அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் அறைகூவல்

பாரதத் தலைநகர் டில்லியில் ராமலீலா மைதானத்தில் 2018 டிசம்பர் 9 அன்று ஏராளமான துறவிப் பெருந்தகையர் கூடியிருந்த ’தர்ம சபா’ துறவியர் பேரவை பேரணியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்கார்யவாஹ் (அகில பாரத பொதுச்செயலர்) சுரேஷ் ஜோஷி ஆற்றிய கருத்துரை:

இங்கு குழுமியிருக்கிற துறவியர்களின் பிரம்மாண்டமான பேரணி காணும் நாம் பேறு பெற்றவர்கள். நம்முடைய மனதில் எழும் உணர்வுகளுக்கு வணக்கத்திற்குரிய இந்த துறவியர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். தேசத்தில் இந்த போராட்டம் கடந்த முப்பதாண்டுகளாக நடைபெற்றுவருகிறது. 

அவ்வப்போது ராம பக்தர்கள் தங்களுடைய விழிப்புணர்வை உலகமே அறிய வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த துறவியர் பேரணி சிலகாலமாக நின்றுபோயிருந்தது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக இன்று இளையதலைமுறையின் உள்ளங்களும் இந்த விஷயத்தில் ஈடுபட்டிருக்கிறது. இளைஞர்கள் உள்ளத்தில் ராமர்கோயில் விஷயத்தில் எவ்வளவு ஆர்வம்! ராமர் கோயில் வராததால் எவ்வளவு துயரம்! என்னவெல்லாம் எதிர்பார்ப்பு -- என்பதை இந்த துறவியர் பேரவை தெளிவாக காட்டுகிறது. இது அந்த விழிப்புணர்வின் அடையாளம். 

எத்தனை நாள்தான் போராட்டம் இப்படியே நடந்துகொண்டிருக்கும் என சிலர் என்னை கேட்பார்கள். அவர்களுக்கு நான் கூறிக்கொள்வதெல்லாம் இதுதான். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படாதவரை இந்த எழுச்சி இடையறாமல் நீடிக்கும். இது போன்ற எல்லா விஷயங்களிலும் நல்லெண்ணமும் அமைதியும் நமது பாதைகள். இதுதான் பாரதத்தின் சுபாவம். யாருடனும் நாம் போராடுவதில்லை. நாம் நடத்திய போராட்டமெல்லாம் வெளியில் இருந்து வந்த அந்நிய சக்திகள். படையெடுப்பாளர்கள். இந்த சமுதாயத்தை பீதியில் உறையச்செய்தவர்கள். இந்த சமுதாயத்தை அழிக்க முயற்சி செய்தவர்கள் -- அப்படிப்பட்ட வெளிநாட்டு படையெடுப்பாளர்களோடுதான் நமது போராட்டம் நடைபெற்றது. இந்த தேசத்திற்குள் உள்ள எல்லா வழிபடு முறைகளை, எல்லாவிதமான உபாசனைகளை பின்பற்றுகிறவர்கள் எவருடனும் நமக்கு எந்தவொரு மோதலும் கிடையாது. எனவேதான் எல்லாவற்றையும் அமைதிகரமாக நல்லெண்ணத்துடன் நிறைவேற்றவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இந்த திசையில் முயற்சி செய்கிறவர்கள் அனைவருக்கும் நாம் நமது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறோம். இதில் தொடர்புள்ள அனைவரும் ஆக்கப்பூர்வமாக முயற்சி செய்யவேண்டும் என்பது அவசியம். போராட்டம் தான் செய்யவேண்டும் என்றால் இதுநாள்வரை நாம் காத்திருந்திருக்கமாட்டோமே? 

ஆண்டு 2010ல் உச்சநீதிமன்றத்தின் லக்னோ கிளை ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆனால் சில குறைபாடுகள் அதில் இருந்துவிட்டன. எனவே நாம் உச்சநீதிமன்றத்தை அணுகினோம். அந்த சிறு குறையை உச்சநீதிமன்றம் நிறைவு செய்யவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

எந்தவொரு தேசத்திலும் தன்மானம் உள்ள தேசபக்த சமுதாயம் அடிமைத்தனத்தை, அந்நிய ஆட்சியின் அடையாளங்களை படையெடுப்பாளர்களின் சின்னங்களை ஒப்புக்கொள்ளாது. இந்த தேசத்தில் வாழ்ந்து வருகிற நமக்கும் சுயமரியாதை உண்டு. படையெடுப்பாளர்களின் அடையாளங்களை அப்புறப்படுத்தியே தீருவோம் என்ற உறுதி தேசத்தின் 125 கோடி மக்களுக்கு வேண்டும். இதுதான் நம் அனைவரின் கனவு. நம் அனைவரின் பேரார்வம். 

ராமராஜ்யம் வர வேண்டும் என்று மக்களுக்கு ஒரு கனவு உண்டு என்று. எத்தனையோ மகான்கள் உரக்க கூறியிருக்கிறார்கள். ராமராஜ்யத்தில் நீதி இருக்கும், ராமராஜ்யத்தில் பாதுகாப்பு இருக்கும், ராமராஜ்யத்தில் வளர்ச்சி இருக்கும், ராமராஜ்யத்தில் நம்பிக்கைகளுக்கு பாதுகாப்பு இருக்கும். ராமராஜ்யம் என்பது அமைதி என்ற சேதி தருவது. இப்படிப்பட்ட ராமராஜ்யத்தை நாம் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம். 

எந்த வழிபடுமுறையைப் பின்பற்றுபவர்கள் ஆனாலும் சரி பாரதத்தில் அமைதியை விரும்பாதவர்கள் உண்டா என்ன? எல்லோருக்குமேதான் ராமராஜ்யம் வரவேண்டும் என்ற எண்ணம் உண்டு. ராமராஜ்யம் என்பது மத அரசு அல்ல. நலவாழ்வையும் அமைதியையும் பொழிகிற அரசுதான் ராமராஜ்யம். இப்படி எத்தனையோ மகான்கள் கூறிச்சென்றிருக்கிறார்கள். மகாத்மா காந்தியும் நாம் ராமராஜ்யம் என்ற கனவு காண்கிறவர்கள் என்றுதான் கூறினார். 

125 கோடி தேசபக்த பாரத வாசிகள் கொண்ட சமுதாயம் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் இந்த மண்ணில் நீதி கிடக்கும் என்ற உணர்வு நிலவுகிறது. அந்த நற்பெயர் நீடிக்க வேண்டும். நீதிமன்றங்களின் கௌரவம் நீடித்திருக்கவேண்டும். நீதி நெறியிலும் நீதி அமைப்பிலும் நம்பிக்கையற்றுப் போகிற தேசத்தில் முன்னேற்றம் சாத்தியமில்லாமல் போகிறது. 
எனவேதான் நீதித்துறை இது குறித்து சிந்தனை செய்யவேண்டும் என நாம் கூறுகிறோம். 

இவ்வளவு பெரிய ஹிந்து சமுதாய சக்தி இருக்கிறதே, இதன் உணர்வுகளுக்கு இன்று ஆட்சி அதிகார மையத்தில் உள்ளவர்களும் மரியாதை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். தனது நம்மதிப்பை காப்பாற்றிக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுத்தாகவேண்டும். ஜனநாயகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு என சக்தி உண்டு. உங்கள் வல்லமை அத்தனையையும் பயன்படுத்தி இந்த திசையில் முன்னேறுங்கள் என்பதுதான் இன்றைய ஆட்சியாளர்களிடம் நாம் வேண்டுவதெல்லாம். நதப்பது ஜனநாயகம். இதில் மக்களின் விருப்பத்தை, சாமானிய மனிதரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது ஆட்சியின் முன்னுரிமையாக இருக்கவேண்டும். மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து, மக்களின் உணர்வுகளை அவமதித்து தேசம் சுயமரியாதையுடன் வாழமுடியாது. தேசத்தில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு ஏற்படச் செய்வது அவசியம். ஜனநாயகத்தில் ஆட்சி என்பது அனைத்திற்கும் மேலானது என்பதல்ல நாம் கூறுவது. மகத்துவம் மிக்க பங்காற்றக் கூடியது ஆட்சி. அதிகார மையத்தில் அமர்ந்துள்ளவர்கள் இதைப் புரிந்துகொள்ளட்டும்.

