SETU-28

காவி கட்டியவருக்கு பாரத ரத்னா
துமகூரு (கர்நாடகா), ஜனவரி 23 
“ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது அகில பாரத தலைவராக இருந்த ஸ்ரீகுருஜி கோல்வல்கர் அவர்கள் அண்மையில் காலமான சித்தகங்கா மடத்தின் தலைவர் சிவகுமார ஸ்வாமி அவர்களின் நெருங்கிய நண்பர். சமுதாய, ஆன்மீக விஷயங்கள் குறித்து இருவரும் கருத்துப் பரிமாறிக் கொள்வார்கள்” ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத், சிவகுமார ஸ்வாமிக்கு அஞ்சலி செலுத்துகையில் இவ்வாறு தெரிவித்தார். சங்கம் நடத்தும் பல்வேறு பணிகளுக்கு ஸ்வாமிஜியின் ஆசிகளும் ஆதரவும் வெகு காலமாக இருந்து வந்துள்ளதை மோகன் பாகவத் நினைவுகூர்ந்தார். 800 ஆண்டுக் கால பாரம்பரியம் உள்ள சித்தகஙகா மடம் கர்நாடகத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் 125 கல்வி நிலையங்களை நடத்தி, கல்வி உணவு உறைவிடம் எல்லாம் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக அளித்து அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி செய்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகுமார ஸ்வாமிக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அவரது மறைவுக்கு கர்நாடக அரசு 3 நாள் துக்கம் அனுஷ்டித்தது. கல்லூரி மாணவராக இருந்தபோதே 1930 ல் மடத்தின் பொறுப்பை ஏற்று துறவு வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவர் சிவகுமார ஸ்வாமி.

சந்தியுங்கள் இந்த நகரத் தந்தையை
சண்டிகர் (பஞ்சாப்), ஜனவரி 23
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்று மேயர் ஆகியுள்ள 46 வயது பாஜக மாநகராட்சி மன்ற உறுப்பினர் ராஜேஷ் காளியா பற்றி. செய்தி வழங்கிய பத்திரிகைகளில் ஒன்று, ராஜேஷ் மேயர் இருக்கையில் அமர மறுத்ததாகவும் ’நான் ஒரு மக்கள் சேவகன், ராஜா அல்ல’ என்று சொன்னதாகவும் சிறப்பாக குறிப்பிட்டிருந்தது. அப்படிப் பேசிய ராஜேஷ் யார் என்று பார்த்ததில், குப்பைக் காகிதம் பொறுக்கும் வேலை செய்து பன்னிரண்டாவது வகுப்பு வரை படித்த மனிதர் இவர் என்று தெரிய வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சண்டிகர் மாநகராட்சி குப்பைக் காகிதம் அகற்றும் வேலையை குப்பை பொறுக்கும் நபர் களிடமிருந்து எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவித்ததும் ராஜேஷ் தலைமையில் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த அறிவிப்பு கைவிடப்பட்டது. ஆர் எஸ் எஸ்ஸில் சேர்ந்த ராஜேஷ் பின்னர் பாஜக கவுன்சிலர் ஆனார். சண்டிகரில் உள்ள 1.27 லட்சம் வால்மீகி சமூகத்தினர் (அருந்ததியினர்) வாக்குகள் ராஜேஷின் வெற்றிக்கு வழி வகுத்தன என்று கூறப்படுகிறது.

அதர்ம அரசுக்கு சமுதாயம் சாட்டை
திருவனந்தபுரம் (கேரளா), ஜனவரி 23
சபரிமலையில் மகரவிளக்கு பூஜை முடிந்து நடை சாத்திய பிறகு மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சபரிமலை போராட்டக் குழுவினர் நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஜனவரி 20 அன்று நடந்தது அது சபரிமலையின் புனித பாரம்பரியத்தை ஒழிக்க தலைகீழாக நின்று பார்க்கிற கம்யூனிஸ்ட் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக அமைந்தது. அபூர்வமாக மாதா அமிர்தானந்தமயி அந்த மேடையில் வந்து திருக்கோயில் பாரம்பரியங்களை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் காணொளி மூலம் ஆதரவு தெரிவித்தார். மாநிலத்தில் உள்ள ஏராளமான துறவிகளும் பொதுமக்களும் மாநில அரசுக்கு அனுப்பிய செய்தி இதுதான்: ’ஹிந்துக் கோயில் மீது கை வைக்காதே’. அத்துமீறி சபரிமலை கோயிலில் நுழைந்ததாகக் கூறப்படும் கம்யூனிஸ்ட் கனகதுர்காவின் அண்ணன் பரத்பூஷன் அந்த கூட்டத்தில் ’என் சகோதரி ஹிந்து சமுதாயத்தை இழிவுபடுத்தி விட்டார், ஹிந்து சமுதாயத்திடம் அவர் மன்னிப்பு கோரினால்தான் வீட்டில் சேர்ப்போpம்’ என்று அறிவித்தார். கேரள மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் PEB மேனன், சபரிமலை போராட்டக் குழு தலைவர் நீதிபதி குமார், சசிகலா டீச்சர், பாஜக எம்எல்ஏ ஓ. ராஜகோபால், முன்னாள் காவல்துறை டிஜிபி சென்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

“கோமாதா கீ ஜெய்!” செக்குலர் முழக்கம் ஆகிவிட்டது!
ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), ஜனவரி 23
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. பாஜக ஹிந்து ஆதரவுக் கருத்து வெளியிட்டால் அதை வகுப்புவாதம் என்று . அந்தக் கட்சியினர் தூற்றுவது வாடிக்கை. இப்போது ஆட்சி செய்யும் காங்கிரசுக்கு ஹிந்து வாக்காளர்களை திருப்திப்படுத்தும் எண்ணம் வந்துவிட்டது போலிருக்கிறது. பசுவை தத்து எடுத்துக் கொள்கிறவர்களை குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் பாராட்டப் போகிறோம் என்று அறிவித்திருக்கிறது காங்கிரஸ் அரசு. தேர்தல் அறிக்கையில் கூட பசு காப்பகங்கள் கட்டித் தருவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தது காங்கிரஸ். ராஜஸ்தானில் தீவிர கோமாதா பக்தர்கள். அதிகம் என்பதை காங்கிரஸ் மறந்து விட முடியவில்லை என்பதுதான் விஷயம். முந்தைய பாஜக அரசில் பசு பாதுகாப்புக்கு என்று ஒரு அமைச்சர் இருந்தார். அதே நிலை இந்த ஆட்சியிலும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments