தற்சார்பு பாரதத்தினாய் வா ! வா ! வா !

கொரோனா ஊரடங்கு காலத்தில், உலகம் பல அனுபவங்களை பெற்றிருக்கிறது. 

குறிப்பாக பாரதம், தனது கங்கை, தாமிரவருணி போன்ற வற்றாத நதிகளின் தூய்மையை மீட்டெடுத்திருக்கிறது. கொரோனா தீநுண்மி எதிர்ப்பில் பாரத பாரம்பரிய மருத்துவமுறைகளான, சித்தா, ஆயுர்வேத மருந்துகள் முக்கியப்பங்காற்றியுள்ளன.

 இதய நோய், நீரிழிவு நோய் தவிர்த்த மற்ற நோய்களுக்கான அலோபதி மருந்து,மாத்திரைகளின் 30 சதவிகித விற்பனை சரிவு,

 வீடுகளில், தாயகட்டை, பரமபத விளையாட்டுகள், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுதல், தொலைக்காட்சி பார்த்தல், சமையலில் நாட்டு காய்கறிகள், ஜங்க் உணவு வகைகள் தவிர்ப்பு என மக்கள் ஆரோக்கியம் மேம்பட்டிருக்கிறது. 

 போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு நாடும், தனது நாட்டிற்குள்ளேயே, தொழில் வணிகங்களை எவ்வாறு முன்னெடுப்பது பற்றி மிகத்தீவிரமாக யோசித்து களமிறங்க ஆரம்பித்துவிட்டன.

 இந்தியாவிலும், கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ளூர் வியாபாரிகள், இப்போதைக்கு இருக்கும் வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்று சிந்தனைசெய்ய துவங்கிவிட்டார்கள். 

 தற்போதைய பொருளாதார பின்னடைவை, சரிசெய்து கொள்ளதேசம், தற்சார்பை நாடுகிறது. 

 நாம் இழந்த பாரம்பரிய பொருளாதார முறைகளை, நவீன தொழில் நுட்பங்களுடன் இணைத்து, நமது பாரத தர்மத்தின் ஆன்மிக, கலாச்சார கூறுகளோடு, கடையனுக்கும் கடைதேற்றம் எனும் இடைநின்றுபோன நடைமுறையை மீட்டெடுக்க தற்சார்பு வழிவகுக்கும். 

எப்பொழுதெல்லாம் இந்தியாவின் மீது அந்நிய நாடுகள் பொருளாதாரத் தடைகள், ராணுவத் தாக்குதல்கள், எல்லையில் அத்துமீறல்களை நிகழ்த்துகிறதோ, அப்போதெல்லாம், சுதேசி பொருட்கள் பயன்படுத்துவது நாட்டு மக்களிடையே அதிகரிக்கிறது. விடுதலைப் போராட்டகாலங்களில், திலகர், வ.உ.சிதம்பரனார், மஹாத்மா காந்தியடிகள், ஜே.சி.குமரப்பா, காமராஜர், ராஜாஜி ஆகியோர் முன்னெடுத்ததுபோல், 1990களில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம், வெகு ஜன விழிப்புணர்வு மூலம், "இனிய இளநீர் இருக்க, அந்நிய கோக் எதற்கு" என்றெல்லாம் தேசத்தின் கதவுகளை தட்டியது நினைவுக்கு வருகிறது.

தேசத்தின் வளர்ச்சி என்பது கிராமங்களை ஆதாரமாகக் கொண்ட ஆன்மிக, கலாச்சார, பொருளாதார‌ வாழ்வியலை மேம்படுத்துவது என்பதில் உறுதிகொண்டு, அமைப்பு ரீதியாகவும், தனி நபர்களும், தேசத்தை நேசிக்கும் அனைவரும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். 

மதிப்பிற்குரிய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் முயற்சியால் “புரா” [PUARA – Providing Urban Amenities for Rural Areas ] எனும் திட்டம் 2004-ல் கொண்டுவரப்பட்டது.

