SETU-17

பிருந்தாவன் மகளிர் சிந்தனை அரங்க (நாரி கும்ப) நிகழ்ச்சியில்
பேசியவர்களில் சிலர் கருத்துக்கள்:


இன்று பெண்களுக்குத்தான் எல்லா சவால்களும். எனவே அது பற்றி சிந்திக்கிறோம். சிந்தனையின் விளைவாக கிடைக்கும் தீர்வின் அடிப்படையில் களப்பணி ஆற்றுவோம். பாரதத்தில் பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது என்ற கருத்து பரப்பப்படுகிறது. இது இன்றுள்ள ஒரு சவால். உண்மை அதுவல்ல. சில இடங்களில் அதுபோல நடக்கலாம். ஆனால் பெண் தன்னுடைய உள்ளார்ந்த ஆற்றலை அடையாளம் கண்டு கொண்டு முன்னேற வேண்டும். அடுத்து கடமைகள் பற்றி பேசப் போனால் நாம் நமது கடமைகளை நிறைவேற்றிக் கொண்டே வந்தால் நமக்குரிய எல்லா உரிமைகளும் வந்து சேர்ந்துவிடும். .பெண் தன் குழந்தைகளுக்கு நல்ல பண்புப் பதிவுகளை ஊட்டுவதுதான் எல்லாவற்றையும் விட மிகப் பெரிய பொறுப்பு.
                         அ. சீதா, அகில பாரத பொது செயலர், ராஷ்ட்ர சேவிகா சமிதி

முதலில், குடும்ப ரீதியாகவோ சமுதாய ரீதியாகவோ நாம் செய்யும் எல்லா பணிகளும் அறநெறியை (தர்மத்தை) அடிப்படையாக கொண்டதாய் அமையவேண்டும். பொருள் ஈட்டுவதும் அறநெறி அடிப்படையிலேயே அதாவது நேர்மையோடு நடைபெற வேண்டும். அப்படி நடந்தால் தான் குடும்பத்தில் நல்ல சூழ்நிலை உருவாகும்.. இரண்டாவதாக, பிள்ளைகள் பிறப்பது, அவர்களுக்கு நல்ல பண்புகளை ஊட்டுவது இவை நடைபெறுவதுடன் அவர்களை தேசத்திற்காக ஆயத்தப்படுத்த வேண்டும் மூன்றாவதாக, நாம் நமக்காக நமது குடும்பத்திற்காக மட்டுமே வாழ்வது என்பது கூடாது.வீட்டில் இருந்து வெளியில் வந்து சமுதாயத்தை மேம்படுத்த பாடுபடுவோம். நமது குடும்பத்தை திடப்படுத்தி அதன் வாயிலாக வலிமையான தேசத்தை நிர்மாணிப்போம். -- இந்த மூன்றும் இன்று பாரத பெண்ணின் பங்களிப்பாக அமைய வேண்டும்.
                              சாந்தாக்கா, அகில பாரத தலைவர், ராஷ்ட்ர சேவிகா சமிதி.


சமுதாயத்தில் தலைதூக்கும் தீமைகளை தனது சக்தி சாமர்த்தியத்தால் பெண் வென்றெடுக்க வேண்டும். தீமை என்று பார்க்கப் போனால் சில பகுதிகளில் பெண் சிசுக் கொலை நடக்கிறது. நமது நாட்டில் ராமனுக்கு ராமநவமி, கிருஷ்ணனுக்கு ஜென்மாஷ்டமி, சிவனுக்கு சிவராத்திரி - ஒவ்வொரு நாட்கள்தான் ஆனால் பெண்தெய்வங்களுக்காக ஆண்டுக்கு இரண்டு முறை ஒன்பது ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடுகிற இந்த தேசத்தில் பெண் சிசுக்கொலை நடப்பது வேதனை அளிக்கும் விஷயம். நவராத்திரிக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பெண்களை அழைக்கும்போது நாளைக்கு எங்கள் வீட்டுக்குத்தான் முதலில் வரவேண்டும் என்று சொல்லி கூப்பிடுவோம். அழைத்த பெண் குழந்தைகள் வரும்போது முதலில் அவர்களுக்கு பாத பூஜை செய்வோம். மஞ்சள் குங்குமம் கொடுத்து மகிழ்வோம். யாதேவி சர்வ பூதேஷு கன்யா ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம என்று மந்திரமும் சொல்வோம். அவள் கையில்தக்ஷிணை கொடுத்து மரியாதை செய்வோம். அடுத்த நாள் நம் வீட்டு மருமகள் கப்பம் தரித்தால் மகனிடம் “அவளுக்கு டெஸ்ட் எடுத்துப் பார். . குழந்தை பெண் என்று தெரிந்தால் கருக்கலைப்பு செய்து அழைத்துவா” என்று சொல்கிறோமே அது தான் சமுதாயக் கேடு. ஊரார் பெண் குழந்தைகள் என்றால் அவள் சக்தி, அவள் தேவி. நம் வீட்டில் பெண் பிறக்கக்கூடாது -- என்ன அக்கிரமம்! எனவேதான் பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற அறிவிப்பு செய்து இந்த தீமையை ஒழிக்க முயற்சி தொடங்கியிருக்கிறார்.
                                                           சுஷ்மா சுவராஜ், பாரத வெளியுறவு அமைச்சர்


சமுதாயம் பெண்ணுக்கு அந்தஸ்தும் மரியாதையும் காட்ட வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. வீட்டை பார்த்துக்கொண்டு குழந்தைகளையும் வளர்க்க வேண்டும். அதே சமயம் அலுவலக பணியில் முன்னேறிக் காட்ட வேண்டும். பொதுவாக பெண்ணுக்கு இது சவாலான பணிதான்.ஒன்றில் கால் ஊன்றினால் மற்றது சறுக்கி விடுகிறது. எனவே சாதனைப் பெண்ணை போற்ற வேண்டும்.
                                                   
                                                   நிர்மலா சீதாராமன், பாரத பாதுகாப்பு அமைச்சர்

Post a Comment

0 Comments