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்ற வேண்டுமென பாரத மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” — இவ்வாறு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.

“இப்போதே சட்டம் இயற்றுவதுதான் வழி”: விஸ்வ ஹிந்து பரிஷத்
புதுடில்லி (டில்லி), ஜனவரி 3
ராமர் கோயில் போராட்டத்தை முன் நின்று நடத்தி வரும் விஸ்வ ஹிந்து பரிஷத் பின் வரும் அறிக்கையை வெளி யிட்டுள்ளது “அயோத்தி ராம ஜன்மபூமி பற்றி பிரதமர் தெரிவித்துள்ள கருத்தை அறிந்தோம். ஜன்மபூமி விவகாரம் 69 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையாக இருந்து வருகிறது. மேல்முறையீடுகள் 2011 முதல் நிலுவையில் இருந்து வருகின்றன. இது அதீதமான தாமதம். வழக்கு 2018 அக்டோபர் 29 அன்று எடுத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் அதை விசாரிக்க முறையான அமர்வு (பெஞ்ச்) அதுவரை அமைக்கப்படவில்லை. எனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அனுப்பப்பட்டது. விரைவில் வழக்கை முடிக்க வேண்டும் என்ற மனு அங்கே ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. மாறாக “உசிதமானஅமர்வு முன் விசாரிக்க தேதி குறிப்பதற்காக” 2019 ஜனவரி முதல் வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜனவரி 4 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படுமாம் -- இதுவும் “உசிதமான அமர்வின்”முன் அல்ல; தலைமை நீதிபதி முன் தான். அன்றைய தினத்துக்கான உச்சநீதிமன்ற அலுவலக குறிப்பில், இரண்டு மேல் மனுதாரர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று உள்ளது. உசிதமான அமர்வும் நியமிக்கப்பட வில்லை, சில மேல் முறையீடுகளில் ஆவணங்களும் சமர்ப்பிக்கப் படவில்லை. எனவே விசாரணை தொடங்க வெகு காலம் ஆகலாம். ஒட்டுமொத்த நிலவரத்தையும் பரிசீலித்த பின் பின்வருமாறு எமது கருத்தை மீண்டும் பதிவு செய்கிறோம்: “நீதிமன்றம் தீர்வு காணும் என்று சொல்லி ஹிந்துக்கள் நீண்ட நெடுங்காலம் காத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் எழுப்ப இப்போதே சட்டம் இயற்றுவதுதான் சரியான வழி. இந்த கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் இது விஷயமாக அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஜனவரி 31 அன்று பிரயாகையில் நடைபெறும் கும்ப மேளாவில் கூட இருக்கிற தர்ம சம்ஸத் (துறவியர் பேரவை) மாநாட்டின் போது துறவிகள் தீர்மானிப்பார்கள்.” இவ்வாறு விஸ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் ஆலோக் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

“சாதி முறை சமுதாய விரோதம்”:டாக்டர் கிருஷ்ண கோபால்
அயோத்தி (உத்தரப் பிரதேசம்), ஜனவரி 3

“பிச்சைக்காரருக்கு தர்மம் செய்து விட்டு அவரை கும்பிடுகிறோம். காரணம் கடவுள் அவருக்குள்ளும் இருக்கிறார். சீடனை குரு கடவுளாக பார்க்கிறார். வீட்டில் தாய் தந்தையை பிள்ளைகள் கடவுளாகப் பார்ப்பது போல பெற்றோர் பிள்ளைகளை தெய்வாம்சம் உள்ளவர்களாக பார்க்கிறார்கள். பறவை முதல் புழு பூச்சி வரை எல்லாவற்றிலும் கடவுள் இருப்பதால் ஏற்றத்தாழ்வு ஏன்? தீண்டாமை ஏன்? புத்தர் முதல் கபீர்தாசர் வரை எல்லா பெரியவர்களும் சாதிமுறையை நிராகரித்திருக்கிறார்கள் அதாவது ஜாதி முறை சமுதாய விரோதம். மதன்மோகன் மாளவியா ஒருமுறை பிஹார் சென்றிருந்தார். அங்கே மாணவர் ஜெகஜீவன்ராம் காசி ஹிந்து பல்கலைக்கழகம் பற்றி கேட்டார். எல்லோரும் அங்கே படிக்கலாம் என்று மாளவியா பதிலளித்தார். பிறகு ஜெகஜீவன்ராம் காசி ஹிந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். மாணவர் விடுதியில் அவர் தனது பாத்திரங்களை கழுவி தனியாக வைக்க வேண்டியிருந்தது. இந்த விஷயம் மாளவியாவுக்குத் தெரிய வந்தது. மாளவியா நேரே மாணவர் விடுதிக்கு சென்று ஜெகஜீவன்ராம் சாப்பிட்ட பின் அவரது எச்சில் தட்டைத் துலக்கி வைத்தார். நான் அழைத்து இங்கு வந்து படிக்கிற மாணவர் இவர். தினமும் இவரது எச்சில் தட்டை நான்தான் துலக்கி வைப்பேன் என்று மாளவியா அறிவித்தார். சிப்பந்திகள் மன்னிப்புக் கோரினார்கள்.” -- சமீபத்தில் அயோத்தியில் நடந்த ’சமரசதா கும்ப’ நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத இணை பொது செயலர் டாக்டர் கிருஷ்ண கோபால் வெளியிட்ட கருத்துக்கள் இவை.

“மகளிர் அதிகாரமளிப்பு காலத்தின் கட்டாயம்”: மோகன் பாகவத்
நாகபுரி (மகாராஷ்ட்ரா), ஜனவரி 3

“பெண்ணை கட்டிப் போட்டிருக்கும் விலங்குகளில் இருந்து விடு வித்தால்தான் நாடு உண்மையிலேயே முன்னேறும். மகளிர் கையில் முன்னேற்றத்துக்கான அசாதாரண சக்தி உள்ளது பெண்ணின் அறிவாற்றலையும் திறனையும் கண்டறிய வேண்டுமானால் பெண்ணைப் பிணைத்த தளைகளை களைய வேண்டும் . நமது தொன்மை நாகரிகத்தில் பெண் சுதந்திரமாகத்தான் இருந்தாள். பெண்ணுக்கு தடை ஏதும் இருக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்கள் காரணமாக பெண் கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்பட்டாள். கெடுபிடிகளில் இருந்து பெண்ணை விடுவிப்பது முற்றிலும் அவசியம். பெண்ணுக்கு அதிகாரம் அளிப்பது காலத்தின் கட்டாயம்.” நாகபுரி நகரின் சீதாபர்டி பகுதியில் சேவாசதன் சார்பில் ரமாராய் ரானடே நினைவு கல்வி விழிப்புணர்வு பணிக்காக பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்த கருத்து இது.

Post a Comment

0 Comments