அந்த 15 நாட்கள் - சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள் -3 (Those 15 days)

அந்த 15 நாட்கள் - இந்திய விடியலுக்கு முன்

ஆகஸ்ட் 3, 1947*
- பிரஷாந்த் போலெ 

காந்தி இன்று மகாராஜா ஹரி சிங்கை சந்திக்க வேண்டிய நாள். இதற்காக காந்தி காஷ்மீர் வந்தவுடன், காஷ்மீரின் திவான் ராமச்சந்திர கக் தன் கைப்படவே காந்தியிடம் மகாராஜாவின் அழைப்பிதழை தந்திருந்தார். ஆகஸ்டில் கடும் குளிர் நிலவும் பிரதேசம் அது, ஆனாலும் எப்பொழுதும்போல் அதிகாலையிலேயே எழுந்து விட்டார் காந்தி. காந்தியின் நிழல் போல் இருக்கும் அவரது பேத்தி 'மனு'வும் அவரை தொடர்ந்து விழித்தார்.

மனு காந்தியுடனே உறங்கும் வழக்கம் கொண்டவர். ஓராண்டுக்கு முன் நோகாளி சுற்றுப் பயணத்திலிருந்து ஆரம்பித்த வழக்கம் இது; இதுவும் அவரது 'சத்திய சோதனை'களில் ஒரு சுய பரிசோதனை. காந்தியின் பரிசுத்தமான மனதில் இதில் அசிங்கம் எதுவும் இருப்பதாக தோன்றாவிடினும், பொதுமக்களிடம் மத்தியில் இந்த விஷயத்தை பற்றிய சர்ச்சை இருக்கவே செய்தது. இவ்விஷயத்தை குறித்த விவாதங்கள் காங்கிரஸ் தலைவர்களை மிகவும் சங்கோஜப்படுத்தின. மெல்ல மெல்ல பொது மக்களின் கருத்து காந்திக்கு எதிர்திரும்பிய நிலையில், மனு பீகார் சுற்றுப்பயணத்திற்குப் பின் காந்தியுடன் உறங்குவதை தவிர்த்தார். ஆனால் அன்று ஸ்ரீநகரில் காந்தி மனுவுடன் வசிப்பது ஒரு பெரிய விஷயமாக புலப்படவில்லை. 

அதிகாலையில் எழுந்து பிரார்த்தனைகளை முடித்து தனது அறையை சுத்தம் செய்தபின், மகாராஜாவை சந்திக்க ஆயத்தமாகி, 11 மணிக்கு மகாராஜாவின் 'குலாப் பவனில்' நுழைத்தார் காந்தி. பிரிவினை மற்றும் கலகங்களுக்கு நடுவில் காந்தியை சந்திக்க பிரியப்படவில்லை என்றாலும், அவர் ஸ்ரீநகர் வந்ததன் பொருட்டு மரியாதை நிமித்தமாக அவரை சந்திக்க அழைத்திருந்தார் ராஜா ஹரி சிங். அழைத்தவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் மகாராஜா ஹரிசிங், மஹாராணி தாரா தேவி மற்றும் யுவராஜா கரண் சிங் மாளிகையின் வாயிலருகே காத்திருந்தனர். தாரா தேவி வேண்டியவர்களுக்கே உரிய முறையில் ஆரத்தி எடுத்து திலகமிட்டு காந்தியை வரவேற்றார்.

(இன்றும் அவர்கள் சந்தித்த மரத்தின் கீழ் ஓர் செப்பு பட்டயம் உண்டு, ஆனால் அதில் அவர்கள் சந்தித்த மாதம் ஜூலை என தவறாக குறிப்பிடப் பட்டுள்ளது)

அன்று பிரிவினையின் எந்த விதமான அழுத்தங்களும் அன்றி காந்தி மகிழ்ச்சியாக இருந்தார். மஹாராஜாவுடன் மனமுவந்து பேசினாலும், இந்தியாவுடன் காஷ்மீர் சேர வேண்டும் என்று எந்த கோரிக்கையும் வைக்கவில்லை அவர். அவ்வாறு சொல்வது உறித்தல்ல எனவும், இந்தியா - பாகிஸ்தான் இரண்டிற்கும் தானே குலபதி எனவும் நம்பினார். ஆனால் துரதிட்டவசமாக பாகிஸ்தான் வேண்டும் என கோரும் முஸ்லீம் தலைவர்கள் மத்தியில் அவரது இந்த பார்வை எடுபடவில்லை. அவரை ஒரு ஹிந்துவாகவே பார்த்த அவர்கள், பாகிஸ்தானில் காந்திக்கு இடமில்லை என்பதை தெளிவாக உணர்ந்திருந்தனர்.

மகாராஜா என்ன முடிவெடுக்க வேண்டும், எவருடன் இணைய வேண்டும் என காந்தி சொல்ல தயாராக இல்லாத நிலையில், அங்கே பெரிதாக அரசியல் விவாதங்கள் ஒன்றும் நடைபெறவில்லை. ஆனால் காந்தியின் காஷ்மீர் வருகை வேறொரு விஷயத்திற்கு வித்திட்டது. அந்த சந்திப்பிற்குப் பின் ஆகஸ்ட் 10 அன்று மகாராஜா தன் நம்பிக்கைக்குகந்த உதவியாளரான ராமச்சந்திர கக்கை பணி நீக்கம் செய்தார். ஷேக் அப்துல்லாவை ராஜ துரோக குற்றங்களுக்காக கைதி செய்தவுடன் அவருக்காக வாதாட வந்த நேருவையும் முஸ்சாபாராபாதில் ராமச்சந்திரா கைதி செய்தது முதல் நேருவின் பார்வை அவரை விட்டு அகலவில்லை. இதைனை தொடர்ந்து நேருவின் நெருங்கிய நண்பரான ஷேக் அப்துல்லாவும் காஷ்மீர் சிறையிலிருந்து செப்டம்பர் 29ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

மேம்போக்காக பார்த்தால் காந்தியின் காஷ்மீர் வருகையால் நடந்த விஷயங்கள் இவை மட்டுமே. ஆனால் மகாராஜா பெரிதும் போற்றும் காந்தி, ராமச்சந்திர கக் - ஷேக் அப்துல்லா விஷயத்தை விட்டுவிட்டோ, அல்லது அதனுடனோ, காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டும் என வற்புறுத்தி இருந்தால் ஆகஸ்ட் அன்றே காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திட சாத்தியம் இருந்தது. அது மட்டும் நடந்திருந்தால் இன்று இருக்கும் காஷ்மீர் பிரச்னையும் இருந்திருக்க வாய்ப்பில்லை... ஆனால் காந்தி அன்று அதை செய்யவில்லை...

-------- -------- --------

மண்டி

இமயமலையின் அடிவாரத்தில் மனு எனும் முனிவரின் பெரியார் பெற்ற அழகான ஊர், பியாஸ் நதியின் கரையில் அமைந்திருந்தது. அழகான, வளமான மண்டி மன்னராட்சியின் கீழ் இருந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முடிவில் தன் குடையின் கீழே நாட்டை ஆள நினைத்தார் மன்னர், இதனால் நாட்டிலும், நாட்டை ஆளும் குழுவிலும் (நரேந்திரமண்டல் என அழைக்கப்பட்டது) குழப்பமிருந்தது. இந்நிலையில் அதன் அண்டை ராஜ்ஜியமான சிர்மாரும் இந்தியாவுடன் சேராமல் தனித்த ராஜ்ஜியமாக முடிவெடுத்தது. சிறுசிறு ராஜ்யங்களாக இருப்பது சிரமம் என அறிந்திருந்தாலும், காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் தனித்து ராஜ்ஜியத்தை நிர்வாகம் செய்வார் என்ற பேச்சு அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியது.

இவ்விருவரும் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், சிம்லாவிலிருக்கும் அனைத்து சிறு-குறு மலை ராஜ்ஜியங்கள் இந்தியாவுடன் சேராமல் தங்களுக்குள் ஐக்கியமாக இணைத்திருக்கலாம் என்ற யோசனையை முன்வைத்தனர். இவ்விஷயத்தில் ஆலோசனைக்காக மவுண்ட்பேட்டன் பிரபுவுடன் ஒரு வாரத்திற்கு முன் ஆலோசனையும் நடத்தினர், அவர் காலம் தாழ்த்தியமையால், நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையில் இந்தியாவுடனான இணக்கத்திற்கும் முட்டுக்கட்டை இட்டனர்.

டெல்லியில் வைஸ்ராயாக அமர்ந்திருந்த மவுண்ட்பேட்டன் தினமும் இந்த ரீதியிலான விண்ணப்ப கடிதங்களை மீண்டும் மீண்டும் படிக்க நேரிட்டது. மன்னர்கள் பெரும்பாலோனோர் தனித்திருக்க வலியுறுத்துவதை அவர் பிரிட்டிஷாருக்கு வரப்போகும் ஒரு தலைவலியாகவே பார்த்தார். ஜனநாயகத்தின்படி அவர்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்தாலும் இதனால் உருவாகப்போகும் சிக்கல்களை அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர் வகிக்கும் வைஸ்ராய் பதவியின் மாண்பை கருதி சர்தார் படேலுக்கு கடிதம் எழுத விழைந்தார். சர்தார் பட்டேல் சாதகமான ஒரு பதிலை கூற மாட்டார் என அறிந்தாலும், சிர்மார்-மண்டி போன்ற ராஜ்ஜியங்களுக்கு இந்தியாவில் இணைவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கேட்டு ஆகஸ்ட் 3 அன்று கடிதம் எழுதினார்.
-------- -------- --------

Dr. அம்பேத்கர் அன்று டெல்லியில் இருந்தார். கடுமையான வேலைகள் நிறைந்த நேரமது; அவரது பட்டியலின கட்சி நிர்வாகிகளும் நாடெங்கிலுமிருந்து பல்வேறு பணிகளுக்காக அவரை தொடர்பு கொண்ட வண்ணம் இருந்தனர். ஏராளமான கடிதங்கள் பதிலுக்காக நிலுவையிலுருந்தன; அதனால் அம்பேத்கர் அவருக்கு பிரியமான புத்தக வாசிப்பை செய்ய இயலவில்லை. ஆனாலும் இந்த வேலை பளு அவருக்கு ஒருவிதமான நிம்மதியை அளித்தது.

கடந்த வாரம் நேரு அம்பேத்கரை அவரது கேபினெட்டில் சேர அழைத்தார். அம்பேத்கர் அதற்கு உடன்பட்டாலும் ஒரு நிபந்தனை விதித்தார் "சட்ட அமைச்சகத்தில் அதிக வேலைகளில்லை, எனக்கு தரும் பணி பொறுப்புகள் மிகுந்ததாக இருக்க வேண்டும்' என்பதே அந்த கோரிக்கை. நேரு புன்சிரிப்புடன் கூறிய பதில் "நிச்சயமாக, தங்களுக்காக மிக உயரிய பொறுப்புடன் ஒரு பணி காத்திருக்கிறது" என்பதே. அதன் தொடர்ச்சியாக இன்று அம்பேத்கருக்கு நேருவிடம் இருந்து ஒரு வரைவு வந்தது, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார் என்ற செய்தியுடன்.

Dr. அம்பேத்கருக்கும், பட்டியலின மக்களுக்கும் ஒரு முக்கியமான மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நிகழ்ச்சி இது.
------- -------- --------
சிரில் ராட்கிளிஃப்பை டெல்லியின் கடுமையான கோடைகாலம் பயமுறுத்தியது. நடுநிலை தவறாத, எவருக்கும் அஞ்சாத ஒரு நீதிபதி சிரில்; பிரிட்டன் பிரதம மந்திரி கிளமெண்ட் அட்லீயின் வேண்டுகோளிற் கிணங்கி இந்திய பிரிவினையில் பங்கு பெற வந்திருந்தார். அவர் இந்தியாவை பற்றி அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை, ஆனால் மவுண்ட்பேட்டனோ இந்தியாவை பற்றி நன்கு அறிந்தவரை வைத்து நாட்டை பிரிப்பதே நலம் என நம்பினார்.

தனக்கு இந்தியாவை பற்றிய ஞானமில்லை என்பதை அறிந்த சிரில் இந்த பணியை ஒரு மிக பெரிய சுமையாகவே கருதினார். பரந்து விரிந்த பூமி, ஆர்ப்பரிக்கும் நதிகள், ஓடைகள், கால்வாய்கள்; ஒற்றை கோட்டின் மூலம் இதை பிளப்பதோ பிரிப்பதோ பலரை அகதிகளாக்க போகிறது என்பதையே உணர்ந்தார். இந்த ஒரே கோடு பலரின் வாழ்வை சூனியமாக்க போகின்றது...

இதை மனதில் வைத்தே அவர் பிரிவினை இயன்ற அளவு ஞாயத்துடன் நடக்க வேண்டும் என திட்டமிட்டார். அவரது பங்களாவில் மலைபோல் ஆவணங்களும் வரைபடங்களை குவிந்திருந்தன, கிட்ட தட்ட இன்று வரைவு வேலைகள் கடைசி கட்டத்தை நெருங்கி விட்டன. பஞ்சாப் போன்ற சர்ச்சைக்குரிய சில இடங்களை பிரித்து விட்டால் வேலை முடிந்தது, இனி நகாசு வேலை மட்டும் தான் என்கிற நிலையில் அவருக்கு மேஜர் ஷார்ட்டின் கடிதம் கிடைத்தது. மேஜர் ஒரு 'கட் அண்ட் ரைட்' பார்ட்டி; அவர் கடிதம் மக்கள் ராட்கிளிஃப்பை பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதே. "மௌண்ட்பாட்டன் சொல்வதை தான் ராட்கிளிஃப் செய்வார்", இதுதான் வந்த கடிதத்தின் சாரம்சம்.

ராட்கிளிஃப் இதிலுள்ள உண்மையை நன்கு அறிந்திருந்தார்...
------- -------- --------
ஆகஸ்ட் 3 - பகல் 4 மணி

ஜவஹர்லால் நேருவின் உறைவிடமான '17 யார்க் ஹவுஸ்' சிலிருந்து ஒரு பத்திரிக்கை குறிப்பு வெளியிடப்பட்டது. கொந்தளிப்பான காலகட்ட மாதலால் நித்தமும் பத்திரிக்கை குறிப்புகளும் செய்தியாளர் சந்திப்புகளும் நிகழும் நேரமது. ஆனால் இன்றைய குறிப்போ சற்றே முக்கியமானது, வரலாற்றை எழுதும் அந்த குறிப்பில் தான் நேரு தன்னுடைய கேபினட் மந்திரிகளை சுதந்திர இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தினார். அந்த குறிப்பில் வரும் வரிசைப்படி 

-சர்தார் வல்லபாய் பட்டேல் 
-மவுலானா அபுல் கலாம் ஆசாத்
-Dr. ராஜேந்திர பிரசாத்
-Dr.ஜான் மத்தாய்
-ஜெகஜீவன் ராம்
-சர்தார் பல்தேவ் சிங்
-C. H. பாபா
-யுவராணி அம்ரித் கவுர்
-Dr. B. R. அம்பேத்கர்
-Dr.ஷ்யாமா பிரசாத் முகர்ஜீ
-ஷண்முகம்செட்டி
-நரஹர் விஷ்ணு கட்கில்