இன்று மத்தியில் ஆட்சி அதிகாரத்தை நிர்வகிக்கும் சகோதரர்கள் இந்த சமுதாயத்தின் உணர்வுகளை நன்கு அறிந்தவர்கள் என்பது நமது நம்பிக்கை. அறிந்தவர்கள் என்பது மட்டுமல்ல. சமுதாயத்தின் கருத்தை ஒப்புக்கொள்கிறவர்கள் கூட. நெஞ்சைத் தொட்டுப் பார்த்து கேட்டுக்கொண்டால் அவர்கள் மனதிலும் நாம் இப்போது வெளியிடுகிற இதே சிந்தனைதான் இருக்கும் என்று கருதுகிறோம். இந்த நம்பிக்கை நீடிக்கவேண்டும். அறிவித்தால் நல்லது என்று சில சமயம் தோன்றுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும், ராமஜன்ம பூமியிலேயே கட்டப்படும் என்று அவர்களும் அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் எண்ணமும் அதுதான்.அதை நிறைவேறும் தருணம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது. இன்று ஆட்சியில் உள்ளவர்கள் அனைவருமே ராமர் கோயில் அங்கேயே கட்டப்படும் என்று அறிவித்தவர்கள்தான். அவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் திசையில் முன்னேறவேண்டும். அவர்களிடம் நாம் கேட்பதெல்லாம் இதுதான். 

அரசியல் சாஸன ரீதியிலான பாதை உள்ளது. ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்திற்கும் உரிமை உள்ளது. நாடாளுமன்றத்திற்கு கடமையும் உண்டு. எனவே சட்டம் இயற்றும் திசையில் இன்றைய அரசு அடியெடுத்து வைக்கவேண்டும் என்பதுதான் இங்கே வீற்றிருக்கும் வணக்கத்திற்குரிய துறவியர்கள் வாயிலாக வெளியிடப்பட்ட உணர்வும் கோடானு கோடி ராம பக்தர்கள் மனதில் உள்ள ஆசையும். அதைத் தவிர வேறு வழி இப்போது எனக்குத் தோன்றவில்லை. இந்த புனிதமான பணி நிறைவேற வேண்டுமானால் முட்டுக்கட்டைகளை எல்லாம் நீக்கி விலக்கி அஞ்சாமல் முன்னேறுவது அவசியம். ராமபக்தர்களாகிய நாம் அனைவரும் கேட்டுக்கொள்வது அவள்ளவுதான். நாம் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. நாம் நமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறோம். அந்த உணர்வுகளை மதிக்கவேண்டும். நம் விருப்பங்களை பூர்த்தி செய்வதில் ஆட்சிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இன்று ஆட்சி செய்யும் சகோதரர்கள் எல்லா விஷயங்களையும் நன்றாக புரிந்துகொண்டு ஆக்கபூர்வமான முன்முயற்சிக்கான திசையில் அடியெடுத்து வைப்பார்கள் என்ற நமது நம்பிக்கையை நாம் அனைவரும் வெளிப்படுத்தியுள்ளோம்.

