SETU-15

பக்தைகள் மட்டுமே இழுக்கும் திருத்தேர்
தாவணகெரே (கர்நாடகா), டிசம்பர் 18
தாவணகெரே மாவட்டம் யர்ககுனண்டே கிராமத்தில் ஸ்ரீ கரிபஸவேஸ்வர சுவாமி கத்திகே மடத்தின் நிர்வாகி பரமேஸ்வர சுவாமி எட்டு ஆண்டுகளாக பெண் பக்தர்களுக்கு மனநிறைவு ஏற்படுத்தும் விதத்தில் கரிபஸவேஸ்வர சுவாமி கோயில் தேரை பெண்கள் மட்டுமே இழுக்க வேண்டும் என்ற முறையை கடைபிடித்து வருகிறார். இந்த ஆண்டு டிசம்பர் 1, 2 தேதிகளில் அந்த தேர்த்திருவிழா நடைபெற்றது. ஊருக்குள் அரை கிலோ மீட்டர் தொலைவு தேர் அசைந்தாடிச் சென்று மக்கள் அனைவரையும் ஈர்த்தது .பெண் பக்தர்களுக்கு எப்போது தேர் திருவிழா வரும், நாம் சேர்ந்து தேர் இழுக்கலாம் என ஆர்வம் அமோகமாக உண்டு. “தேரின் வடம் பிடிக்க எனக்கு கொள்ளை ஆசை. தேர் இழுக்கும் போது காயம் ஏற்பட்டால் ஆண்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. பெண்களோ பொருட்படுத்த மாட்டோம். ஏனென்றால் நாங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்ற தேர் வடம் பிடிக்கிறோம்” என்கிறார் சுரேகா என்கிற பக்தை.“பிள்ளை வரம் வேண்டுகிறவர்கள் தேர் வடம் பிடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பிக்கை உண்டு” இது ரேகா என்கிற இன்னொரு பக்தை தரும் தகவல். தேர் இழுக்க எங்களுக்கு பயிற்சி ஒன்றும் கிடையாது. பக்தியோடு வடம் பிடிப்போம். தேர்த்திருவிழாவின் போது இத்தனை ஆண்டுகளில் ஒரு அசம்பாவிதமும் நடந்தது கிடையாது” என்கிறார் சரோஜா என்கிற பக்தை. மத சம்பிரதாய சடங்குகளில் பெண்கள் பங்கேற்பதில் எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் பரமேஸ்வர சுவாமி, “எப்போது கோயிலுக்குப் போகலாம் என்பது பெண்களுக்கு தெரியும்” என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

விமானப்படை விமானத்திற்கு காட்டாமணக்கு எரிபொருள்
சண்டிகர் (பஞ்சாப்),   டிசம்பர் 18
காட்டாமணக்கு (ஜட்ரோபா) செடியிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதை டூவீலர், கார், ரயில் என்ஜின், போன்ற போன்ற வாகனங்களில் எரிபொருளாக உபயோகப்படுத்த பல கட்டங்களில் பரிசோதனை நடந்து வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட காட்டாமணக்கு எண்ணைய் சேர்ந்த எரிபொருள் கொண்டு விமானங்களை ஓட்டலாமா என்ற பரிசோதனையில் பாரதம் வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்டில் உற்பத்தி ஆகும் காட்டாமணக்கு எண்ணெய் சண்டிகர் கொண்டு செல்லப்பட்டு அங்கு அது சுத்திகரிக்கப்பட்டு ஆய்வுகளுக்குப் பின் விமான பெட்ரோலில் சேர்க்கப்படுகிறது. திங்கள்கிழமை (டிசம்பர் 17) அன்று விமானப்படை விமானம் ஒன்று காட்டாமணக்கு எண்ணெய் கலந்த எரிபொருள் பயன்படுத்தி பரிசோதனை முறையில் பறக்கவிடப்பட்டது. சண்டிகரில் இருந்து பறக்கவிடப்பட்ட. ஏ.என் 32 ராணுவ பயணியர் விமானத்தை பாரத விமானப்படை வீரர்கள் ஓட்டிக் காட்டினார்கள். இந்த ஆண்டு ஜூலையில் இருந்து பாரத விமானப்படை சுதேசி எண்ணெய் கலந்த விமான எரிபொருள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. திங்களன்று பறந்த விமானப்படை விமானத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை உருவாக்குவதில் இந்திய விமானப் படையுடன் ராணுவ ஆராய்ச்சி மேம்பாடு அமைப்பு (டிஆர்டிஓ), அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், (சிஎஸ்ஐஆர்) உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டன. ’பயோஜெட” எனப்படும் காட்டாமணக்கு எண்ணெய் கலந்த சுதேசி எரிபொருள் பயன்படுத்தி விமானம் செலுத்தப்படுவது பாரதத்தில் இதுவே முதல் முறை. ஜனவரி 26 குடியரசு தினத்தன்று 10 சதவீத பயோஜெட் கலந்த எரிபொருள் பயன்படுத்தி விமானங்களை ஓட்டிக் காட்ட விமானப் படை ஆயத்தம் செய்து வருவதாகத் தெரிகிறது.

