SETU-6

டேராடூன் (உத்தராகண்ட்) டிசம்பர் 8
ரிஸ்பானா நதி ரிஷிபர்ண நதி ஆகும்


கேதார்நாத் என்ற திரைப்படம் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் திரையிடப்படாமல் தடை செய்யப்பட்டுள்ளது முஸ்லிம் இளைஞனும் ஹிந்து யுவதியும்காதலிப்பதை (லவ் ஜிஹாத்?) சித்தரிக்கும் கதை கொண்ட படத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பது தடைபோட காரணமாக அமைந்தது. இது மாநிலத்தில் பெரிய விஷயம் ஒன்றும் அல்ல. மாநிலத்தின் தலைநகர் டேராடூன் வழியே பாய்கிற ரிஸ்பானா நதி இன்று சாக்கடை ஆகிவிட்டிருக்கிறது. அந்த நதியை புத்துயிர் பெறச் செய்ய பல கட்டங்களாக திட்டமிட்டு மாநில பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. கங்கை நதியின் கிளை நதியான ரிஸ்பானா (ரிஷிபர்ண) நகரத்தின் கழிவுநீர் கலந்து சென்னையின் கூவம் போல ஆகி விட்டது. முதல்கட்டமாக நதியில் கலக்கும் 180 சாக்கடைகள் திருப்பிவிடப்பட்டு பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்பட்டன. நதிக்கரை நெடுக மரம் நடும் இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஈடுபடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன் இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் (ITBP) படை வீர்ர்கள் நதி மீட்பு திட்டத்தில் கை கொடுத்தார்கள். கடந்த வாரம் புதிதாக ஆயிரம் பேர் ஹோம் கார்டு படையில் சேர்க்கப்பட்டார்கள். இவர்களும் ரிஸ்பானா நதிக்கு புத்துயிரூட்டும் திட்டத்தில் இணைவார்கள் என்று அமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் அறிவித்தார் (மாநிலம் நெடுக ஏற்கெனவே 5,300 ஹோம் கார்டுகள் பணியில் இருக்கிறார்கள்). எப்போதும் போல கோடானுகோடி ஹிந்துக்கள் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட ஹிமாலயத் திருக்கோயில்களை தரிசித்து புண்ணியம் பெறுகிறார்கள். கேதார்நாத் திரைப்பட தடையை வைத்து இந்த எல்லை மாநிலத்தில் பரபரப்பு உண்டாக்கிவிட எப்போதும் போல் பொறுப்பற்ற ஊடகங்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கின்றன

சூரத் (குஜராத்) டிசம்பர் 8
ஜிதேந்திராவுக்கு  “வேண்டப்பட்ட” குடும்பங்கள் 3,000
“தேசத்திற்காக நீங்கள் புரிந்த தியாகத்தை நான் என்றும் நன்றியுடன் நினைப்பேன்.உங்கள் புதல்வரின் உயிர்த்தியாகம் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்று நம்புகிறேன்” -- இது தேசத்தைக் காக்கும் போரில் உயிர்த்தியாகம் செய்த பூபேந்திர ஜாட் என்ற ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ஜிதேந்திரசிங் குர்ஜர் எழுதியுள்ள கடித வாசகம். சூரத் நகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி பணி புரியும் 40 வயது ஜிதேந்திரா கடந்த 20 ஆண்டுகளில் இது போல 3,000 கடிதங்கள் எழுதியுள்ளார். எல்லாம் அஞ்சலட்டைகளில். அன்பும் பாராட்டும் நிறைந்த வாசகங்களுடன். பாரதத்தின் எல்லா பகுதிகளுக்கும். 1999 கார்கில் யுத்தத்தின் போது இது போல நமது ராணுவ வீரர்களது குடும்பங்களின் தியாகத்திற்கு மரியாதை செய்து எழுதி வருகிறார். “நாம் பாதுகாப்பாக வாழ்வதற்காக தங்களுடைய உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை நாம் மறக்கக்கூடாது. அவர்களுடன் நன்கு பழகி வருவது நமது கடமை” என்கிறார் ஜிதேந்திரா. இதே உணர்ச்சி உந்துதலால் அவர் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த 20,000 வீரர்கள் பற்றி செய்தித்தாள்களில் இருந்தும் பல்வேறு நூலகங்களில் இருந்தும் தகவல் திரட்டியுள்ளார். உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களை நேரில் சென்று. சந்தித்தும் இருக்கிறார். ராணுவ வீரர்களின் குடும்பங்களை உள்ளூர் அன்பர்கள் ஆங்காங்கு நல்ல தொடர்பில் வைத்திருக்க வேண்டும் என்று பாரத பிரதமர் சொற்பொழிவு ஒன்றில் கூறியிருந்தார். ஜிதேந்திரா போல் பலர் அதை தங்கள் வாழ்வின் முக்கிய பணியாக ஏற்றெடுத்திருப்பது இப்போது தெரியவருகிறது.