நாடு முழுவதிலும் இருந்து 1992 ம் ஆண்டு வந்திருந்த கரசேவகர்களான ராமபக்தர்கள் தங்கள் சக்தியையும் ஆற்றலையும் காட்டி அந்நிய ஆக்கிரமிப்பாளனின் அந்த அவமானச் சின்னத்தை அப்புறப்படுத்தினார்கள். ஆனால் பணி அரைகுறையாக நிற்கிறது. கட்டிடம் தகர்க்கப்பட்டுவிட்டது. இல்லாமல் போய்விட்டது. அதன் மிச்ச சொச்சம் எதுவும் இல்லை. ஆனால் ராமபிரானோ அங்கே ஒரு கூடாரத்தில் குடியிருக்கவேண்டியிருக்கிறது. ராமபிரானை தரிசிக்க அங்கே போகிறவர்களுக்கெல்லாம் மனதில் வேதனை ஏற்படுகிறது. நாமெல்லாம் போற்றித் துதித்து வணங்கும் தெய்வம் ஆண்டுக்காண்டு இப்படியே கூடாரவாசியாக இருக்கத்தான் வேண்டுமா என்ற பரிதவிப்பு ஏற்படுகிறது. ராமபிரான் கூடாரத்தில் தங்கிக்கொண்டிருப்பார், அதை ராம பக்தர்கள் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டுமா? அண்மையில் அயோத்தி சென்றிருந்தேன். ராமபிரானை தரிசித்தேன். ராமபிரானை பிரம்மாண்டமான கோயிலில் தரிசிக்கவே இன்று நாடு முழுவதிலும் ராமபக்தர்கள் விரும்புகிறார்கள் என்ற நினைவு எழுந்தது.. 

கூடார வாச காலகட்டம் முடிவடையப்போகிறது. இன்னும் சற்று விசையுடன் உந்தித்தள்ளவேண்டியிருக்கிறது. கோயில் கட்டும் பணி தொடங்கியாகவேண்டும். ராமபிரானை பிரம்மாண்டமான ராமர் கோயில்தான் நான் இனி தரிசனம் செய்யவேண்டும் என நாம் எல்லோரும் விரும்புகிறோம். இந்த சங்கல்பத்தை இதன் வரைபடத்தை இந்த கற்பனையை உருவாக்கிவிட்டோம். ராமர் கோயில் கட்ட தேசம் முழுவதிலும் ஒவ்வொரு ஊரிலும் இருந்து செங்கல் பூஜித்து அயோத்திக்கு மக்கள் அனுப்பியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கற்பனைகளையெல்லாம் மனதில் தேக்கி மீண்டும் பிரம்மாண்டமான ராமர் கோயில் உருவாகவேண்டும் என்பதே நம் அனைவரும் விரும்புவது. நம்முடைய ஆசை அதுதான்.

ஒருநாள் உதயமாகப்போகிற ராமராஜ்யத்தின் அஸ்திவாரமாக பிரம்மாண்டமான இந்த ராமர் கோயில் கட்டும் பணி அமையும் என்று நான் கூறிக்கொள்வேன். எதிர்காலம் சிறப்பாக அமையும். நமது இந்த பாரத்தேசம் ஹிந்துஸ்தானம் நமது சமுதாயம் எந்த திசையில் முன்னேற உள்ளதோ அந்ததிசையை நிர்ணயிப்பதில் மிகப்பெரிய நடவடிக்கை ராமபிரானுக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டுவது. அதன் தொடக்கம்தான் இது. உலகம் முழுவதற்கும் மானிட சேதி ஒன்று அனுப்ப விரும்புகிறோம். சுமுக வாழ்வுக்கான சேதி இது. ராமபிரானின் வாழ்க்கை பாரதத்திற்கு மட்டுமல்ல மனித குலம் முழுமைக்கும் பாதைகாட்டுகிறது. எனவே ராமர் கோயில் கட்டும் இயக்கத்தை குறுகிய நோக்கில் பார்க்கவேண்டாம். உலகம் முழுவதிலும் உள்ள சமுதாயங்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கிறோம். சுதந்திர தேசம் ஒன்று தன் சுயமரியாதையை நிலைநாட்டும் முயற்சி இது. சுய மதிப்பை மீண்டும் நிலைநிறுத்தும் பணி ராமபிரானின் ஆலயத்துடன் தொடங்கும். 

