SETU-18

மாவோயிஸ்ட்-மார்க்சிஸ்ட் சதி முறியடிப்பு
பம்பை (கேரளா) டிசம்பர் 24
ஞாயிறு (டிசம்பர் 23) இரவில் இரண்டு பெண்கள் சபரிமலை அருகே சந்தேகத்துக்கிடமான விதத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் பின்னணியை விசாரித்து விட்டு ஊருக்கு திரும்பிப் போய்விடும்படி புத்திமதி சொல்லி அனுப்பினார்கள். காரணம் அதற்கு முன் தினம் கேரள கம்யூனிஸ்ட் அரசின் காவல் துறைக்குக் கிடைத்த படிப்பினை. சனிக்கிழமை நள்ளிரவில், தொன்றுதொட்டு கேரளாவில் உள்ள சபரிமலை சன்னிதானத்தில் குறிப்பிட்ட வயது பெண்கள் வரக்கூடாது என்ற மரபை உடைக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டை சேர்ந்த செல்வி உள்ளிட்ட 11 பெண் மாவோயிஸ்டுகள் மனிதி என்ற அமைப்பின் பெயருடன் கேரத்திற்குள் புகுந்தார்கள். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் போலீஸ் பாதுகாப்புடன் பம்பை வரை செல்ல முடிந்தாலும் இந்த கும்பல் வரும் செய்தி பரவி இருந்ததால் கேரளா முழுதும் ஐயப்ப பக்தர்கள் விழிப்புடன் இருந்து தடுத்ததால் ஹிந்து விரோதிகளின் பாச்சா பலிக்கவில்லை. சன்னிதானம் வரை சென்று தரிசனம் செய்யாமல் திரும்பப் போவதில்லை என்று செல்வி பல்லவி பாட, இருமுடி எங்கே என்று யாரோ ஞாபகப்படுத்த, திடீர் ஞானம் வந்து அங்கே ஒரு பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தில் குருசாமி இல்லாமல், மந்திரம் இல்லாமல், விரதம் இல்லாமல் தாங்களே இருமுடி என்று ஒன்றை எடுத்துக்கொண்டது அந்த மாவோயிஸ்ட் கும்பல். இதற்கிடையில் ஐயப்ப பக்தர்களின் ஆவேசம் விஸ்வரூபமெடுத்தது. போலீஸ்காரர்கள் உடன்வர செல்வி அண்டு கம்பெனி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊர் திரும்பியது. மார்க்சிஸ்டு முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இந்த விஷயங்களில் அவருக்கு அறிவுரை வழங்கும் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் ஜெயராஜனுக்கும் முகத்தில் கரி.

ராமஜன்ம பூமியில் தொழுகை? நீதிமன்றம் நிராகரித்தது
லக்னோ (உத்தரப் பிரதேசம்) டிசம்பர் 24
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான கோயில் கட்டுவதற்கு நாடு தழுவிய அளவில் பேரணிகள் நடத்தி ராம பக்தர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த வேளையில் அந்த இடத்தில் தொழுகை நடத்த அனுமதி கோரி மனு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் தாக்கல் ஆனது. நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன் மனுதாரர் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் கட்டவேண்டும் என்றும் ஆணையிட்டது நீதிமன்றம். தனக்கு விளம்பரம் தேடி போடப்பட்ட வழக்கு இது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மனு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளது என்றும் நீதிபதி கூறினார். அல் ரஹ்மான் டிரஸ்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அது. மனுதாரரிடம் இருந்து அபராதத் தொகையை அயோத்தி மாவட்ட நீதிபதி கண்டிப்பாக வசூல் செய்து விட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராய்பரேலியில் 2017ல் பதிவு செய்யப்பட்ட அல் ரஹ்மான் டிரஸ்ட், “முஸ்லிம்களின் கல்விக்காகவும் இஸ்லாத்தை பரப்புவதற்காகவும்” செயல்படுகிறது. மத்திய மாநில அரசுகளையும் அயோத்தி மாவட்ட நிர்வாகத்தையும் இந்த மனு எதிர்தரப்பாக சேர்த்திருந்தது. மாநில அரசு சார்பில் மனுதாரர் கோரிக்கை எதிர்க்கப்பட்டது. அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இது போன்ற ஒரு மனு தாக்கல் செய்யப்பட முடியாது என மாநில அரசு சுட்டிக்காட்டியது.

