அந்த 15 நாட்கள் - சுதந்திரத்தின் பொழுது தேசிய நிகழ்வுகள் - 8 (Those 15 Days)

அந்த 15 நாட்கள் 
ஆகஸ்ட் 8 1947
இந்த நாள் ஆவணி மாதத்தில் ('அதிக மாசம்' அல்லது 'புருஷோத்தம மாசம்') ஷஷ்டி.
காந்திஜியின் ரயில் பாட்னா நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அவரின் மனதில் நிறைய கவலைகள் குடிகொண்டிருந்தன. சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். சுதந்திரம் கிடைக்க சாத்தியகூறுகள் குறைவாக இருந்தபோதும் அனைவரின் மனங்களிலும் உற்சாகம் இருந்தது, ஆனால் இப்போதோ ஒரே வாரத்தில் சுதந்திரம் கிடைக்கப்போகிறது, ஆனால் மனதில் உற்சாகம் இல்லையே என்று ஏங்கி கொண்டிருந்தார் காந்திஜி.

"லாகூர் அகதிகள் முகாமில் மக்கள் துன்பப்படுவதை 2 நாட்கள் முன்பு தான் கண்டிருந்தார். முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் கிடைத்து விட்டதால், அவர்கள் ஹிந்துக்களை தாக்க வாய்ப்பில்லை. ஹிந்துக்கள் ஏன் பயந்து ஓடுகிறார்கள்? நான் எனது மீதி காலத்தை பாகிஸ்தானில் கழிப்பேன்" என்றெல்லாம் மனதில் அசை போட்டு கொண்டிருந்தார் 

காலை 6 மணியளவில் பாட்னா வந்தடைந்தார் காந்தி. அதே நேரம் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் புகைந்துக் கொண்டிருந்தது. 1918ல் உஸ்மான் அலி என்பவரால் துவக்கப்பட்ட இப்பல்கலைகழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் முஸ்லிம்கள். ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டதால், அவரது கையாட்கள் அங்கு படித்து வந்த ஹிந்து மாணவர்களை மிரட்ட ஆரம்பித்தார்கள். இவர்களை தாக்க முஸ்லீம் மாணவர்கள் ஆயுதங்களுடன் தயாராக இருப்பதாக தெரிய வர, சுமார் 300 ஹிந்து மாணவர்கள் பல்கலைகழகத்தை விட்டு வெளியேற தீர்மானித்தார்கள்.

________ _________ 

மும்பையில் வீரசாவர்க்கர் விமானம் மூலம் டில்லி செல்ல தயாராகி கொண்டிருந்தார். தேசத்திற்காக எத்தனையோ பேர் அனைத்தையும் தியாகம் செய்துள்ளனர், ஆனால் பலவீனமான அரசியல் தலைவர்களால் தேசம் துண்டாடப் படப்போகிறது. கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஹிந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் , அடித்து விரட்டப்படுகிறார்கள் போன்ற செய்திகளை கேட்டு அவர் மனம் பதறியது. அடுத்த நாள், ஹிந்து தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அதில் ஏதேனும் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்.
________ _________ 

அகோலா எனும் ஊரிலும் குழப்பம் நிலவி வந்தது. பஞ்சு உற்பத்தியில் சிறந்து விளங்கும் இந்த ஊரில் மராத்தி மொழி பேசுவோர் அதிகம். இவர்கள் தங்களுக்கென்று விதர்பா எனும் தனி மாநிலம் கேட்டு வந்தனர். அதே நேரத்தில் மராட்டியத்தின் மேற்கு பகுதியின் தலைவர்கள் ஒருங்கிணைந்த மஹாராஷ்ட்ரம் வேண்டும் என்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று கூடி இது குறித்து ஆலோசித்து வந்தனர். அதே நாளில் கொங்கண பிரதேசத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டம் டேராயி கிராமத்தில் மராட்டிய பள்ளி ஒன்று துவக்கப்பட்டது. 
--
டில்லியில் மதியம் மணி 12 அளவில் ஜோத்பூர் அரசர் கடம்பி சேஷாச்சாரி வெங்கடாச்சாரி வைஸ்ராய் வீட்டிற்கு வந்தார். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றிருந்த இவர் சிறந்த அறிவாளி. பிரிட்டிஷாரின் விசுவாசியாக இருந்ததால் இவருக்கு ராஜ மரியாதை கிடைத்தது. உணவுக்கு பின், வைஸ்ராயுடன் பேசும் போது, ஜோத்பூரை இந்தியாவுடன் இணைக்கப்போவதாக தெரிவித்தார் வெங்கடாச்சாரி.

