SETU-14

போபால் (மத்தியப் பிரதேசம்), டிசம்பர் 17
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக – சுதேசி விதையின் சேதி!
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் வசிக்கும் பூரணா சங்கர் வீட்டுக்கு திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் வரும். அந்த நிகழ்ச்சிகளில் அவர் போய் பரிசளிப்பது எதைத் தெரியுமா? விதைப் பொட்டலம்! அது சுதேசி ரக விதை. ஹைபிரிட் எனப்படும் கலப்பின விதையை விவசாயிகள் பயன்படுத்துவதை தவிர்க்கச் செய்து, சுதேசி விதைகளை நாடச் செய்வது பூரணா சங்கரின் அற்புத பொழுதுபோக்கு. எட்டு ஆண்டுகளாக அவருக்கு இந்தப் பொழுதுபோக்கு. சுதேசி விதை விதைத்தால் சாதகமில்லாத தட்பவெப்பம், பாசனம் போன்ற சூழலிலும் பயிர் தாக்குப்பிடிக்கும். சுதேசி விதை சாகுபடிக்கு ரசாயன உரம் தேவையில்லை. அதாவது இயற்கை வேளாண்மைக்கு மாறுங்கள் என்பதுதான் பூரணா சங்கர் விதை பரிசுப் பொட்டலம் விடுக்கும் அறைகூவல். மாநிலத்தில் இவர் போல சுதேசி விதை ஊக்குவிக்கும் அன்பர்கள் அதிகரித்து வருகிறார்கள். ’நவதான்யா’ என்ற அமைப்பை நடத்திவரும் புகழ்பெற்ற உத்தராகண்ட் சூழலியல் நிபுணர் வந்தனா சிவா, மகாராஷ்டிர மாநிலம் வர்தா நகரில் அமைந்துள்ள ’மகன்’ அருங்காட்சியகத்தார் ஆகியோர் தான் பூரணா சங்கருக்கு ஊக்கம் தந்தவர்கள். சுதேசி விதை மூலம் முளைக்கிற நாற்றுகளையும் பூரணா சங்கர் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். இதுபோன்ற முயற்சிகளால் மாநிலத்தில் இயற்கை வேளாண்மை மீது விவசாயிகள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உலகத்திலேயே இயற்கை வேளாண்மை செய்கிற விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள் என்று அண்மையில் ஒரு சர்வதேச ஆய்வு தெரிவித்ததில் வியப்பில்லை.

பிரயாகை (உத்தரப் பிரதேசம்), டிசம்பர் 17
வருகிறது பிரயாகை கும்பமேளா:
நீர்வழிப் போக்குவரத்தை நாடறியச் செய்ய வாய்ப்பு
வருகிற தைப்பொங்கல் (2019 ஜனவரி 15) அன்று உத்தரப் பிரதேசம் பிரயாகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடும் புனித சங்கமத்தில் கும்பமேளா தொடங்கும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா விழா பொதுவாக 55 நாட்கள் நீடிக்கும். இந்த முறை 15 கோடி பேர் கும்பமேளாவுக்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. விழாவில் பக்தர்கள் நீராட நதிக்கரையில் நான்கு வெவ்வேறு கட்டங்கள் உண்டு. இந்த கட்டங்களுக்கு இடையே பக்தர்களை நீர்வழி போக்குவரத்து மூலம் அழைத்துச் செல்ல பாரத அரசும் உத்தரப் பிரதேச அரசும் திட்டமிட்டுள்ளன. இதற்காக கஸ்தூர்பா, கமலா என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு சிறு கப்பல்கள் தருவிக்கப்படும். ஏராளமான படகுகளும் இருக்கும். இது தவிர பக்தர்கள் காசி சென்று வருவதற்கும் நீர்வழிப் போக்குவரத்து வசதி செய்யப்படுகிறது. பிரயாகை-காசி 60 கிலோமீட்டர்..16 பயணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு மீட்டர் ஆழமுள்ள தண்ணீரில் பயணப்படக்கூடிய ஏர்போட் (பறக்கும் படகு) போக்குவரத்து வசதியை ரஷ்ய நிறுவனம் ஒன்று செய்து தரஇருக்கிறது. இத்ற்காக காசி முதல் பிரயாகை வரை கங்கையை ஒரு மீட்டர் ஆழம் இருக்குமாறு தூர்வாரும் பணி நடைபெறுகிறது. தேசத்தின் தலைநகர் டெல்லியில் உள்ள பல்வேறு தேசங்களின் தூதரக தலைமை அதிகாரிகள் 70 பேர் கும்பமேளா ஏற்பாடுகள் நடப்பதைப் பார்த்ததற்காக பிரயாகை சென்றுள்ளனர். கும்பமேளா செலவு 4,200கோடி ரூபாய் என்று உத்தரப் பிரதேச அரசு மதிப்பிட்டுள்ளது இதில் பாதி வரை மத்திய அரசு வழங்கும் என்று தெரிகிறது.