மாற்றும் திறனாளிகள் மத்தியிலே...!
மும்பை (மகாராஷ்ட்ரா) டிசம்பர் 24

மாற்றுத் திறனாளி மகனுக்கு பணிவிடை செய்தபோது நேர்ந்த சிரமங்களை எல்லாம் தாண்டி நூதன் - வினாயக் குல்குலே தம்பதி ’நூதன் குல்குலே பவுண்டேஷன்’ நிறுவினார்கள். மும்பையில் செயல்படும் அந்த பவுண்டேஷன், ஆண்டு தோறும் வெற்றிகரமாக வாழ்க்கையை அமைத்துக்கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் மாற்றுத் திறனாளி களுக்காக சேவை செய்யும் அன்பர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டி வருகிறது. மாற்றுத் திறனாளி தாய் சேய், மாற்றுத் திறனாளி குடும்பம், மரணத்துக்குப் பிந்தைய கௌரவம் என பல பிரிவுகளாக பரிசு வழங்கப்படுகிறது. அண்மையில் மும்பையில் அதன் பரிசளிப்பு விழாவில் ஆர்எஸ்எஸ் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாற்றுத் திறனாளிகளுக்குப் பரிசு வழங்கினார். அப்போது அவர் கூறிய கருத்து: “அறம் ( தர்மம்) எல்லோரையும் இணைப்பது. எல்லோரையும் உயர்த்துவது. அமங்கலமான எதையும் செய்யாமல் வாழ்வில் சுகத்தை வாரி வழங்குவது தர்மம். ராஜ்கோட் நகரில் துறவியர்கள் நிறைந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் இங்கு வருகிறேன். அந்த நிகழ்ச்சியின் போது எனக்கு ஏற்பட்ட அதே உணர்வு இங்கும் ஏற்படுகிறது. என் கண்முன்னே சிரமங்களை மீறி முன்னேறி தங்களை மேம்படுத்திக் கொண்ட அன்பர்கள் அமர்ந்தி ருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களை உயர்த்தும் தர்மத்தை கடைப்பிடிப்பதுடன் சமுதாயத்தில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்யும் சிரமமும் மேற்கொண்டிருக்கிறார்கள். “தமஸோ மா ஜ்யோதிர் கமய” ( இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்) என்ற பிரார்த்தனையை இந்த அன்பர்கள் அர்த்த முள்ளதாக்கி காட்டியிருக்கிறார்கள்”.