2014 அக்டோபரில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தனது தொகுதியில், தனது சொந்த கிராமமில்லாமல், வேறு ஒரு கிராமத்தை தத்தெடுத்து 5வருஷங்களுக்குள் அந்த கிராமத்தை முன்மாதிரி கிராமமாக ஆக்க வேண்டும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.

கிராம விகாஸ் அதாவது கிராம மேம்பாடு எனும் ஏற்பாட்டின் மூலம் இமயம் முதல் குமரி வரை, கிராம மக்கள், வாழ்வாதாரங்களுக்காக நகரங்களுக்கு செல்வது தடுக்கப்பட்டு, அனைத்து வசதிகளையும் கொண்ட தற்சார்பு மாதிரி கிராமங்களாக எண்ணற்ற கிராமங்கள் உருவாகியுள்ளன.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த, தற்சார்பை நோக்கி முன்னேறமடைந்த முன்மாதிரி கிராமங்களில் சிலவற்றின் விபரங்கள் இங்கே:

1) அசாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள சந்தகுர்ச்சி கிராமம் இயற்கை வேளாண்மை,பஞ்சகவ்ய பொருட்களின் உற்பத்திக்காக, சுற்றியுள்ள 10 கிராமங்களின் வளர்ச்சி மையமாக மாறியுள்ளது. 

2) மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹத் கிராமம் இயற்கை வேளாண்மை, நீர் சேகரிப்பு, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை போன்ற விஷயங்களுக்காக, சுற்றியுள்ள ஐந்து கிராமங்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

3) சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள மிராக்பூர் கிராமத்தை பீடித்திருந்த‌ போதை பழக்கம் அறவே நின்றுவிட்டது.

4) உத்தராகண்ட் மாநிலத்தின் மானேரி தொகுப்பில் உள்ள 60 கிராமங்களிலும் மேம்பாட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

5) குஜராத்தின் சூரத்தில் உள்ள வனவாசி கிராமமான தேவ்கர், தன்னம்பிக்கை மிக்க, அற்புதமான பணிகளால், சுற்றியுள்ள 25 கிராமங்களில் மாற்றம் ஏற்படும் அளவுக்கு செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. 

6) ராஜஸ்தானின் ஜலாவ‌ர் மாவட்டத்தில் உள்ள மன்புரா கிராமம் இயற்கை வேளாண்மையில் நல்ல முன்னேற்றத்தை செய்துள்ளது. அதன் மாதிரியை, சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பின்பற்றியுள்ளன.

7) பீகார் மாநிலத்தின் ஹாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மண்டுவா கிராமம், படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கான முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. இங்கு படித்த, மண்டுவா கிராமத்தை சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ரயில்வே யிலும் ராணுவத்திலும் வேலை பெற்றுள்ளனர். 

8) மேற்கு வங்கத்தின் தாரகேஷ்வர் மாவட்டம் தாஜ்பூர் கிராமத்தில் கல்வியைப் பரப்புவதற்கான நல்ல பணிகள் செய்யப்பட்டுள்ளன. 

9) மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தின் தஹிக்வான் கிராமத்தில் உயிர் எரிவாயு பரிசோதனை மிகவும் வெற்றிகரமாக உள்ளது. 

10) மஹாராஷ்ட்ரம், ஷீரடி அருகில் உள்ள சனிசிங்க்னாபூரில் எந்த வீட்டிற்கும் பூட்டு கிடையாது; ஏனெனில் வீட்டிற்கு கதவுகளே கிடையாது. அங்கு இன்று வரை எந்தவித திருட்டுபயமும் கிடையாது. சனீஸ்வர பகவான், அந்த கிராமத்து மக்களை காக்கிறார் எனும் நம்பிக்கை எல்லோரிடத்திலும் ஆழமாக பதிந்துள்ளது.

இத்தகைய வளர்ந்த கிராமங்களின் பட்டியல் தென் மாநிலங்களில் மிகப் பெரியது. இயற்கை வேளாண்மையின் பணிகள் கர்நாடகாவில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கேரளத்திலும், கர்நாடகத்திலும் தலா 40 முன்மாதிரி கிராமங்கள் உள்ளன.

11) தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கங்க்தேவ்பள்ளி கிராமத்தில் உள்ளவர்கள் தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துவதில் முன்மாதிரியாக உள்ளனர். 

12) ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கடமு கிராமம் சிறுவர் சிறுமியர்களுக்கான பண்பாட்டு மையங்களுக்கு பிரபலமானது.

13) திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் கிராமம், சாதி வேறுபாடுகள் களையப்பட்டு 100 சதவீத கழிப்பறை, உள்ளூர் தொழில் வாய்ப்பு ஆகியவற்றில் முன்னுதாரண கிராமமாக உள்ளது.

14) வேலூர் மாவட்டம், காட்டுப்புத்துர் பஞ்சாயத்து 70 தடுப்பணைகளை கட்டி, நீர் மேலாண்மையில் சிறப்பிடம்பெற்றுள்லது; கிராம சபையில் அதிகமான மக்கள் பங்கேற்பதில் விழிப்புணர்வு கொண்ட கிராமமாக உள்ளது.

15) கோயம்புத்துர் மாவட்டம் ஓடந்துறை கிராமம், தேசிய மின் ’கிரிட்’டிற்கு மின்சாரத்தை விற்பனை செய்கிறது, 850 தொகுப்பு வீடுகள், 24 மணி நேர தண்ணீர் வசதி என்று நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது.

16) திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தினர், தங்கள் கிராமத்துக்கு ஒதுக்கிய நிதி போக , மக்களிடமிருந்து பாக்கி வைக்காமல் பெறப்படும் வரி வருவாயை வைத்து, தேவைப்படும் பிற திட்டங்களுக்கான செலவுகளை பூர்த்திசெய்கிறார்கள்.

17) திருப்பத்தூர் மாவட்டம், பீமகுளம் பஞ்சாயத்து பொதுத் தகவல் மையம் நிறுவி, பொதுமக்களின் தேவைகளை உரியவர்களுக்கு கொண்டு செல்வதில் முனைப்புக் காட்டுகிறது. தனிப்பட்ட முறையில் பேருந்து ஏற்பாடு செய்து, கிராமசபையில் பங்கேற்ற நிகழ்வு சமீபத்தில் நடந்தது.

இப்படி, 200க்கும் மேற்பட்ட முன்மாதிரி கிராமங்கள் இருக்கின்றன. 

இவையெல்லாம் ஒரு இரவில் நடந்திடவில்லை. ஆங்காங்கே தன்னலம் இல்லாமல், சமுதாய மாற்றத்தை வாழ்வின் நோக்கமாக கொண்ட சமுக செயல்பாட்டாளர்கள், மக்கள் ஒருங்கிணைப்புக் கலையை அனுபவ பூர்வமாய் கற்றுணர்ந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆகியோர், மக்களை ஒருங்கிணைத்து, பல வருஷங்கள் செய்த உழைப்பின் வெளிப்பாடுதான் இந்த முன்மாதிரி கிராமங்கள் !

இந்த சவாலான கொரோனா காலகட்டத்தில், இந்திய வணிக நிறுவனங்களும், சிறு, குறு தொழில் நிறுவனங்களும், விவசாயிகளும், அனைத்து மக்களும், நமது தற்சார்பு வலிமையை நிருபிக்கும் வாய்ப்பாக, உள்ளத்தில் வரித்துக்கொண்டு, அதற்கான முயற்சிகளை, நேர்மறையான எண்ணத்தால், சொல்லால், செயலால், வெளிப்படுத்தினால், வலிமையான, வளமோங்கிய, தற்சார்பு பாரதம், இந்த 2020ஆம் ஆண்டில், சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறுவது உறுதி !

வலிமையான - வளமோங்கிய - தற்சார்பு பாரதம் 2020

நம் ஒவ்வொருவரின் பொறுப்பு !

Post a Comment

0 Comments