SETU-27

சந்தியுங்கள் ஹரிதாசுக்களை

விசாகபட்டினம் (ஆந்திரப் பிரதேசம்), ஜனவரி 18
தைப்பொங்கலுக்கு முன் தினம் வரும் போகி அன்று  நிறைவு பெற்ற மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் அதிகாலையில்  தம்புராவை மீட்டிக் கொண்டு வீதிதோறும் ஹரி நாம பஜனை செய்தபடி வருகிற ‘ஹரிதாசு’ கண்ணில் பட்டாலே புண்ணியம்  என்று  நம்பிக்கையுடன் வீட்டை விட்டு வெளியில் வந்து  பெண்மணிகளும் குழந்தைகளும்  ஹரிதாசு தலையில் வைத்திருக்கும் அட்சய பாத்திரத்தில் அரிசி சமர்ப்பிக்கும் காட்சி ஆந்திரப் பிரதேசத்திற்கே  அலாதியான ஒரு அடையாளம். அதிகாலையில் ஹரிதாசுவின் கம்பீரமான குரலில் சுவாமி திருநாமங்களை  கேட்டபடி கண் விழிப்பவர்களும் உண்டு. வீதிகளின் அமைப்பு குறைந்து போய் அடுக்கக (ப்ளாட்) கலாச்சாரம் வந்துவிட்ட பிறகு இந்தப் பழக்கம் குறைந்து விட்டதாக சில ஹரிதாசுகளுக்கு வருத்தம்தான். ஆனால் எத்தனையோ தலைமுறைகளாக  ஹரிதாசு விரதம் இருப்போர் குடும்பங்கள் அதை விட்டுவிடத் தயாராக இல்லை. மார்கழி மாதம் முழுதும் நாள்  பூராவும் அட்சய பாத்திரத்துடன் ஊரை வலம் வந்தாலும் 10 கிலோ அரிசி கூட சேர்வதில்லை என்பதற்காக மூதாதையர்கள் விட்டுச் சென்றுள்ள மரபை விட மனம் வரவில்லை. கூலித் தொழிலாளர்களாக இருப்பார்கள்,அட்சய பாத்திரத்தில் சேருவதுதான் அன்றைய தின சாப்பாடு; என்றாலும் பக்தி சம்பிரதாயத்தின் இந்த சமுதாய பரிமாணத்தை ஹரிதாசுக்கள் கட்டிக் காத்து வருவது தான் ஹிந்து பூமியின் தனிச்சிறப்பு.

’விவேகானந்த சரோவர்’ ஆகிறது ராஞ்சி ஏரி
ராஞ்சி (ஜார்க்கண்ட்) ஜனவரி 18
ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசின் முதலமைச்சர் ரகுபர் தாஸ், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 அன்று மாநில தலைநகர் ராஞ்சியில் படா  தாலாப் எனப்படும் ஏரியில் 33 அடி உயரம் உள்ள விவேகானந்தர் சிலையைத் திறந்து வைத்தார். சுமார் 3 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த சிலையின்  சுற்றுவட்டாரப் பகுதி  17 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இனி அந்த ஏரி விவேகானந்தர் சரோவர் என்று அழைக்கப்படும் என ரகுபர் தாஸ் அறிவித்தார். பாரதம் உலகின் தலைசிறந்த நாடு ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் பதிய வைக்கும் நோக்கத்துடன் ஸ்வாமிஜி சிலை நிறுவப்படுவதாக முதலமைச்சர் கூறினார். விவேகானந்தர் சிலையை நிர்மாணித்தவர் ராம் வன் சுதார் என்ற சிற்பி. இவர்தான் ராஞ்சியில் முன்னதாக நிறுவப்பட்ட வனவாசி மகான் பிர்சா முண்டா சிலையையும் உருவாக்கியவர்.

ஜேஎன்யுவில் விவேகானந்தர் சிலை
புதுடில்லி (டில்லி) ஜனவரி 18

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே என் யு) வளாகத்தில் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் திரட்டிய நிதியை கொண்டு சுவாமி விவேகானந்தர் சிலை ஒன்று நிறுவப்பட உள்ளது. இந்த செய்தியை கேட்டதும் அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர் மத்தியிலும் சட்டாம்பிள்ளைகளாகத் திரியும் இடது சாய்வு நபர்கள் எகிறிக் குதித்து எதிர்த்தார்கள். பல்கலைக்கழக நூலகத்திற்கு நிதி ஒதுக்காமல் சிலை வைப்பதா என்றெல்லாம் பொய்யும் புரட்டும் பரப்பிப் பார்த்தார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் உண்மை என்ன என்று அம்பலப்படுத்தியதும் எதிர்த்தவர்கள் வாலைச் சுருட்டி கொண்டார்கள். அந்த பல்கலைக்கழகம் கம்யூனிஸ்டுகளின் சொர்க்கமாக இருந்த காலம் மலையேறி விட்டது என்பதை அவர்கள் உணரவில்லை. அந்த பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர்  கன்னையா குமார் உள்ளிட்டோர் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு வழக்குகளை எதிர்கொள்ளும் காலம் இது என்பது தான் இன்றைய நிலவரம். 

அதிகரிக்கும் ரோஹிங்கியர் தலைவலி
கொச்சி (கேரளா), ஜனவரி 18
பாரத உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இலங்கையில்  தமிழர்கள்  கொடுமைப்படுத்தப்பட்டதால் அவர்களுக்கு பாரதம் புகலிடம் தந்தது. திபெத் நாட்டில் கொடுமைக்குள்ளான திபெத்தியர்களை அகதிகளாக பாரதம் ஏற்றது. ஆனால் ரோஹிங்கியர்கள் பர்மாவிலிருந்தும் வங்க தேசத்திலிருந்தும் வரும் சட்ட விரோத குடியேறிகள்” என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். அசாம், மேற்கு வங்க மாநிலங்களிலிருந்து தெற்கு நோக்கி வரும் 14 ரயில்களில் வரக்கூடிய ரோஹிங்கியர்களை தடுத்து உள்ளூர் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்  என்று கடந்த செப்டம்பரில் ரயில்வே பாதுகாப்புப் படையின் தென் மாநிலப் பிரிவினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இப்போது கொச்சி வட்டார கடல் பகுதி வழியே ரோஹிங்கியர்கள் தொடர்ந்து ஊடுருவுவதை அடுத்து பல வித கடத்தல்கள் அதிகரித்திருப்பது கேரள காவல் துறைக்கு கவலை தருகிறது. கடந்த செப்டம்பரிலேயே மத்திய உள் துறை இது பற்றி கேரள அரசை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments