கூட்டுறவு வங்கிகள் ஆர்.பி.ஐ விவசாயிகள் பொறுப்போடு வாழ வழி ; ஊழல் பெருச்சாளிகள் கீச்.. கீச்..!

தற்போது கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஆளும் அரசியல்வாதிகள் இஷ்டத்துக்கு வங்கியின் நிதி ஆளுமைகளில் தலையிடுகிறார்கள்.

அண்மையில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ”ரேஷன் கார்டைக் காட்டினால் கூட்டுறவு வங்கியில் 50 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்கும்” என்று சொன்னதுகூட அந்த வகை தான். 

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், 2006-ல் திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் நிலுவையில் வைத்திருந்த சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கடனை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்தார். கருணாநிதி கடனைத் தள்ளுபடி செய்து 14 வருடங்கள் ஓடிவிட்டன. இன்னமும் அந்தக் கடனுக்கான தவணைத் தொகையில் கூட்டுறவு வங்கிகளுக்குப் பாக்கி வைத்திருக்கிறது அரசு. இதில் அந்தத் தொகை முழுமையாக வழங்கி முடிக்கப்படும் வரை ஏற்படும் வட்டி இழப்பையும் அந்த வங்கிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். 

கூட்டுறவு வங்கிகள் முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுக்குள் வந்துவிட்டால் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் நடத்தும் அதிகார தர்பார் எல்லாம் எடுபடாது. ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் எந்தக் கடனையும் தள்ளுபடி செய்யமுடியாது. யாரும் அதிகாரம் செலுத்தி யாருக்கும் கடன் கொடுக்க வைக்க முடியாது. கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது. 

அதே சமயத்தில், ஆர்.பி.ஐ கீழ் இயங்கும் மற்ற வங்கிகளைப் போல், விதிமுறைகளை மட்டுமே கடைபிடித்து செயல்படும் நிலை ஏற்பட்டால், சில சமயங்களில், உள்ளூர் விவசாய சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு கடன் வழங்குவதில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் விபரமறிந்தோர். 

இப்போதுள்ள முறைப்படி, கொடுக்கும் கடனுக்கு நபார்டு வங்கி ஒரு குறிப்பிட்ட சதம் வட்டியுடன் மாநிலக் கூட்டுறவு வங்கிக்கு நிதியை ஒதுக்கும். மாநிலக் கூட்டுறவு வங்கி அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் வழங்கும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து தொடக்கக் கூட்டுறவு வங்கிகளுக்கு (சங்கம்) கடன் தருகிறது. தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் அதிலிருந்து கூடுதல் வட்டி வைத்து விவசாயிகளுக்குக் கடன் வழங்கும். ஆனால், ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் கொண்டு வரப்பட்டால் நபார்டு வங்கி எவ்வளவு வட்டியில் கடன் தருகிறதோ அதே வட்டிக்கு விவசாயிகள் கடன் பெறமுடியும் என்கிறார்கள். 

சிவகங்கை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.எம்.கணேசன், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், மல்டி கோ-ஆபரேட்டீவ் வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மட்டுமே ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்கப்படுவதாக மத்திய அரசின் அறிவிப்பில் இருக்கிறது. 

மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்துக்குள் வருமா வராதா என்பது குறித்த மத்திய அமைச்சரின் அறிவிப்பில் தெளிவு இல்லை. அந்த வங்கிகளையும் ரிசர்வ் வங்கி, தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். 

இதன் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் அதிக அளவில் கடன் வழங்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கையால் விவசாயிகளுக்கு நன்மையே அதிகம் இருக்கும். இதன் மூலம் தொடக்கக் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டுதல் கிடைப்பதுடன் தொழில்நுட்ப ரீதியிலும் சங்கங்களை ஒருங்கிணைத்து முறைப்படுத்த முடியும்” என்றார். 

ஊழல்கள் களையப்பட்டு, கூட்டுறவு வங்கி நிர்வாகம் சீரடைய இதுதான் சரியான வழி என்று மஹாராஷ்ட்ரத்தில் இயங்கி வரும் ஜல்கான் ஜனதா சஹ்காரி வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி திரு. இரமணன் அவர்களும் கூறுகிறார்.

மொத்தத்தில் இந்த அறிவிப்பு, ஊழல் செய்யும் நோக்கத்திற்கு அணை போட்டு விவசாயிகளுக்கு கடன் வழங்க துணை புரிகிறது. அதே நேரத்தில், உரியவர்களுக்கு கடன் வழங்குவதில் உள்ளூர் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு கடன் வழங்கவேண்டும் என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Post a Comment

0 Comments