SETU-13

மாற்றுத் திறனாளிகளை மனதில் கொண்டு சுற்றுலா
பணாஜி (கோவா), டிசம்பர் 16
கோவாவில் வருவாய் ஈட்டும் மிக முக்கியமான தொழில் சுற்றுலா என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய ஒரு வசதி கோவாவில் வர இருக்கிறது. சமூக வலைதளங்களில் வலம் வரும் ஜப்பானிய வீடியோவில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி ரயிலில் பஸ்ஸில் மாற்றுத் திறனாளியான பயணி ஏறுவதைப் பார்த்திருப்போம்.  அந்த வசதி கோவாவிற்கு வருகிறது. வீல் சேர் டாக்ஸி எனப்படும் அந்த வசதியை தனியார் நிறுவனம் ஒன்று இயக்குகிறது. உள்நாட்டுப் பயணிகளும் வெளிநாட்டுப் பயணிகளும் கோவாவை வெகுவாக நடுவதால் இந்த வசதி மிகவும் பயன்படும் என்று அந்த நிறுவனத்தார் தெரிவிக்கிறார்கள். முதியவர்களுக்கும் உடல் சிரமம் உள்ளவர்களுக்கும் தனி கவனம் செலுத்தி அவர்களது சுற்றுலாவை மன நிறைவு  தருவதாக ஆக்கும் விதத்தில் சேவை  வழங்கும் அந்த நிறுவனம் முதல் கட்டமாக 5 டாக்சிகளை கொண்டு இந்த சேவையை விரைவில் வழங்க இருக்கிறது. (கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அலுவல்களை கவனிக்கத் தொடங்கி இருக்கிறார். அண்மையில் ஒரு பாலம் கட்டும் திட்டப் பணியைப் பார்வையிட அவர் சென்றதை செய்தியில் பார்த்து, திறன் மிக்க அந்த முதல்வர் நலம் அடைவது பற்றி மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்கள் வாசகர்கள்).

அயோத்தியில் ராமர் கோயில் வர
ஜம்மு காஷ்மீரில் ஹிந்துக்கள் போர் முழக்கம்!
ஜம்மு (ஜம்மு-காஷ்மீர்), டிசம்பர் 16
டெல்லி, நாகபுரி, மும்பை, பெங்களூரு, சிம்லா, சென்னை என்று நாடு நெடுக லட்சோப லட்சம் பக்தர்கள் கூடி “அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்ட வேண்டும், அதற்கு அரசு சட்டம் இயற்ற வேண்டும்” என்று கோரி பேரணிகள் நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் டிசம்பர் 16 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் அகில இந்திய துறவியர் மாநாட்டு அமைப்பின் தலைவர்  ஹம்சதேவாசார்யர்  உள்ளிட்ட ஏராளமான   ஆன்மீகப் பெரியோர் கலந்து கொண்ட  பேரணியை விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தியது. “இதோ, இங்கே விழிப்புணர்வூட்டும்  சங்கொலி முழக்கம் எழுப்பி உள்ளோம். .பிரயாகையில் கும்பமேளாவின் போது 2019 ஜனவரி 31, பிப்ரவரி1 தேதிகளில் நடைபெற உள்ள துறவியர் பேரணியில் தேசத்தின் எல்லா துறவிகளும் ஒன்றாக அமர்ந்து பேசி ராமர் கோயிலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பார்கள் ராமர் கோயில் கட்ட சிற்ப பணி நடைபெற்று வருகிறது. அது நிறைவேறுவதற்காக தான் துறவிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு உலகில் யார் தடுத்தாலும் அங்கு ராமர் கோயில் கட்டும் திருப்பணியை தடுக்க முடியாது. 1992 டிசம்பர் 6ம் தேதியே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது. படையெடுப்பாளனின் அவமானச் சின்னத்தை அப்புறப்படுத்துவதற்கு நாங்கள் எவருடைய அனுமதியும் நாடவில்லை என்பதை நினைவூட்டுகிறோம். தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்கிறவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், நாங்கள் தயார்!” என்று மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அந்தத் துறவி முழங்கினார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய செயலர் ராஜேந்திர சிங் பங்கஜ் உள்ளிட்ட  பிரமுகர்கள் இந்த தர்ம சபாவில் (அறப் பேரணியில்) கலந்து கொண்டார்கள்.

