பல்லவரும் சோழரும் பாரதியும் போற்றிய காளிதாசர்!

கவிச் சக்கரவர்த்தி காளிதாசனைப் பற்றி “கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும், காளி தாசன் கவிதை புனைந்ததும்” என்று பாரதி பாடியது வியப்பே இல்லை. பல்லவன் முதல் சோழன் தொட்டு சிவாஜி கணேசன் வரை தமிழன் கொண்டாடிய கவியல்லவா காளிதாசன்? காரணம் என்ன? அதைப்பற்றி பிறகு பார்ப்போம். 

காளிதாசன் யார்? சமஸ்கிருத படைப்புலகில் தன்னிகரற்ற கவிஞன் காளிதாசன் மத்திய பிரதேசம் உஜ்ஜயினியை ஆண்ட போஜராஜனின் அரசவையில் அரச கவியாக விழங்கினார். குமார சம்பவம், ரகு வம்சம், மேகதூதம், இவை அனைத்தும் இவரது ஆளுமையை பறைசாற்றும் படைப்புகள். அகத்திணையில் பக்தியும் காதலும் பரிமளிக்க, புறத்திணையில் இயற்கை எழிலும் மரபும் சங்கமிக்க வாசிப்பவர்கள் இதய சிம்மாசனத்தில் இனிதே வந்து அமர்ந்துவிடுகிறார் காளிதாசன். பசுமரத்தாணி போல் தான் சொல்ல வரும் கருத்தை உவமை அணி பூட்டி வாசிப்பவர்கள் மனதில் மிக ஆழமாக பதிய வைப்பதில் இவருக்கு உவமை இவரே. ஒரு எடுத்துக்காட்டு: ரகு வம்சத்தில் ராமனின் கொள்ளுத் தாத்தா மன்னன் ரகு வயது முதிர்வு காரணமாக தனது ஆட்சியை தனது மகன் அஜனுக்கு வழங்கும் காட்சியை, கவிஞர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: குடும்பத்தில் மாமனார் மருமகளுக்கு உரிய மரியாதையும் தேவைக்கேற்ப ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். அதுபோல ஆட்சியில் தன் மகனே இருந்தாலும் அவருக்கேற்ற மரியாதை வழங்கி தேவைப்படும் பொழுது மட்டும் அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு குடும்பத்திலும் ஆட்சியிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பாய் உணர்த்துகிறார்.

பல்லவர், சோழர்

இப்பொழுது தமிழகத்திற்கு வருவோம்.. மகாபலிபுரத்தில் உள்ள பகீரதன் தபசில், மேல்தளத்தில் உள்ள யட்சர்களும் மலையை இரண்டாகப் பிளந்து நடுவில் ஓடும் கங்கையும், நதியின் உள்ளே உள்ள சர்ப்பங்கள், கரையின் ஒரு புறம் யானைகளும் அதன் குட்டிகளும் புலிகளும் நீர் அருந்த மற்றெரு கரையில் பகீரதன் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்ய அவருக்கு சிவபெருமான் அருள் புரிகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் பல்லவர்கள் காளிதாசனிடமிருந்து கற்றதையே தமது கற்பனையாக முப்பரிமாணத்தில் சிலையாய் வடித்துள்ளனர். பின்பு வந்த சோழர்கள் தங்களை ராமனின் வாரிசு என்று குறிப்பாய் உணர்த்துவதற்காக ரகுவின் வம்சம் என்று தங்களை கூறுவதற்குக் காரணம் காளிதாசரே!! பாரதத்தாயின் இயற்கை எழில்களையும் இமயமலையின் தோற்றத்தையும் கங்கை சிந்து யமுனையின் அழகையும் வர்ணித்த காளிதாசரை பாரதி பாடாமல போயிருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும். ஜார்க்கண்டில் பிறந்த தோனி எவ்வாறு நம்மவர் ஆனாரோ அதுபோலவே பல்லவன் முதல் பாரதி வரை அனைவரின் கற்பனைக்கும் ஆதாரமாய் விளங்கும் காளிதாசனும் நம்மவரே.

தாகூர்

தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர் கவி காளிதாசன் குறித்து வரைந்த நுட்பம் செறிந்த சொற்சித்திரம் இது: “காளிதாசரின் காலத்தில் பாரததேசம் செல்வம், இலக்கியம், கலை இவைகளிலே உயர்ந்திருந்தது போன்றே நாகரிகத்திலும் சிறந்திருந்ததாகப் புலனாகின்றது. ஆனால் இச்செல்வச்சிறப்பும், அதன் நுகர்ச்சியும், அமைதியும் தூய்மையும் வாய்ந்த தபோவனங்களினின்றும் தோன்றிய சிறந்த வாழ்க்கைக் கொள்கைகளுக்கு எதிராக இயங்கி வந்தன என்பதும் அவரது படைப்புகளிலிருந்து அறியப்படுகின்றது. படுபள்ளத்தை நோக்கி ஊர்ந்து செல்லும் பெரும் பனிச் சரிவுபோல் நாசத்தை நோக்கிச் செல்லும் பகட்டான இச்செல்வ வாழ்க்கையை குறித்துக் காளிதாசர் செய்துள்ள எச்சரிக்கையை அவரது பாடல்களிலே காணலாம். விக்ரமாதித்யனது சபையில் பல்வகைச் செல்வம் பொலிந்த சூழலில் இருந்த காளிதாசரின் உள்ளம், ஆத்ம நாட்டத்தை விருத்தி செய்துகொள்வதில் ஈடுபட்டிருந்த புராதன இந்தியாவின் எளிமையையும் தூய்மையையும் விரும்பியது. இத்தகைய விருப்பமே ரகுமன்னனது வம்சத்தில் தோன்றிய அரசர்களின் சரித்திரத்தைத் தமது காவியத்திற்குப் பொருளாகக் கொள்ளும்படி அவரை தூண்டியது. இக்காவியத்திலே அவர் மன்னர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் உள்ள சிறந்த தர்மத்தின் எழுச்சி, அவற்றின் வீழ்ச்சி இவைகளின் வரலாற்றையே பதிவிடுகிறார்”.

Post a Comment

0 Comments