SETU-30

ஹிந்து சமுதாயம் குறித்து சிந்திக்க ஒரு கும்ப மேளா:
விஹிப-வின் தர்ம சன்சத்

பிரயாக்ராஜ் (உ.பி), பிப்ரவரி 1

“இன்று ஹிந்து சமுதாயத்தை பிளக்க பல்வேறு சதிகள் அரங்கேறி வருகின்றன, ஜாதி துவேஷம் பரப்பப்படுகிறது, இதற்கெல்லாம் தீர்வாக சமுதாயத்தில் சமரச உணர்வு, சமூகங்களிடையே நல்லிணக்கம், குடும்ப பிரபோதன் ஆகிய நடவடிக்கைகள் அவசியம். நம்மை விட்டு பிரிந்து போன சகோதரர்கள் தாய்மதம் திரும்ப தர்ம ஜாகரண் வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹிந்து சமுதாயத்திலிருந்து எவரும் மத மாறிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ஹிந்து சமுதாயத்தின் முன் உள்ள பணிகள் குறித்து விவரித்தார். பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 31 அன்று அனைத்து ஹிந்து சம்பிரதாயங்களின் துறவி பெருமக்களும் கூடியிருந்த பேரவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்திய ’தர்ம சன்சத்’ நிகழ்ச்சியில் சிறப்புரை யாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார். கேரள கம்யூனிஸ்ட் அரசு நீதிமண்றத் தீர்ப்பை மட்டுமீறிப் பயன்படுத்தி பக்தர்கள் அல்லாதவர்களை தந்திரமாக சன்னிதானத்திற்கு அழைத்துச் செல்கிறது, ஐயப்ப பக்தர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது. எனவே அங்கு சமுதாயம் போராட்டத்தில் இறங்கி உள்ளது. அந்தப் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம் என்று மோகன் பாகவத் சுட்டிக்காட்டினார். தர்ம சன்சத் மேடையில் 200 துறவிகளும் அரங்கத்தில் 3,000க்குமேற்பட்ட துறவிகளும் குழுமியிருந்தார்கள். மாநாட்டில் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் வி எஸ் கோகஜே, செயல்தலைவர் ஆலோக் குமார், சக சர்கார்யவாஹ் தத்தாத்ரேய, சக சர்கார்யவாஹ் டாக்டர் கிருஷ்ண கோபால் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். இரண்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

வாழ்க்கை இவர் போல வாழ்வதற்கே!
வாரங்கல் (தெலுங்கானா), பிப்ரவரி 1

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் 1938 ல் பிறந்த பி. சுரேந்தர் ரெட்டி எம்பிபிஎஸ் தேறினார். பத்து ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக பணிபுரிந்த பின் சொந்த ஊர் திரும்பினார். ஊர் மக்களுக்காக ஒரு கிளினிக் தொடங்கினார். 1976 ல் திருமணம். அதற்குப் பிறகு ஊரில் தீண்டாமையை ஒழிக்க பணி தொடங்கினார். தனது கிளினிக்கில் உதவியாளராக பட்டியல் சமூக அன்பரை நியமித்தார் ஊரிலிருந்த 100 ஆண்டு பழமையான ஒரு கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்தார். எல்லா சமூகத்தினரும் அங்கு பூசிக்க வகை செய்தார். 1982ல் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளி ஒன்றை தன் ஊரில் தொடங்கினார். அடுத்து ஒரு மருத்துவமனையை நிறுவினார் ஊர்மக்கள் விஜயதசமி திருவிழாவையும் அம்மன் பண்டிகையையும் விமரிசையாக கொண்டாடச் செய்தார். இந்தப் பணிகளால் இவரது ஊர் தீண்டாமையற்ற ஊராக மலர்ந்தது இவ்வளவும் இவர் சாதித்தது நக்சலைட் நச்சரவங்களின் நடமாட்டத்திற்கு நடுவே. 1999 ல் இவரது சேவை மையத்தை நக்சலைட்டுகள் குண்டு வீசித் தாக்கினார்கள். அடுத்த ஆண்டு இவரது கிளினிக்கும் நக்சலைட்டுகளின் வெறித்தனத்துக்கு இலக்கானது. இதற்கிடையில் இவர் ஹைதராபாத் சென்று சேவா பாரதி பணிகளில் ஈடுபட்டார். ஆரோக்கிய பாரதியின் அகில பாரதக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். இந்த பிப்ரவரி 16 அன்று சேவை செய்யவே சமர்ப்பணம் ஆன டாக்டர் சுரேந்தர் ரெட்டியின் வாழ்வைப் பாராட்டி கொல்கத்தா குமார சபா புஸ்தகாலயா அமைப்புஇவருக்கு 2019 க்கான விவேகானந்தா சேவா சம்மான் விருது வழங்க உள்ளது.

கண்மூடித்தனமான பிரச்சாரத்திற்கு பதிலடி: ’கமல தீபம்’
காக்கிநாடா (ஆந்திரப் பிரதேசம்), பிப்ரவரி 1

மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்று சிலர் வரிந்து கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்வது போல ஆந்திரப் பிரதேசத்திலும் நடக்கிறது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தூண்டிவிட்டு அங்கே நடக்கும் பிரச்சாரத்தில் மத்திய அரசு ஆந்திர மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற பல்லவி பாடப்படுகிறது. இதற்கு ஆக்கபூர்வமாக பதிலடி கொடுக்க அங்கே பாஜகவினர் திட்டமிடுகிறார்கள். 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் மத்திய அரசினால் பயன் அடைந்துள்ள ஒரு கோடிப் பேரின் வீடுகளுக்கு சென்று கோலம் போட்டு ’கமல தீபம்’ ஏற்றி வைத்து வீட்டு வர ஏற்பாடு செய்து வருகிறார்கள். அந்தக் குடும்பங்களிடம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்குவதும் கமல தீப நிகழ்ச்சியில் அடங்கும். இதற்காக மத்திய பிரதேசத்திலிருந்து ’கமலதீபங்கள்’ தருவித்திருக்கிறார்கள். பிப்ரவரியில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் பவன் பிரசாத் தெரிவித்தார்.

அட ராமா!
பாட்னா (பீஹார்) பிப்ரவரி 1

பிப்ரவரி 3 அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திமாநிலத் தலைநகர் பாட்னாவில் காங்கிரஸ் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். அதற்கான சுவரொட்டியில் ராகுல் ஜடா முடி தரித்து வில்லும் அம்பும் ஏந்தி ராமபிரான் கோலத்தில் காட்சியளிக்கிறார். இதை மாநில ஆளும் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் கண்டனம் செய்துள்ளன. ராமபிரான் வேடத்தில் ராகுல் காந்தி படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு ஹிந்துக்களின் சமய உணர்வை புண்படுத்தியதாக பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா உள்ளிட்ட 5 பேர் மீது சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்ப்பட்டுள்ளது. பாட்னாவின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, பிரியங்கா வாத்ரா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் படங்கள் உள்ளன. ராகுல் படத்தின் கீழே “அவர்கள் ராமநாமம் ஜெபித்துக் கொண்டிருக்கட்டும், நீ ராமனாக வாழ்க!” என்ற வாசகம் வேறு.

Post a Comment

0 Comments