சத்தீஸ்கரின் ராமலிங்க வள்ளலார்: குரு காஸீ தாஸ்
ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), டிசம்பர் 18
சத்தீஸ்கர் மாநிலத்தில் காஸீதாஸ் (Ghasi Das) என்ற மகான் 1756 ம் ஆண்டு அவதரித்த தேதி டிசம்பர் 18. ராய்ப்பூர் அருகே கிரோத் என்ற ஊரில் பிறந்த இவர் தந்தை பெயர் மங்கஹூ தாஸ். தாயார் அமரௌதின். மனைவி ஸபூரா. சிறு வயதிலேயே காஸீ தாஸ் மனதில் ஆன்மீக நாட்டம் ஏற்பட்டது.அவர் வாழ்ந்த காலத்தில் தீண்டாமையும் ஏற்றத் தாழ்வும் மலிந்திருந்தது. சகோதர உணர்வு, நல்லெண்ணம் இப்பண்புகளை குரு காஸீ தாஸ் மக்கள் மனதில் பதிய வைக்க அரும்பாடுபட்டார். சாத்வீக முறையில் வாழ்க்கை நடத்துமாறு மக்களுக்கு உபதேசித்த அவர் சத்தியம் தேடி தவம் செய்தார். தவத்தால் அடைந்த ஆற்றலை மக்கள் சேவையில் அவர் செலவிட்டார். லட்சக்கணக்கான மக்கள் அவரது பக்தர்கள் ஆனார்கள். ’ஸத்நாம் பந்த்’ என்ற அமைப்பு உருவானது குரு காஸீ தாஸின்7 கருத்துரைகள் ’ஸத்நாம் பந்த்’ அமைப்பபின் ஸப்த சித்தாந்தமாக எங்கும் பரவி நிலைத்தன. குரு காஸீ தாஸ் ஜெயந்தி டிசம்பர் 18 தொடங்கி ஒரு மாத காலம் சத்தீஸ்கர் முழுதும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திங்கள் அன்று மாலையில் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட காங்கிரஸின் பூபேஷ் பாகேலா குரு காஸீ தாஸ் ஜெயந்தியை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அந்த மகானின் உபதேசம் இன்றைக்கும் சமுதாயத்திற்கு உகந்ததாக விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.

தேன் தருவதுடன் விவசாயிக்கு இன்பத்தேனும் தரும் தேனீக்கள்
மாவேலிக்கரா (கேரளா), டிசம்பர் 18

தேனீக்களை வரவேற்பதற்காகவே ஒரு பூங்கா உருவாக்கப்படுகிறது. அதற்காகவே தெரிவு செய்யப்பட்ட  100 வகை மரம் செடி கொடிகள்  அங்கே வளர்க்கப்படுகின்றன. எல்லாமே பூப்பூக்கும் வகை தாவரங்கள். பூவில் தேன் எடுக்க வரும் தேனீக்களுக்கு இதைவிட சொர்க்கம் இருக்கமுடியுமா?  ஆனால் இந்த பூங்கா உருவாக்கப்படுவது முக்கியமாக தேனீ  வளர்ப்போருக்குப் பயிற்சி கொடுப்பதற்காக. ஆலப்புழை அருகில் உள்ள மாவேலிக்கரையில் கோச்சாலமூடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த பூங்கா டிசம்பர் 20 அன்று  திறந்து வைக்கப்பட உள்ளது. சீமைக் கொன்றை,   வேலிப் பருத்தி,  தொட்டால் சிணுங்கி, இரும்பன் புளி, நாவல்,  கற்றாழை, கீழாநெல்லி உள்ளிட்ட தாவரங்கள் உயர்ந்த ரக தேன் தருபவை  என்பதால் இது போன்ற தாவரங்களைப் பூங்காவில் வளர்ப்பதாக கேரள மாநில பண்ணைப் பொருள்கள்   கார்ப்பரேஷன் அதிகாரி வி.எஸ் மது தெரிவித்தார். இந்த பூங்காவிலேயே தேனீ வளர்ப்புக் கூட்டமைப்பு பயிற்சி மையம் செயல்படுகிறது. நாடு முழுவதிலுமிருந்து 3,000 தேனீ விவசாயிகள் பயிற்சி பெறுகிறார்கள். தேனீ வளர்ப்பு தேனுக்காக மட்டுமல்லாமல் விவசாய சாகுபடி மேம்படுவதற்கும் உறுதுணையாக உள்ளது. பயிரின் அயல்  மகரந்தச் சேர்க்கையை தேனீக்கள் விரைவுபடுத்துவதால்  மகசூல் மேம்படுகிறது. எனவே விவசாயிகளும் தேனீ வளர்ப்பில் அக்கறை காட்டுகிறார்கள். இந்தப் பயிற்சி மையத்தில் தேனீ வளர்ப்புக்கு தேவையான வெவ்வேறு வித தேன்கூடுகள்  உள்ளிட்ட உபகரணங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. தேனீ வளர்ப்பு குறித்த ஒரு அருங்காட்சியகமும் இங்கு அமைய இருப்பதாகத் தெரிகிறது.

Post a Comment

0 Comments