நல்ல செய்தி - 7

பிறர் துன்பம் போக்குவதும் இறைவன் பூஜையே !
வார்த்தை ஜாலம் அல்ல ; செயலால் ஒரு பூஜை.

கொரோனா கிருமி சவாலை சந்திக்க, நமது அரசாங்கம்  மார்ச்  22 அன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அறிவித்தது. சென்னை மேற்கு மாம்பலத்தில் வயதான நிலையிலும் தொடர்ந்து புரோஹித வேலை செய்து வரும் பாலாஜி சாஸ்திரிகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டார். இருப்பினும்   இந்த சவாலான சூழ்நிலையில் மக்களுக்கு தன்னால் முடிகின்ற‌ ஏதாவது செய்யவேண்டும் என்று சிந்தித்துக்கொண்டே இருந்தவருக்கு, தொலைக்காட்சியில் அனைவரும் முகக் கவசம் அணியவேண்டும் என்ற தொடர் அறிவிப்புகளை கவனித்த சமயத்தில், ஹோமங்கள், பூஜைகள் சென்று வரும்போது கிடைக்கும் வேஷ்டி, ரவிக்கைத்துணி  இவற்றை முகக் கவசமாக செய்யலாமே என்று  தோன்றியது. தொழில் சரியாக இல்லாமல் கஷ்டப்படும் தையற் கலைஞரும் அவர் கண்ணில்பட, முகக் கவசம் தயார் செய்யும் வேலை ஆரம்பமானது. அருகே ஒரு மருந்துக்கடைக்காரரும் தன் பங்குக்கு இழுவை நாடா ஒரு பண்டில் தர, தினசரி 100 முகக் கவசம் தயாரானது. அப்படி தயாரான, மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணியாலான முகக் கவசங்களை அண்ணா நகர், பல்லாவரம், அம்பத்தூர் இப்படி தான் பயணிக்கும் இடங்களில் சிறிது நேரம் நின்று முகக்கவசங்கள் அணியாமல் செல்பவர்களுக்கு இலவசமாக கொடுத்தார்.  முகக் கவசம் வாங்கிக்கொண்டு காசு கொடுத்தவர்களிடம், காசை வாங்காமல், என் மனத் திருப்திக்காக வழங்குகிறேன் என அன்பாக மறுத்து விடுகிறார்.  கடந்த வருஷம் கோடையில் சென்னை தண்ணீர் பிரச்சினையில், தான் வசிக்கும் மாம்பலம் பகுதி வாழ் மக்களுக்கு தானாக முன்வந்து தண்ணீர் லாரி வரவழைத்து பொதுத்தொட்டியில் தண்ணீர் வழங்குவது போன்ற சேவைகளை செய்து வரும் பாலாஜி சாஸ்திரிகள், இதுபோன்ற இன்ன பிற பணிகளை செய்வேன், தொடர்ந்து செய்வேன் என்று கணீரென்று முழங்குகிறார்.

Post a Comment

0 Comments