ஜாதி கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

ஜாதி கலவரத்தை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

தேர்தல் நாள் (18.4.2019) அன்று அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் விடுதலை சிறுத்தை கட்சியின் சின்னமான பானையை போட்டு இருவர் உடைத்தார்கள் என்பதற்காக, அவர்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் தாக்கி கேவலமாக பேசியுள்ளனர், அதன் பிறகு அது சாதி கலவரமாக மாறிவிட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன. அதுபோல முத்திரையர் சமூக பெண்களை கேவலப்படுத்தி சமூக ஊடகத்தில் விடியோ ஒன்று உலவவிட்டுள்ளார்கள். பொன்னமராவதியில் சாதி கலவரத்தை தூண்ட இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. மேலும், திருவள்ளூர் மாவட்டம் ஈக்காட்டுக்கண்டிகையில் பி.எஸ்.பி. கட்சியை சேர்ந்தவர்கள் பா.ஜ.க. வி.எச்.பி.யை சேர்ந்தவர்களை தாக்கியுள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் தமிழகத்தில் சாதி கலவரத்தை தூண்டி மக்களிடையே பிரிவினையை உண்டாக்கும் சதி.


அரசியல் கட்சிகளிடையே பிரச்னை என்றால் சாதி சாயம் பூசுவது எந்த விதத்தில் நியாயம்? இரு கட்சியினரிடையே பிரச்னையாக அது இருக்கலாம். ஆனால், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி இவர்கள் அரசியில் லாபம் அடைய முனைவது எவ்வளவு வெட்கக்கேடானது?!


தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், இந்து உணர்வுகளை புண்படுத்திய அரசியல்கட்சிகளுக்கு எதிராக, இந்து உணர்வு மேலோங்கியதை பொருத்துக்கொள்ள முடியாமல், சாதிய உணர்வுகளைத் தூண்ட இதுபோன்ற சதி செயல்களை செய்கிறார்களோ என சந்தேகிக்கிறோம்.


இந்த கலவரங்களில் தேவையில்லாமல் இந்து முன்னணியின் பெயரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியும் இழுத்துள்ளார்கள். இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்து முன்னணி, அரசியல் கட்சி அல்ல. இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலாச்சார அமைப்பு. இந்து முன்னணி, இந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் இயக்கம். இந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்காகவும் வாதாட, போராட, பரிந்து பேசும் இயக்கம். 


தேனியிலும், பொம்மிநாயக்கன் பட்டியிலும் இந்து சமுதாயத்தினர் தாக்கப்பட்டபோது, இந்த திருமாவளவன் எங்கு சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை தந்தது இந்து முன்னணி. அதுபோல, தஞ்சை திருபுவனத்தில் இராமலிங்கம், மத பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டபோது வாய் திறக்கவில்லையே... அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூற செல்வது கூட அரசியல் ஆதாயம் கெட்டுவிடும் என கீழ்த்தரமான சிந்திக்கும் அரசியல்வாதிகள் இவர்கள். இவர்கள் தான் இந்து சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க சாதி வெறியை தூண்டுகிறார்கள்.


மக்களை பிரித்து, சாதிய மோதலை ஏற்படுத்துவோர் யாராக இருந்தாலும் இந்து முன்னணி எதிர்த்து போராடும். இந்து சமுதாயத்தின் ஒற்றுமையே வலிமை, தேசத்தின் பாதுகாப்பு, இதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை.


நந்தினி கொலை வழக்கிலும் இந்து முன்னணி மீது அவதூறு பரப்பி. இந்துக்களிடம், கெட்ட எண்ணத்தை ஏற்படுத்த முயற்சியில் சில அமைப்புகள் ஈடுபட்டன. இந்து முன்னணி மீது அவதூறு பரப்ப, சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்ததை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


எனவே, இந்து முன்னணியின் மீது அவதூறு பரப்புவதை காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும். சாதி மோதல்களை உருவாக்க முனைவோரை, ஆரம்பத்திலேயே கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. சாதிய உணர்வுகளைத் தூண்டி, இந்து சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்போரிடம் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க இந்துக்களை, இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.


என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

Post a Comment

0 Comments