SETU-22

விவேகானந்தரை கௌரவிக்கிறது ஜார்க்கண்ட்
ராஞ்சி (ஜார்க்கண்ட்) டிசம்பர் 30
தேசத்திலேயே மிக உயரமான விவேகானந்தர் சிலைகளில் ஒன்று ராஞ்சி நகரில் நிறுவப்படஇருக்கிறது. நகரின் மையமான பகுதியில் உள்ள படா தாலாப் எனப்படும் ஏரியில் சிலை நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். விவேகானந்தர் ஜெயந்தி நாளான ஜனவரி 12 அன்று 33 அடி உயரமுள்ள அந்த ஆளுயர வெண்கலச் சிலை திறக்கப்படும். சிலையின் உயரம் பீடம் உள்பட 55 அடி. விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. 2016 ஜனவரியில் மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ் இந்த சிலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பெருமளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் திட்டமாகவும் இது அமையும். (உலகம் முழுவதும் ஹிந்துத்துவ கருத்தை பரப்பிய. விவேகானந்தர் சிறு வயதில் நரேந்திரனாக ராய்ப்பூரில் (சத்தீஸ்கர் மாநிலம்) தங்கிப் படிக்கையில் நீச்சலடித்து மகிழ்ந்த பூடா தாலாப் என்ற இன்னொரு ஏரியின் கரையில் அமர்ந்த கோலத்தில் ஒரு விவேகானந்தர் சிலையை முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 2005ல் திறந்து வைத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்).

சுற்றுலா போங்க, சுகமாக வாங்க!
ஆமதாபாத் (குஜராத்), டிசம்பர் 31
கல்விச் சுற்றுலா விதிமுறைகளை தொகுத்தளிக்கிறது ஆமதாபாத் மாவட்ட கல்வி அலுவலர் (DEO), நகரில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும்அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ** பயணத்தின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் பட்டியலை முன்கூட்டியே சமர்ப்பிக்கவும். ** அரசாங்க வாகனத்திற்கே முன்னுரிமை. ** ஆர்.டி.ஓ. அங்கீகரித்த எண்ணை விட ஒரு தனிநபர் கூட (மாணவரோ ஆசிரியரோ) வாகனத்தில் இருக்கக்கூடாது. ** டி.இ.ஓ. அலுவலகத்திலிருந்து பயணத்திற்கான அனுமதியைப் பெற வேண்டும். ** மாணவர்களின் பெற்றோ ரிடமிருந்து ஒப்புதல் கடிதம் அவசியம். ** இரவுப் பயணம் கூடாது. ** ஆபத்தான இடத்திற்கு மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது. ** இடங்களை தேர்ந்தெடுத்தல், பாதை, கால அட்ட வணை, செலவு ஆகியவற்றை ஒரு குழு தீர்மானிக்க வேண்டும். 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் கல்விச் சுற்றுலாவில் உடன் செல்ல வேண்டும். (விபத்து போன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்க இது உதவும் என்று மாநில அரசு கருதுகிறது).

துதிபாடிய குருநாதர்!
கங்காசாகர் (மேற்கு வங்கம்), டிசம்பர் 31
கங்காசாகர் திருத்தலத்தின் கபில் முனி ஆசிரம பிரதான குரு ஞான் தாஸ் மஹந்த், மமதா பானர்ஜியை வரிந்து கட்டிக் கொண்டு புகழ்ந்து தள்ளினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மமதாவால்தான் முடியுமென மஹந்த் சொன்ன போது பக்கத்தில் இருந்த மமதா சங்கடப்பட்டு நெளிந்தாரா என்பது தெளிவாகவில்லை. ஆனால் ’ராமர் கோயில் கட்டுபவருக்கே ஹிந்து ஓட்டு’ என்ற கருத்து எவ்வளவு தூரம் பரவி வருகிறது என்பது தெளிவாகியது. கங்கை கடலில் சங்கமிக்கும் கங்காசாகருக்கு (மேற்கு வங்கம்) மகர சங்கராந்தி (தைப் பொங்கல்) அன்று புனித நீராட ‘லட்சோப லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகளை பார்வையிட முதலமைச்சர் மமதா பானர்ஜி அங்கே போனபோது தான் இந்த சம்பவம் நடந்த்து.

தேஹதானம் செய்த முஸ்லிம் குடும்பம்
கிரேட்டர் நோய்டா (உ.பி), டிசம்பர் 31

பாரதத் தலை நகரில் செயல்படும் ’ததீசி தேஹதான் சமிதி’ முயற்சியால், கிரேட்டர் நோய்டா (உ.பி) பகுதிவாழ் மயூர் பமானி, அண்மையில் காலமான தன் மாமா முகமது அலி இஸ்மாயில் முல்கியானியின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தேஹதானமாக அளித்தார். “கடந்த 21 ஆண்டுகளாக சமிதி செயல்பட்டு வருகிறது, ஆனால் முஸ்லிம் குடும்பம் தேஹதானம் செய்வது இதுவே முதன்முறை” என்கிறார் சமிதி பொறுப்பாளர் சுதீர் குப்தா. சமிதியின் தூண்டுதலால்இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் உடல் நன்கொடை கொடுக்க உறுதிமொழி எடுத்துள்ளதாகவும் 885 கண் தானங்களும் 232 தேஹதானங்களும் நடைபெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சமிதி மூலம் எட்டு சரும தானங்களும் நடந்துள்ளன. 1943 ல் பிறந்த முல்கியானி மும்பையில் கல்லூரி ஒன்றில் எழுத்தராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அவரது நினைவுக்கு சமிதி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments