நூலகர் (பாலம்) கல்யாணசுந்தரம், டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத், டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி, அண்ணா ஹசாரே இவர்கள் நினைவூட்டும் சிவராம்ஜி

**
நூலகர் (பாலம்) கல்யாணசுந்தரம் தமிழகத்தில் தனது தானங்களால் புகழ்பெற்றவர். ஒரு முறை அவர் ’நான் தேக தானம் செய்ய விரும்புகிறேன்; ஒரு தேக தானம் நடப்பதை நான் பார்க்க வேண்டும்’ என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம் விருப்பம் தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன் (1997 ல்) இதே ஜூன் 29 அன்று ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் சிவராம்ஜி காலமானார். அவர் விருப்பப்படி அவரது உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தேகதானமாக அனுப்பப்பட்டது. அந்த மூத்த பத்திரிகையாளர் நினைவூட்டியதன் பேரில் நூலகர் கல்யாணசுந்தரம் சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்று தேக தானத்தை கண்கூடாகப் பார்த்து விட்டுச் சென்றார். எப்பேர்ப்பட்ட சமூக அக்கறை கொண்டவருக்கும் சேவை செய்வது எப்படி என்று தன் முன்னுதாரணத்தால் உணர்த்தி விட்டுச் சென்றார் சிவராம்ஜி.

**
உலகப் புகழ்பெற்ற கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ் எஸ் பத்ரிநாத் தன் மனைவியுடன் வந்து சிவராம்ஜியை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ஆசி பெற்றார். அது சிவராம்ஜியின் 80 ஆவது பிறந்த நாள் வைபவம். பெரம்பூர் விவேகானந்த வித்யாலயத்தில் அந்த வைபவம் நடைபெற்றது. சங்கர நேத்ராலயா கண் தானம் பற்றி மக்களிடையே எடுத்துச் சொல்லி வந்தது. கண் தானம் செய்ய இசைவு தெரிவிக்கும் படிவத்தில் குடும்பத்தார் அனைவரின் கையொப்பமும் பெற வேண்டும்; அப்போதுதான் நேரம் வரும்போது குடும்பத்தாரின் ஆட்சேபம் இருக்காது – இது சிவராம்ஜி முன்வைத்த யோசனை. இந்த யோசனையின் படி சென்னை நகரின் பல பகுதிகளில் நலப் பணி புரிந்து வந்த ஆர் எஸ் எஸ் அன்பர் குழுக்கள் குடும்பம் குடும்பமாக இசைவு படிவங்கள் சேகரித்து சங்கர நேத்ராலயாவுக்கு அனுப்பியிருந்தன. இந்த வெற்றிகரமான கண் தான உத்தி டாக்டர் பத்ரிநாத்தை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பார்த்தனுக்குக் கண்ணன் பாதை காட்டியது போல கண் தான சேவை வெற்றிகரமாக நடைபெற வழிகாட்டிச் சென்றிருக்கிறார் சிவராம்ஜி.


**
அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி எழுபதுகளில் சென்னை திரும்பினார். ஆக்கபூர்வமான வாழ்க்கைக் கண்ணோட்டம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரபல வாரப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதி வந்தார். ஆனால் தமிழர்கள் உருப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படவில்லை. ஒரு கட்டுரையில் தமிழர்களின் “எருமைமாட்டுத் தனத்தை” கண்டனமும் செய்திருந்தார். சிவராம்ஜி அழைத்ததன் பேரில், வேப்பம்பட்டு கிராமத்தில் நலப் பணி புரியும் ஆர்எஸ்எஸ் அன்பர்கள் நிறைந்திருந்த ஒரு முழு நாள் நிகழ்ச்சியில் உதயமூர்த்தி பங்கேற்றார். அது ஆண்டு 1990. ஆர்எஸ்எஸ் அன்பர்களின் சுயமான கட்டுப்பாடு, சினேகிதமான பழக்கம், கூட்டாக செயல்படும் கருத்தொற்றுமை இவையெல்லாம் அவரைக் கவர்ந்தன. நிறைவு நிகழ்ச்சியில் அவர் “தமிழகத்தில் இப்படி ஒரு கண்ணுக்குத் தெரியாத அடி நீரோட்டம் (undercurrent) இருப்பதை இன்று நான் கண்ணாரக் கண்டு உணர்ந்தேன். இது எனக்கு நம்பிக்கை தருகிறது” என்று பேசினார். ஊரில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவருக்கு சமுதாயத்தின் மீது நம்பிக்கை ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பதை சிவராம்ஜி இப்படி உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார்.

**
அண்ணா ஹசாரே நாடறிந்தவராகி பிறகு இன்று புகழ் வெளிச்சத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார். அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராலேகண சிந்தி என்ற தன் சொந்த கிராமத்தை எப்படி அடியோடு உருமாற்றி வளம் கொழிக்க வைத்தார் என்பதை அறிந்திருந்த சிவராம்ஜி அவரை எண்பதுகளில் ஒரு முறை சென்னைக்கு அழைத்தார். நலப் பணி புரியும் ஆர்எஸ்எஸ் அன்பர்களுடன் கலந்துரையாடல் ஏற்பாடானது. சென்னை செய்தியாளர்கள் மத்தியிலும் அண்ணா ஹசாரே தன் அனுபவத்தை சொன்னார். நாட்டில் நடந்த ஒரு நல்ல பணியைத் தமிழகம் அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சிகள் உதவின. ஆனால் அண்ணா ஹசாரே செய்த ஊரக மேம்பாடு என்பது எல்லோராலும் நடத்தக்கூடிய (replicable) பணி அல்ல என்று குறிப்பிட்ட சிவராம்ஜி, சாமானியர் ஒருவர் செய்யும் சேவையைப் பார்த்துவிட்டு சாமானியரான இன்னொருவர் மனதில், ’நாமும் இதுபோல சேவை செய்யலாமே?’ என்ற எண்ணம் ஏற்பட்டு அதை அவரால் செயல்படுத்தவும் முடிய வேண்டும் என்று விளக்கினார் சிவராம்ஜி.

** தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான சாமானிய சகோதர சகோதரிகள் சேவை செய்ய ஊக்குவித்து வந்த சிவராம்ஜி, தாமே கைப்பட செய்த ஒரு சேவை உண்டு. 1975 --77 நெருக்கடி நிலை காலகட்டத்தில் தலைமறைவாக இருந்த சிவராம்ஜி தினமும் இரண்டு பள்ளிச் சிறுமிகளுக்கு கணிதம் கற்பித்து வந்தார் (கணிதம் பட்ட மேற்படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றவர் அவர்!). இன்று அந்த இரண்டு சகோதரிகளில் ஒருவர் பாரத விமானப்படை அதிகாரியின் மனைவி; இன்னொருவர் தென்மாநிலங்களில் ஒன்றின் தலைநகரத்தில் வசிக்கும் தொண்டுள்ளம் கொண்ட ஆர்எஸ்எஸ் அன்பரின் இல்லத்தரசி.

Post a Comment

0 Comments