ஜோத்பூரை பாகிஸ்தானுடன் இணைக்க பல வாக்குறுதிகளை வீசியிருந்தார் ஜின்னா. ஆனால் அவை எல்லாமே புரட்டு என்று உணர்ந்த ஜோத்பூர் மன்னர், மாகாணத்தை இந்தியாவுடன் இணைக்க சம்மதம் தெரிவித்தார். இது இந்திய தலைவர்களுக்கு சிறு நிம்மதியை தந்தது.
________ _________ 

ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைகழகத்தில் இருந்து 300 ஹிந்து மாணவர்கள் தப்பியதை அறிந்து நிஜாமின் கையாட்களான ரஜக்கர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெறியாட்டம் ஆடினர். ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. எதிர்த்தவர்களை சுட்டு தள்ளினார்கள் ரஜக்கர்கள். இதையடுத்து தாங்கள் ஒரு மாதமாக சந்தித்து வரும் கொடுமைகளை பட்டியலிட்டு நேருவிற்கும், மவுண்ட் பேட்டனுக்கும் தந்தி அனுப்பினார்கள் ஹிந்துக்கள்.
_______ _________ 

இந்தியாவில் மதியம் 3 மணி. லண்டனில் காலை 10 மணி. அங்கு வசிக்கும் சீக்கியர்கள் ஒரு குருத்வாராவில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். பஞ்சாபில் தங்கள் சகோதரிகளுக்கு நடக்கும் கொடுமைகளை தடுக்க என்ன செய்வது என்று யோசித்தனர். எல்லைகள் வகுப்பதில் சிக்கல்கள் நீடிப்பதால் , எந்தந்த பகுதிகள் இந்தியாவிற்குள் அடங்கும், எவை பாகிஸ்தான் பக்கம் இருக்கும் என்பது புரியவில்லை. சீக்கியர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ஒட்டு மொத்த பஞ்சாபும் இந்தியாவுடன் இணைந்தால் மட்டுமே சாத்தியம் என்று கூறி , இது தொடர்பான கோரிக்கையை இங்கிலாந்து பிரதமர் அட்லீயிடம் சமர்ப்பிக்க முடிவெடுத்தனர்.
_______ ____ 

பஞ்சாபின் தென்-கிழக்கு பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. வடமேற்கு பஞ்சாபிலிருந்து ஹிந்து மற்றும் சீக்கிய அகதிகள், உடைமை இழந்து, குடும்பத்தினர்களை இழந்து இங்கு வந்த வண்ணம் இருந்தனர்.

இவர்களின் சோகத்திற்கு யார் காரணம்?
________ _________ 

சாவர்க்கரின் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது, ஹைதராபாதில் ரஜக்கர்கள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்த போது, ஜோத்பூர் மன்னர் - மவுண்ட்பேட்டன் சந்திப்பு நிகழ்ந்துக்கொண்டிருந்த போது, காந்திஜி பாட்னாவில் மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கண்டு மாணவர்கள் கொதித்துக் கொண்டிருந்தனர், காந்திஜி அவர்களை சமாதானம் செய்துக்கொண்டிருந்தார். 

"ஆகஸ்ட் 15 அன்று ராட்டை சுற்றி கொண்டாடுங்கள், கல்லூரியை சுத்தமாக வைத்திருங்கள், தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. சர்வதேச அளவில் நாம் எதிர்க்க வேண்டும்" என்று.

பிரிவினை குறித்து காந்திஜியின் கருத்தை எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு இது நிராசையை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments