ஊரடங்கு காலத்திலும், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு : நிருபிக்கும் ஹரியானாவின் வல்லப்கர் மாவட்ட கிராமங்கள்.

அரசாங்கத்தை எதிர்பாராமல் ஹரியானாவின் வல்லப்கர் மாவட்டத்தின் 43 கிராமங்களுக்கு, கொரோனா கிருமி தங்கள் பக்கம் தலைகாட்டவிடாமல் பார்த்துக் கொள்வதில் வெற்றி! கடந்த 4 மாதங்களில், ஒரு நபர் கூட கொரோனா தொற்றுக்கு ஆளாகாமல் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு ஏழைக் குடும்பமும், ஊரடங்கு காலம் முழுவதும் ஒரு நாளைக்கு 3 முறை பசியாறும்படி கிராமவாசிகள் பார்த்துக் கொள்கிறார்கள். வல்லப்கர் கிராமவாசிகள் செய்த முயற்சி சுகாதார அவசரநிலையிலிருந்து தற்காத்துக்கொள்ள நினைக்கும் பல நகரங்களுக்கும் ஒரு படிப்பினை!

நாட்டின் எல்லா ஊர்களையும் போலவே,வல்லப்கர் கிராமங்களும் மார்ச் மாத இறுதியிலிருந்து ஊரடங்குக்குள் வந்தன. கிராமவாசிகள் மேற்கொண்ட முதல் பணி, தங்கள் கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு உணவளிப்பதே. முயற்சிகளை ஒருங்கிணைக்க அவர்கள் 300 தன்னார்வலர்கள் கொண்ட‌ குழுவை அமைத்தார்கள். மே 31 வரை 24,000 உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும், அரசாங்க உதவியின்றி, கிராமவாசிகளின் நன்கொடை ஆதரவினாலேயே மேற்கொள்ளப்பட்டன.

இந்த சேவையில் 1,000 க்கும் மேற்பட்ட முகக் கவசங்கள், பசு மாடுகளுக்கு தீவனம் ஆகியவையும் அடங்கும். இந்த கிராமங்களில் உள்ள மருத்துவர்கள், சுகாதார, தூய்மைப் பணித் தொழிலாளர்கள் போன்ற கொரோனா வீரர்களையும் தொண்டர்கள் குழு கௌரவித்தது.

தொற்றுநோயிலிருந்து பாதுகாத்தல்

டெல்லியில் பரவிய கொரோனா தொற்று குறித்து கிராமவாசிகள் அறிந்தவுடன், ஊர்த் தலைவர்களும் 43 கிராமங்களின் முக்கிய பெரியவர்களும் சந்தித்து பிரச்சினையை சமாளிக்க முடிவு செய்தனர். அந்த விஷயம், மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது, சாலைகள், நுழைவு இடங்கள் இவற்றில் கண்காணிப்புப் பணியை கிராமவாசிகள் ஏற்றுக்கொண்டனர்.
க‌டுமையான பரிசோதனை காரணமாக, அறிகுறிகளை மறைக்க முயன்ற 26 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். ஒவ்வொரு பார்வையாளரும் அல்லது இந்த கிராமங்களுக்கு வெளியில் இருந்து வரும் எவரும் முழுமையான ஆய்வு, நோயறி சோதனக்குப் பிறகுதான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு உதவி :

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து வல்லப்கர் மாவட்டத்தில் உள்ள தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு ஃபரீதாபாத்திற்கு அருகில் மாதா அம்ருதானந்தமயி (அம்மா) மெகா மருத்துவமனை கட்டுமானப் பணியிடத்தில் வேலை. மாவட்டத்தின் சில கிராமங்களில் 250 க்கும் மேற்பட்ட தினசரி ஊதியம் பெறுபவர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் இருப்பது திகாவலி கிராமத்தில். அவர்களில் பலர், ஊரடங்கு காரணத்தால், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை, உணவோ ரேஷனோ இல்லாமல் இங்கு சிக்கித் தவித்தனர். கிராமவாசிகளும் நீண்ட காலத்துக்கு பொறுப்பை சுமக்க முடியவில்லை.

கிராம தன்னார்வலர்கள், உடனடியாக அம்மா மருத்துவமனையின் அதிகாரிகளிடம் பேசி, ஊரடங்கு நீடிக்கும் வரை ஏழைத் தொழிலாளர்களுக்கு மருத்துவமனையே உணவு வழங்கிவர. ஏற்பாடு செய்தார்கள். உணவு, ரேஷன் விநியோகிக்கும் பணியை தன்னார்வலர்கள் மேற்கொண்டனர். 
தொழிலாளர் குடும்பங்களில், 35 குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் கோதுமை அறுவடை செய்யும் விவசாயத் தொழிலாளர்கள் என்பதையறிந்த தன்னார்வலர்கள், அவர்களுடன் பேசி கோதுமை அறுவடையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனர், இதனால, தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமும் கிடைத்தது; விவசாயிகளுக்கு வேலையாட்களும் கிடைத்தார்கள்.

Post a Comment

0 Comments