இந்த பன்னிருவரில் யுவராணி அம்ரித் கவுர் மட்டுமே பெண் அமைச்சர். பட்டியலின மக்களின் பிரதிநிதியாக Dr. அம்பேத்கரும், ஹிந்து மகாசபையின் பிரதிநிதியாக Dr.ஷ்யாமா பிரசாத் முகர்ஜீயும், சீக்கியர்களின் பிரதிநிதியாக 'பந்த்திக் பார்ட்டி'யின் சர்தார் பல்தேவ் சிங்க்கும் நியமிக்கப்பட்டனர்.
-------- -------- --------

மற்றோரிடத்தில் ராம் மனோகர் லோஹியாவிடமிருந்து வந்த பத்திரிக்கை குறிப்பு கோவா மக்களின் நம்பிக்கை தகர்த்தது. இந்தியா விடுதலை பெறுவதால் கோவாவிற்கும் விடுதலை என என்ன வேண்டாம். உங்களது விடுதலை போராட்டத்தை தொடருங்கள் என்பதே அது சுமந்த செய்தி
-------- -------- --------

எரியும் இந்நெருப்பிலிருந்து வெகு தூரத்தில் மகாராஷ்டிராவின் தேவச்சி அளந்தியில் காங்கிரஸின் கம்யூனிஸ்ட் அனுதாபிகள் கூடியிருந்தனர். இரண்டு நாட்களாக யோசித்து விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் நலனை மேம்படுத்த காங்கிரஸினுள்ளேயே ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், அதற்கு சங்கர்ராவ் மோரே, கேஷவ்ராவ் ஜேதே, பாவுசாஹேப் ரோட், துளசிதாஸ் ஜாதவ் கூட்டாக தலைமை ஏற்பர் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அன்று ஒரு புதிய கம்யூனிஸ்ட் பார்ட்டின் ஜனனம் உருவானது மகாராஷ்டிரத்தில்...
-------- -------- --------

காந்தி ஸ்ரீநகரை விட்டு கிளம்பும் நாளும் வந்தது, நாளை காலை ஜம்முவிற்கு செல்வதாக திட்டம். அன்றிரவு பேகம் அக்பர் ஜஹானின் வீட்டில் உரிமையான விருந்துபசரிப்பை மறுக்கவில்லை அவர். (காந்திக்கு ஷேக் அப்துல்லாவிடம் இருந்த நட்பும் நெருக்கமும் அவர் இதை ஏற்க ஒரு காரணம்)

ஷேக் அப்துல்லா சிறையிலிருந்தார், அந்நிலையிலும் அவர் இல்லாமலேயே பேகம் சிறப்பான ஒரு கேளிக்கை விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்துல்லாவின் 'நேஷனல் கான்ஃப்பரன்ஸ்' கட்சி தொண்டர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். பேகமும் அவரது மகளும் வாயிலுக்கே வந்து காந்தியை உபசரித்தனர்.

அங்கே நடந்த ஆடம்பரக் கூத்தை கண்டு காந்தி மனம் வருந்தினார். இதை போல் வேறெந்த ராஜரீகங்கள் நிறைந்த விருந்தையும் அவர் கண்டதாக நினைவில்லை. பல விஷயங்களை மறுதலித்தாலும் அவர் கடைசி வரை அங்கே இருக்கவே செய்தார்..!
-------- -------- --------
சங்கடமிக்க ஆகஸ்ட் 3 இரவு நிறைவை நெருங்கியது, லட்சக்கணக்கில் மக்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். நன்றாக வாழ்ந்த குடும்பங்கள் திடீரென பரதேசியாகி துண்டாடப்பட்ட இந்தியாவை நோக்கி லாஹூர், பதன்கோட் மற்றும் பெங்கால் வழியாக பயணித்தனர். உயிர் பயம், உரிமைகளையும் - உடமைகளையும் விட்டு கொடுத்த துக்கம், உடல் நலிவடைந்து பசி - தாகத்துடன் ஏக்கமாக தாயகம் நோக்கி நடந்தனர்...

இணக்கமான இந்தியாவின் கடைசி பத்து இரவுகள் மட்டுமே மி(எ)ச்சம்..!

Post a Comment

0 Comments