புது டில்லி (டில்லி) டிசம்பர் 8

மீசைக்குப் பழுதில்லாமல் கூழ் குடிக்கும் வித்தை

 ’கம்பங் காட்டுக் காவலுக்கு போனேன், தம்பிக்கு பெண் பேசி முடித்தேன்’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அந்தக் கதையாக அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசு ஒரு தீர்த்த யாத்திரை திட்டத்தை அறிவித்து இருக்கிறது. டெல்லியிலிருந்து மதுரா, ரிஷிகேஷ், ஹரித்வார், அமிர்தசரஸ், வாகா எல்லை, ஜம்மு வைஷ்ணோ தேவி கோயில் என்று புனிதத் தலங்கள் எல்லாம் இந்த தீர்த்த யாத்திரை திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. திட்டத்தை தொடங்கி வைக்கும் போது “எங்கள் அரசுக்கு மூத்த குடிமக்கள் மீது மரியாதையும் அன்பும் உண்டு” என்கிறார் கேஜ்ரிவால். விஷயம் அதுஅல்ல. இந்த இலவச பயண திட்டத்தில் டெல்லியில் உள்ள 7சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் தலா 1100 டெல்லிவாசிகள் (மூத்த குடிமக்கள்) தேர்வு செய்யப்பட்டு சேர்க்கப்படுவார்கள். இதற்கு விண்ணப்பம் எல்லாம் ஆன்லைனில் என்கிறார்கள். ஆனால் ஒரு விண்ணப்பதாரர் டெல்லிவாசி தான் என சான்று அளிப்பவர் அந்தந்த பகுதி எம்எல்ஏ மட்டுமே. ஆண்டுக்கு 77,000 மூத்த குடிமக்கள் இந்த இலவச பயண திட்டத்தில் பயன்பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் கேஜ்ரிவால் அரசு தனது பக்தியை இப்படி பறைசாற்றிக் கொண்ட மாதிரியும் ஆயிற்று, திட்டத்தில் தொகுதி, எம்எல்ஏ என்ற சொல்லாடல்களால் ஓட்டுக்கு வலைவீசிய மாதிரியும் ஆயிற்று – மக்கள் வரிப் பணத்தில். 2020 பிப்ரவரியில் டில்லி மாநிலம் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தாக வேண்டுமே?

புவனேஸ்வர் (ஒரிசா) டிசம்பர் 8

அபராஜிதா சாரங்கி, ஐஏஎஸ், பாஜகவில்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்பு அங்கம் வகித்த பிஜு ஜனதா தளம் ஆளும் ஒரிசா மாநிலம் 2019 லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. முதலமைச்சர் நவீன் பட்நாயக் நம்பிக்கை நிறைந்தவராக காட்சியளித்தாலும் நடக்கும் பல சம்பவங்கள் வேறு கதை சொல்கின்றன. ஒரிசா ஐஏஎஸ் அதிகாரி அபராஜிதா சாரங்கி, அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது மத்திய அமைச்சரும் ஒரிசா பாஜக பிரமுகருமான தர்மேந்திர பிரதான் உடனிருந்தார். முன்பு புவனேஸ்வர் மாநகராட்சி ஆணையர் பதவி வகித்தபோது அபராஜிதா நகரின் தூய்மையை, சீரான போக்குவரத்தை தனது நேரடி தலையீட்டால் கட்டிக் காப்பாற்றி நல்ல பெயரெடுத்தார். இவரது கணவர் சாரங்கியும் ஒரிசா அரசு ஐஏஎஸ் அதிகாரியாக உள்ளவர்தான்.11ஆண்டுக்காலம் ஐஏஎஸ் அதிகாரியாக (அதில் ஐந்தாண்டுகள் மத்திய அரசுப் பணியில்) செயல்பட்ட பின் அபராஜிதா அரசியலில் ஈடுபடுவது ஏன் என்று கேட்கப்பட்டபோது மக்களுக்கு சேவை செய்வேன் என்று அவர் பதிலளித்தார். மூத்த பாஜக பிரமுகர்களான சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி ஆகிய பெண்மணிகள் தேர்தல் அரசியலில் இருந்து. ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள வேளையில் அபராஜிதாவின் பாஜக பிரவேசத்தை பலரும் ஆர்வத்துடன் கவனிக்கிறார்கள்.

Post a Comment

0 Comments