SETU-10

சிம்லா (ஹிமாச்சல் பிரதேசம்), டிசம்பர் 13
“ராமர் கோயிலுக்கான சட்டம் வழக்குகளில் ஜெயிக்கக் கூடியதாக இருக்கணும்”: விஸ்வ ஹிந்து பரிஷத்
 “அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்காக பாரத அரசு இயற்ற வேண்டிய சட்டம் நீதிமன்றத்திற்கு போனாலும் சரியான சட்டம் என்ற தீர்ப்பு பெறக்கூடியதாக இருக்க வேண்டும்” என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேசத் தலைவரும் ஹிமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநருமான விஷ்ணு சதாசிவ கோக்ஜே கூறினார். விரைவில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று ஹிந்துக்களின் உணர்வை அரசுக்கு எடுத்துக்கூறும் வகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஹிமாச்சல் பிரதேச மாநிலத் தலைநகர் சிம்லாவில் நடத்திய பேரணியில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். ஹிந்துக்களின் தாராள மனப்பான்மையை அவர்களின் பலவீனம் என்று கருதி விடாமல் ஹிந்துக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கோரினார். பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் ராமர் கோயில் விஷயத்தை இப்போது பெரிதுபடுத்துவது தேர்தலுக்காக என்று பேசினார்கள். அது தவறு. இது ஹிந்துக்களுடைய உணர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் கோக்ஜே. ராமன் என்பது கற்பனைப் பாத்திரம் என்று நீதி மன்றத்தில் வாக்குமூலம் அளித்த காங்கிரஸ் கட்சிதான், ஓட்டு வேட்டை ஆடுவதற்கு கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். பாரத தேசத்தில் மக்களின் மத உணர்வு பற்றிய அறிவு நீதிமன்றங்களுக்கு கிடையாது, மக்களுடன் நேரடித் தொடர்பும் கிடையாது, நீதிமன்றங்களில் புத்தகங்களை வைத்துக் கொண்டு விவாதம் செய்து தீர்ப்பு வழங்குகிறார்கள் என்றார் அவர். ஹிந்துக்களின் உணர்வு எப்படிப்பட்டது என்று நீதிமன்றத்துக்கு எடுத்துக் காட்டுவதற்காக இதுபோன்ற பேரணிகள் நடத்தப்படுகின்றன என்று அவர் கூறினார். ஆர் எஸ் எஸ்ஸின் மாநிலத் தலைவர் வீர்சிங் ராங்டா, பரிஷத்தின் மாநிலத் தலைவர் ஆசுதோஷ் அகர்வால், ஆர் எஸ் எஸ்ஸின் மாநில அமைப்பாளர் சஞ்சீவன் ஆகியோரும் பேரணியில் பேசினார்கள்.

கியோடா கிராமம் (ஹரியானா), டிசம்பர் 13
எல்லோரையும் தொற்றிக் கொள்ளும் யஸ்வீர் வெற்றி!
ஹரியானா விவசாயி யஸ்வீர் என்ற அன்பரை சந்திப்போமா? கியோடா கிராமத்தை சேர்ந்த இவர் ஆர் எஸ் எஸ்ஸின் தொடர்பால் ஏற்பட்ட ஊக்கம் காரணமாக தனது நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் ரசாயன உரம் ஏதும் போடாமல் இயற்கை வேளாண்மை முறையில் பாசுமதி நெல் சாகுபடி செய்தார். விளைச்சல் அமோகம். வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி ஏற்பட்டது. அறுவடைக்குப் பிறகு வயலிலேயே அவர் பயிலரங்கம் ஒன்று நடத்தினார். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வந்திருந்த 55 விவசாயிகள் இயற்கை வேளாண்மையின் நன்மைகளை கண்கூடாக பார்த்தார்கள். வயலை பரிசோதித்துப் பார்த்தார்கள். இயற்கை வேளாண்மை பற்றி எடுத்துச் சொல்வதற்காக ஹரியானா விவசாயப் பல்கலைக் கழக வேளாண் விஞ்ஞானி முனைவர் ஓ பி சவுதரி வந்திருந்தார். ரசாயன உரம் மண்ணுக்கும் மனிதனுக்கும் எப்படி உடல்நலக் கேடு என்று விளக்கினார். இந்த சந்தர்ப்பத்தில் ஆர். எஸ். எஸ்ஸின் கிராம விகாஸ் மாநிலப் பொறுப்பாளர் குல்தீப், விவசாய இடுபொருள் செலவைக் குறைத்து நிகர லாபத்தை அடைவது எப்படி என்று விளக்கினார். தேச நன்மையை முன்னிட்டு இயற்கை விவசாயத்தை ஏற்கும்படி கூறினார். வந்திருந்த விவசாயிகள் இயற்கை வேளாண்மை செய்து பார்ப்போம் என்று மனநிறைவுடன் உறுதி கூறினார்கள்.