நாளைய பாரதம் எப்படி என்பது நிர்ணயிக்கப்பட உள்ளது. இதுபோன்ற தடைகளெல்லாம் நீங்கியபிறகு கோயில்கட்டும் பணி தொடங்கியதும் பல்வேறு தடைகளும் நீங்கும். தேசத்தின் சமயப் பெரியவர்கள், மடாதிபதிகள், மகாமண்டலேஸ்வரர்கள், ஆச்சார்யர்கள் அனைவரும் சாமானிய மக்களுடன் தோளோடு தோள் நின்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள படித்தவர், படிக்காதவர், செல்வந்தர், வசதியான கிராமங்களில் வசிப்பவர்கள், வனங்களில் வசிப்பவர்கள், நகரங்களில் வசிப்பவர்கள் என்று கோடானு கோடி ராமபக்தர்கள் என்ன உணர்வுடன் வாழ்கிறார்களோ தர்மச்சார்யர்கள் மனதிலும் அதே உணர்வு உள்ளது. எனவே அந்த உணர்வை, விருப்பத்தை கூடிய விரைவில் நிறைவேறியாகவேண்டும். எத்தனையோ ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தாகிவிட்டது. நீதி மன்றத்தை மதிப்பதால் நாம் இதுவரை பொறுத்திருந்தோம். ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து நமது காத்திருக்கும் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று தோன்றிவிட்டது. இப்போதுள்ள ஒரே வழி துறவிப் பெருந்தகையர்கள் அனைவரும் சொன்னதுபோல அரசு சட்டம் இயற்றி எல்லா விதமான தடைகளையும் விரைவில் நீக்கவேண்டும் அதுதான் நம் அனைவருடைய எதிர்பார்ப்பும். நம் அனைவருடைய விருப்பமும். 

நிறைவாக நான் கூறிக்கொள்ள விரும்புவது இதுதான். நாடுமுழுவதும் நூற்றுக்கணக்கான பேரணிகள் நடைபெறுகின்றன. அவற்றில் எழுப்பப்படுகிற “ஜெய்ஸ்ரீராம்!” முழக்கம் நீதிமன்றத்தை எட்டும் என்று நமக்கு நம்பிக்கை உண்டு. மக்களின் உணர்வை புரிந்துகொண்டு நீதிமன்றமும் பொருத்தமான திசையில் அடியெடுத்து வைக்கும் என்று நம்புகிறோம். நீதித்துறையிடம் நாம் தெரிவித்துக்கொள்வதெல்லம், சற்று யோசித்துப் பாருங்கள் மக்களின் உணர்வுகளை மதியுங்கள் என்பதுதான். அதுமட்டுமல்ல, ஹிந்துக்களுக்கு உள்ள நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இதுதான் நீதிமன்றத்திடம் நாம் எதிர்பார்ப்பது. 

முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத்தில் ஒரு எழுச்சி தென்பட்டது. ஒரு கீதம் முழங்கியது. இன்று அந்த கீதத்தின் வரிகளை நினைத்து பார்ப்பது அவசியம். 

கோடி கோடி ஹிந்து மக்களின் உணர்ச்சி வேகத்தை மதிப்போம் என்று பாடினோம். இன்று அந்த உணர்ச்சி வேகம் எழுச்சி பெறத்தொடங்கியுள்ளது. உணர்ச்சி அலையடிக்கச்செய்து பாரதத்தை உன்னத நிலைக்கு உயர்த்துவோம் ராமபிரானுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைத்தே தீருவோம். மீண்டும் ஒருமுறை நான் கூறிக்கொள்ள விரும்புவது இதுதான். நமது விரதம், நமது சங்கல்பம் நிறைவேறும் வரை இடையறாது. இந்த இயக்கம் நடந்துகொண்டே இருக்கும். ராமபக்தர்களாகிய நாம் அனைவரும் ராமபக்தியை சக்தியுடன் வெளிப்படுத்தி வருவோம். வணக்கத்திற்குரிய அனைத்து துறவி பெருந்தகையர்களின் பாதங்களில் பணிந்து நன்றிகூறி என் உரையை நிறைவு செய்கிறேன். ஜெய்ஸ்ரீராம்!

Post a Comment

0 Comments