SETU-1


******** 
சேது 
********
பட்னா, டிசம்பர் 3 

பட்னாவுக்கு பெருமிதம் தந்த தூத்துக்குடி மண் ! 


அது ஆண்டு 1935. பட்னாவாசியான பிஹார் வழக்கறிஞர் ஒருவர் சிந்தித்துப் பார்த்தார். ’ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பு போன்ற கப்பல் வணிக ஏகபோகத்தை ஒழித்துக் கட்டுவதற்காக ஒரு தமிழர் தூத்துக்குடிக்கும் கொழும்பிற்கும் இடையே கப்பல் ஓட்டினாராமே, அவரை சந்திக்க வேண்டும் ... எப்படி சந்திப்பது?’ செயலில் இறங்குகிறார். ரயில் ஏறி சென்னை சென்று அங்கிருந்து தூத்துக்குடி செல்கிறார். கடுமையாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த வ. உ . சிதம்பரனாரை சந்தித்து வணங்குகிறார். அன்று மாலை தூத்துக்குடியில் காங்கிரஸ் கூட்டத்தில் அந்த 51 வயது பிஹார் வழக்கறிஞர், “பெரியவர் சிதம்பரனார் வாழும் தூத்துக்குடி இது. இந்த மண்ணில் வந்து நிற்பது எனக்கு பெருமிதம் தருகிறது. சிதம்பரனார் அவர்களை தரிசித்த பிறகு எனது தேசபக்தி பல மடங்கு ஆயிற்று” என்று பேசி மெய் சிலிர்த்தார். அந்த பிஹார் வழக்கறிஞர் ராஜேந்திர பிரசாத். ஆம், சுதந்திர பாரத தேசத்தின் முதல் குடியரசுத் தலைவர் ஆன டாக்டர் ராஜேந்திர பிரசாத்தே தான். இன்று (டிசம்பர் 3) ராஜேந்திர பிரசாத் பிறந்த நாள். 
(விஸ்வ சம்வாத் கேந்திரம்)

ராஞ்சி (ஜார்க்கண்ட்), டிசம்பர் 3 

ஜார்க்கண்டில் ’இனிமைப் புரட்சி’? 
ஜார்க்கண்ட் மாநிலத்தின் எல்லா 24 மாவட்டங்களிலும் இயற்கை வேளாண் முறை பண்டங்களுக்கான உற்பத்தி மையங்களை அமைக்க இருப்பதாக நவம்பர் 30 அன்று மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ் தெரிவித்தார். இயற்கை வேளாண் உற்பத்தி பண்டங்களை சந்தைப்படுத்த மாநில அரசு பாபா ராம்தேவின் ’பதஞ்சலி ஆயுர்வேத்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்றும் கூறினார். அந்தப் பண்டங்கள் ’ஜார்க்கண்ட் ஜைவிக்’ என்ற பிராண்டு பெயரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடந்த இரண்டு நாள் ’குளோபல் அக்ரிகல்ச்சர் அண்டு புட் சம்மிட்’ மாநாட்டின் நிறைவில் பேசுகையில் முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது பாபா ராம்தேவ், “இயற்கை வேளாண் முறையில் உற்பத்தியான அரிசி, கோதுமை, தேன், பருப்பு, காய்கறி உள்ளிட்ட பண்டங்களை பதஞ்சலி நிறுவனம் கொள்முதல் செய்யும்” என்று தெரிவித்தார். மாநில விவசாயிகளை செழிப்புடன் வாழச் செய்ய மாநில பாஜக அரசுடன் தனது நிறுவனம் இணைந்து செயல்படும் என்று கூறினார். மூணரைக் கோடி மக்கள்தொகையும் தேசத்தின் 40 சதவீத கனிம வளமும் கொண்ட இந்த மாநிலத்தில் ’இனிமைப் புரட்சி’ கொண்டு வரும் நோக்கில் பதஞ்சலி நிறுவனத்துடன் கூட்டாக தேன் சுத்திகரிப்பு ஆலை நிறுவுவதற்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என்று கூறினார் ரகுபர் தாஸ். 
(விஸ்வ சம்வாத் கேந்திரம்)
டேராடூன் (உத்தராகண்ட்), டிசம்பர் 3 

உங்களுக்கு தெரியுமா ’கோத்திர சுற்றுலா’ ? 