முஜபர்பூர் (பிஹார்), டிசம்பர் 13
இங்கே நாளைய ஒலிம்பிக் வீரர்-வீராங்கனைகள் உருவாகிறார்கள்
“துள்ளித் திரிகின்ற பருவத்திலே என் துடுக்கடக்கி வைக்காமல் விட்டு விட்டார்களே” என்பது பழைய பாட்டு. “நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்பதுதான் புதிய பாட்டு - என்று முஜபர்பூரில் வனவாசி கல்யாண் ஆசிரமம் அமைப்பின் பிஹார் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் பேசும்போது மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சுரேஷ் சர்மா கூறினார். நாடு நெடுக வனங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் நலப்பணிகள் புரிந்துவரும் வனவாசி கல்யாண் ஆசிரமம் அமைப்பு, வனவாசி குழந்தைகளின் அபாரமான உடல் வலிமை கண்டறிந்து அவர்களை முறையான பயிற்சி மூலம் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் ஆக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. “விளையாட்டு வீரர் கடின உழைப்பால் மட்டுமே வெற்றி குவிக்கிறார். விளையாட்டு என்று வந்துவிட்டால் அதில் உயர்வு தாழ்வு எண்ணம் கிடையாது. இந்த உணர்வு சமுதாயம் முழுவதும் பரவுமானால் தேசத்திற்கு நல்லது” -இவ்வாறு அமைச்சர் மேலும் கூறினார். விழாவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அமைப்பாளர் ராம்குமார், வனவாசி கல்யாண் ஆசிரமம் அமைப்பின் அகில பாரத விளையாட்டுக்கள் பொறுப்பாளர் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். போட்டிகளில் 11 மாவட்டங்களிலிருந்து 295 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கு கொண்டார்கள்.

ஷில்லாங் (மேகாலயா), டிசம்பர் 13
“பாரதம் ஹிந்து நாடு”: மேகாலயா உயர்நீதிமன்றத் தீர்ப்பு
“பாரதம் 1947-ல் சுதந்திரம் பெற்றபோது பாகிஸ்தான் பிரிந்து போய் தன்னை முஸ்லிம் நாடு என்று அறிவித்துக் கொண்டது. எனவே இந்தியாவும் தன்னை இந்து நாடு என்று அறிவித்திருக்கவேண்டும்” இவ்வாறு தீர்ப்பாணை ஒன்றில் மேகாலய உயர் நீதிமன்றம் திட்தவட்டமாகக் கூறியிருக்கிறது. தீர்ப்பை வழங்கியவர் நீதியரசர் சுதீப் ரஞ்சன் சென். இருப்பிட சான்று பெறுவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக சிலர் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அந்த வழக்கில் தீர்ப்பு வழங்குகையில் நீதியரசர் சென் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள் சீக்கியர்கள் கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியாவில் வசிக்க பாரத பிரதமர், உள்துறை அமைச்சர், எம்பிக்கள் உள்ளிட்டோர், அனுமதி தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.இவ்வாறு உத்தரவிட்டு வழங்கிய 37 பக்கத் தீர்ப்பில் பின்வரும் மூன்று வரலாற்று கட்டங்களை நீதியரசர் சென் விவரித்திருந்தார்: ’அ. இந்தியா மிகப்பெரியதாக இருந்தது இந்து ஆட்சி நடை பெற்ற நாடாக இருந்தது. ஆ. முஸ்லிம் படையெடுப்பு வந்தது பிறகு பிரிட்டிஷ் ஆதிக்கம் வந்தது இ. பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெறும் போது தேசப் பிரிவினை நடந்தது. லட்சோப லட்சம் சீக்கியர்களும் ஹிந்துக்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். மூதாதையர் வீடுகளைத் துறந்து உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ள ஏராளமானவர்கள் பாரதத்திற்குள் வந்து சேர்ந்தார்கள்’. நீதியரசர் சென் மாநில தலைநகர் ஷில்லாங்கில் பிறந்து வளர்ந்து படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி பிறகு நீதிபதி ஆனவர்.

Post a Comment

0 Comments