ராஞ்சி பல்கலை மாணவர் சங்கம் முழுமையாக அபாவிபவிடம்!
ராஞ்சி (ஜார்க்கண்ட்), டிசம்பர் 16
ராஞ்சி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் அபூர்வமான ஒரு வெற்றியை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் வேட்பாளர் ஒருவருக்கு அளித்துள்ளது. செயலர் பதவிக்கு போட்டியிட்ட அபாவிப வேட்பாளர் சவுரப் போஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படும் இந்த மறைமுக தேர்தலில் பதிவான  எல்லா 45 வாக்குகளையும் பெற்றார். பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற 15 கல்லூரிகளில் மொத்தம் 80 இடங்களில் 40 ஐ அபாவிப கைப்பற்றியுள்ளது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணை செயலாளர். முதுகலைத் துறை சங்கம் என ஐந்து பதவிகளையும் அபாவிப வேட்பாளர்கள்  கைப்பற்றியிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் முறையே, நேஹா மர்டி,  குனால் குமார் சர்மா, சவுரப் போஸ், சவுரப் குமார், அங்கித் ரஞ்சன். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற அரசியல் கட்சி  நிறுத்திய வேட்பாளர்களும் சர்ச் தூண்டிவிட்டு களத்தில் இறங்கிய ஆதிவாசி சாத்ர சங்க  வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தார்கள். தேர்தல் முடிவடைந்த பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு ராஞ்சி பல்கலைக்கழக துணைவேந்தர் ரமேஷ் குமார் பாண்டே சான்றிதழ்களை வழங்கினார். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மேளதாளத்துடன் நகரில் ஊர்வலம் சென்றார்கள்.


கீதா ஜெயந்தி விழாவில் ஐந்தாம் படை ஆட்கள் ஐந்தாறு பேர்!
குருக்ஷேத்ரம் (ஹரியானா), டிசம்பர் 16
அர்ஜுனனுக்கு கண்ணன் பகவத் கீதையை உபதேசித்த குருக்ஷேத்திர மாநகரில் டிசம்பர் 3 முதல் 27 வரை  சர்வதேச கீதா ஜெயந்தி விழா நடைபெறுகிறது. பாரத குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கங்கா பூஜை செய்து விழாவைத் துவக்கி வைத்தார். பாரதத்துடன் மொரிசியஸ் நாடு இந்த விழாவின் இணை அமைப்பாளர் தேசமாக தன்னை இணைத்துக் கொண்டது. குஜராத்,  இணை அமைப்பாளர் மாநிலமாக தன்னை இணைத்துக் கொண்டது. விழாவில் 30 லட்சம் பேர் பங்கேற்க இருக்கிறார்கள் என்று மாநில பாஜக அரசின் முதலமைச்சர் மனோகர் லால் கட்டர்  தெரிவித்தார். கடந்த ஆண்டு 25 லட்சம் பேர் பங்கு கொண்டதாக அவர் கூறினார். இந்த நிலையில் பிரம்ம சரோவர் பகுதியில் ஐந்தாறு இளைஞர்கள் பாகிஸ்தான் தேசியக் கொடி படம் போட்ட பலூன்களை விற்றுக் கொண்டிருந்தது காவல் பணியில் இருந்த ஹோம் கார்டு மல்கன் சிங் கண்ணில் பட்டது. காவல் துறைக்கு தெரிவித்து அவர்கள் வருவதற்கு முன் விஷமிகள் தப்பி ஓடினார்கள்.  காவல் நிலையம் அருகிலும் சில பலூன்கள் கிடந்தன.  பலூன்களை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு  செய்கிறார்கள்.

Post a Comment

0 Comments