யார் என்ன கோத்திரம் என்ற சர்ச்சையை கிளப்பி சர்ச்சையில் சிக்கியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உத்தராகண்ட் மாநில பாஜக அரசு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் ’கோத்திர சுற்றுலா’ என்ற திட்டத்தை பரிசீலித்து வருகிறது என்ற விஷயம் தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை! திட்டம் இதுதான்: ஒவ்வொரு குடும்பமும் தன் வம்ச வம்ச பரம்பரை கால வரிசையைத் தெரிந்து வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்தின் கோத்திரம் எது என்று அந்த கோத்திரத்தின் துவக்கமான ரிஷி யார் என்பதை வைத்து அறியலாம். காசியபர். வசிஷ்டர். அத்ரி. கௌதமர். விஸ்வாமித்திரர். ஜமதக்னி. பரத்வாஜர் என்ற ஏழு ரிஷிகள்தான் எல்லா கோத்திரங்களுக்கும் ஆதியானவர்கள் என்ற அடிப்படையில் மாநில அரசு சுற்றுலாத் துறை, ஆராய்ச்சியாளர்களையும் சாஸ்திர நிபுணர்களையும் கலந்து ஆலோசித்து ரிஷிகளின் வரலாற்றையும் அவர்களில் ஒவ்வொரு ரிஷியும் மாநிலத்தின் எந்தெந்த மலைச்சாரல் கிராமத்தில் தவம் செய்தார் என்பதையும் உறுதிப்படுத்தி இணையதளத்தில் பதிவிட இருக்கிறது. ஆனால் கோத்திர சுற்றுலாத் திட்டம் இப்போதுதான் உருவாக்கப்பட்டு வருகிறது என்று சுற்றுலா துறை செயலர் திலீப் ஜவல்கர் கூறினார். சாகசம், ஹனிமூன், பொழுதுபோக்கு, கலாச்சாரம், சமயம், ஊரகம் என்று பல்வேறு தலைப்புகளில் சுற்றுலா திட்டங்கள் தீட்டப்படுவதுண்டு. ஆனால் கோத்திர சுற்றுலா என்பது புதுமையான திட்டம் தான். 
(விஸ்வ சம்வாத் கேந்திரம்)
பெங்களூரு (கர்நாடகா) டிசம்பர் 3 

ராமர் கோயில் கோரிக்கை வலுக்கிறது 

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முனவைத்து பெங்களூரு பசவனகுடி தேசியக் கல்லூரி மைதானத்தில் டிசம்பர் 2 அன்று பல்லாயிரக்கணக்கான ராம பக்தர்கள் திரண்டிருந்தார்கள். பல்வேறு மடங்களின் துறவியரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த விஸ்வ இந்து பரிஷத்தின் பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே, ஆர். எஸ்.எஸ்ஸின் அகில இந்திய பொதுச் செயலர் சி. ஆர் முகுந்த் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறப்புரையாற்றினார்கள். நவம்பரில் தலைநகர் டெல்லியில் துறவியர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டமூன்று தீர்மானங்களை இந்தப் பேரணி நினைவு கூர்ந்தது: 1. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோரி ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும். 2, ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று வலியுறுத்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும் 3. விரைவில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு டிசம்பர் 18 கீதா ஜெயந்தி அன்று தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் ராம நாம ஜெப வேள்வி நடத்த வேண்டும். ராமர் கோயில் வழக்கை உச்ச நீதி மன்றம் விரைவில் முடிக்க வேண்டும் என்று துறவிகள் வலியுறுத்தினர்கள். 

(விஸ்வ சம்வாத் கேந்திரம்)


Post a Comment

0 Comments