“தேசம் ஒன்று. காரணம், அதன் ஹிந்து அடையாளம்”: ஆர்.எஸ்.எஸ்
லக்னோ (உத்தரப் பிரதேசம்) டிசம்பர் 24
தைப்பொங்கல் அன்று பிரயாகை திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு மகளிர் சிந்தனை அரங்கம், சுற்றுச்சூழல் சிந்தனை அரங்கம் சமூக நல்லிணக்க சிந்தனை அரங்கம் என பல்வேறு சிந்தனை அரங்கங்கள் உத்தரப் பிரதேசத்தின் பிருந்தாவன், காசி முதலிய நகரங்களில் கும்பமேளா பாணியிலேயே நடைபெற்று தற்போது தலைநகர் லக்னோவில் இளைஞர் சிந்தனை அரங்கம் தொடங்குகிறது. மாநில முதல்வர், மாநில ஆளுநர் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட இந்த யுவா கும்ப நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். சிறப்புரை ஆற்றிய ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சஹசர்காரியவாஹ் (அகில பாரத இணை பொது செயலாளர்) டாக்டர் கிருஷ்ண கோபால் இளைஞர்கள்முன் வைத்த கருத்துக்கள்:“சுமார் 900 ஆண்டு அன்னிய ஆக்கிரமிப்பினால் தேசத்தின் சுதந்திரம் பறிக்கப்பட்டு வாழ்வு வறண்டு போய் கலாசாரம் மறக்கடிக்கப்பட்டு தேசம் இழிநிலை அடைந்த வேளையில் நாட்டின் ஆன்மீக சக்தி தட்டி எழுப்பப் பட்டது. மாளவியா, திலகர் போன்ற பெரியவர்கள் இதற்காக பாடுபட்டார்கள். தேசம் சுதந்திரம் அடைந்தது. ஆனால் பாரத நாடு துண்டு துண்டாக சிதறும் என்று உலகமே எதிர்பார்த்தது. தேசம் ஒன்றாகவே உள்ளது. பஞ்சத்தில் அடிபட்ட தேசம் இன்று 135கோடி மக்களுக்கான உணவை உற்பத்தி செய்யும் திறன் பெற்று விட்டது. அதுமட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு நாலு கோடி டன் உணவு தானியம் வழங்கும் நிலைக்கும் பாரதம் வந்துவிட்டது. உலகத்திலேயே மிக அதிக தூரம் பாயக்கூடிய ஏவுகணையை உருவாக்கிய நாடு பாரதம். சக்தி வாய்ந்த, அறிவாற்றல் மிக்க பாரதம் ஒரே நாடாக விளங்க வேண்டும் என்கிற விதத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் ஹிந்துக்கள். எனவே ஆன்மீகவாதிகள். ஹிந்துத்துவம் நமது சிறப்பான அடையாளம். ஸர்வே பவந்து ஸுகினஹ என்பதுதான் ஹிந்துவின் பிரார்த்தனை. அமெரிக்காவில் வாழ்பவரும் சரி, பாகிஸ்தானில் வாழ்பவரும் சரி இந்த ஸர்வே பவந்து ஸுகினஹ என்ற பிரார்த்தனையில் அடங்குவார்கள். போன நூற்றாண்டு, விஞ்ஞான / மேற்கத்திய நூற்றாண்டு. எனவே பேரழிவு சாத்தியமே. அந்த சர்வ நாசத்திலிருந்து உலகம் தப்பிப் பிழைக்க வேண்டும் என்றால் பாரதத்தின் ஆன்மீகத்தை சரணடைய வேண்டும் என்று உலகின் வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்”. இந்த இளைஞர் சிந்தனை அரங்கில் சர்வதேச பயில்வானும் ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுசீல்குமார் கலந்து கொண்டு பேசுகையில் ”உலகிலேயே அதிக இளைஞர்கள் உள்ள நாடு பாரத நாடு. இளைஞர்கள் தான் நமது நாட்டிற்கு பிராண்ட் அம்பாசடர் என்று கூறுவேன். நம்மை பண்பாளர்களாக்க தாய், தந்தை, குரு ஆகியோர் பாடுபடுகிறார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நம்மை பாரதத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். நீ பீகார் மாநில ஆளா என்று சிலர் கேட்பார்கள், ஆம் என்று பதிலளிப்பேன். நீ ஒரிசாஆளா என்று சிலர் கேட்பார்கள் ஆம் என்றுதான் பதிலளிப்பேன். காரணம் நான் பாரதம் முழுவதற்கும் உரியவன். இளைஞர் எந்த ஒரு மாநில கூண்டுக்குள்ளும் தங்களை அடைத்துப் போட்டுக் கொள்ளக்கூடாது” என்று கூறினார். சர்வதேச பாக்ஸர் விஜேந்தரும்r நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Post a Comment

0 Comments