ஜகன்னாத புரி (ஒடிசா), டிசம்பர் 17
சாமிக்கே கூட ஆன்லைனில் திருமண அழைப்பு!

ஜகன்னாத புரி திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் கிருஷ்ணர் சுபத்திரை பலராமர் பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலும் உலகின் பல பாகங்களிலும் கூட வசிக்கிறார்கள். வீட்டில் திருமணம் முதலிய சுப நிகழ்ச்சிகள் வந்தால் ஸ்ரீமந்திரம் எனப்படும் புரி கோயிலுக்கு அந்த வீட்டார் வந்து மூன்று தெய்வங்களையும் நிகழ்ச்சிக்கு வர நேரில் அழைப்பு கொடுத்துவிட்டுப் போவார்கள். மும்பையில் கம்ப்யூட்டர் துறையில் ஈடுபட்டுள்ள புரி பக்தர் ஒருவர் ஆன்லைனில் சுவாமிக்கு அழைப்பு சமர்ப்பிக்க ஒரு இணைய தளத்தை வடிவமைத்துள்ளார். வீட்டு நிகழ்ச்சிக்கு ஆகும் செலவுடன் சாமிக்கு அழைப்பு கொடுக்க வந்து செல்லும் செலவும் சேர்ந்து கொள்வதை இந்த ஆன்லைன் வசதி மூலம் தவிர்க்கலாம். எந்தக் குறிப்பிட்ட தேதியில் சுவாமி சன்னிதியில் அழைப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை அழைக்கின்ற குடும்பத்தார் பதிவு செய்ய முடியும். இதற்கான சிறுகட்டணம் அந்த தேதியில் பணியில் இருக்கும் அர்ச்சகரிடம் ஒப்படைக்கப்படும். சாமிக்கும் பக்தருக்கும் பிணப்பு வலுப்பட இது உதவக்கூடும். புரி திருக்கோயிலுக்கு காணிக்கை அனுப்பவும். ஆன் லைன் வசதி செய்யப்படுகிறது.

கோஹிமா (நாகாலாந்து), டிசம்பர் 17
பாரம்பரியத்தை மறக்காத நாகா நல்லிதயங்கள்!
பர்மா எல்லையை ஒட்டிய வடகிழக்கு மாநிலம் நாகாலாந்து வாழ் மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் 1 முதல் 10 வரை 10 நாட்கள் ஹார்ன்பில் திருவிழா கொண்டாடி வருகிறார்கள் . பத்து நாட்களும் ஆடல் பாடல் கொண்டாட்டம் தான். ஆனால் எல்லாம் நாகாலாந்தின் உண்மையான நாக பாரம்பரிய மரபின்படிதான். நாகாலாந்தில் 99% பேர் கிறிஸ்தவர்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் பாரம்பரிய விழாக்களையும் கலைகளையும் கைவினை நுட்பங்களையும் கைவிடவில்லை. ஹார்ன்பில் திருவிழா நாட்களில் இவை எல்லாம் வண்ணமயமாக காட்சிப்படுத்தப்பட்டு நாக மக்களை மட்டுமல்லாமல் நாடுநெடுக இருந்து எல்லா மக்களையும் ஈர்க்கின்றன. தொன்றுதொட்டு ஹார்ன்பில் பறவை நாகா மக்களால் போற்றப்படுவதால் அந்தப் பறவையின் பெயரால் விழா. நாகலாந்து தலைநகர் கோஹிமாவில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிஸாமா கிராமத்தில் நடக்கும் இந்தத் திருவிழாவில் கல்லை கட்டி இழுக்கும் சடங்கு பிரபலம். பிரம்மாண்டமான பரபரப்பை ஏற்படுத்தும். 16 டன் எடையும் 20 மீட்டர் நீளமும் உள்ள ஒரு பாறாங்கல்லை ஊரே கூடி இழுக்கும். மூன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த கல்லை இழுத்து வர நான்கு மணி நேரம் ஆகிறது ஊரிலுள்ள பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள், சுற்றுலா பயணிகள் எல்லோருக்கும் அந்த நாலரை மணி நேரம் போவதே தெரியாது அவ்வளவு பரபரப்பு. மதம் மாற்றப்பட்டாலும் இந்த வனவாசி (பழங்குடி) மக்கள் தங்கள் பாரம்பரியத்தை கைவிட தயாரா யில்லை

Post a Comment

0 Comments