மனம் போன போக்கில் பொய்களைப் பரப்புவது ராகுலின் வாடிக்கை - டாக்டர் மன்மோகன் வைத்யா.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எகிப்தில் உள்ள முஸ்லீம் பிரதர்ஹூட் என்கிற தீவிரவாத அமைப்புடன் ஒப்பிட செய்த முயற்சி, தேசிய கொள்கை உடையவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பற்றி முழுவதும் அறிந்தோர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பார்த்தது போலவே கம்யூனிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் சிந்தனையாளர்கள் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் ராகுலின் இந்த கருத்தை கேட்டு சந்தோஷம் அடைந்துள்ளனர். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த உலகில் நடத்திவரும் அட்டூழியங்கள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புக்கள் செய்துவரும் தொண்டுகள் குறித்தும் நிச்சயம் தெரியாமல் இருக்காது. சமுதாயத்தில் உள்ள பலதரப்பட்ட மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்.க்கு பெருகி வரும் ஆதரவு பற்றியும் அவர் நிச்சயம் அறிந்திருப்பார். இருப்பினும் அவர் எதனால் இப்படிப்பட்ட ஒரு ஒப்பீடு குறித்து பேசினார்? 

காரணம் ஒன்றே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பற்றி அவதூறு செய்திகள் பரப்பினால் மட்டுமே, அரசியல் லாபம் அடைய முடியும் என்று அவரது அரசியல் ஆலோசகர்கள், ராகுலுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து விட்ட காங்கிரஸ், மீண்டும் தலைநிமிர இது போன்ற அவதூறு பரப்புரைகளால் மட்டுமே முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே செய்தியின் உண்மைத்தண்மையை தெரிந்துக்கொள்ளாமல், மனம் போன போக்கில் பொய்களை பரப்புவதை ராகுல் வாடிக்கையாக கொண்டுவிட்டார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர, அதை நீதிமன்றத்தில் எதிர்க்கொள்ளவே ராகுல் காந்தி தவிக்கிறார். 

ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது, நமது சமுதாயத்தை முழுமையாக ஒருங்கிணைத்து ஆன்மிகம் கலந்த நமது கலாச்சாரத்துடன் பிணைக்கும் உயரிய பணியை செய்துவருகிறது. ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்க செய்யும் பணியை முஸ்லீம் பிரதர்ஹுட் இயக்கத்துடன் ஒப்பீடு செய்வது நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்கு செய்யும் அவமரியாதை ஆகும். ராகுல் கூறும் முஸ்லீம் பிரதர்ஹுட், முஸ்லீம் அல்லாதோரை மட்டுமல்ல, சலாபி சன்னி பிரிவை சாராத முஸ்லிம்களை, பொதுவான தங்கள் கொள்கைக்கு வெளியாளாக, முஸ்லிம் அல்லாதவர்களாவே கருதுகிறது. 

இன்று (செப் 11 2018), சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வமத மாநாட்டில் ஆற்றிய உரையின் 125வது வருடமாகும். வரலாற்று சிறப்புமிக்க அந்த உரையில் பேசுகையில் ஹிந்து மதம் எவ்வாறு அனைவரையும் அணைத்துக் கொள்கிறது என்று உலகிற்கே எடுத்துரைத்தார். அந்த உரை ஏதோ அறிவுசார் விஷயங்களை பகிர்ந்துக்கொள்வது போல இல்லாமல், ஹிந்து தர்மத்தை பற்றி சற்றும் அறியாத மக்களை ஈர்க்கும் வகையில் அவர்களை ஆட்கொண்டது. "அமெரிக்க சகோதர சகோதரிகளே" என்று அவர் துவக்கிய உரைக்கு, அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது. 

அவர் அந்த உரையில் "பிற மதக்கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்கு புகட்டிய மதத்தை சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நம்புவதோடு எல்லா மதங்களும் உண்மை என்று நாங்கள் ஒப்புக்கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டை சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால் தங்கள் திருக்கோவில் சிதைந்து சீரழிந்து அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்த கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமார தழுவிக்கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். சொராஸ்டரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து இன்னும் பேணி காத்து வருகின்ற மதத்தை சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். 

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாட்களாக இருகப்பற்றியுள்ளன. அவை இந்த பூமியை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அளித்து எத்தனையோ நாடுகளை நிலைகுலைய செய்துவிட்டன. அந்த கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விட பன்மடங்கு உயர்நிலை எய்திருக்கும்." என பேசினார். 

அம்பேத்கர் "Thoughts on Pakistan" எனும் தனது புத்தகத்தில் "இஸ்லாம் என்பது தனி சமூகமாக இருக்கிறது, முஸ்லீம் அல்லாதோரை வேறுபடுத்தியே பார்க்கிறது. பிற மதங்களை சார்ந்தோரை தாழ்வாகவும், எதிரியாகவும் பார்க்கிறது" என்று குறிப்பிடுகிறார். 

ஷரியத் சட்டத்தை எல்லா இடங்களிலும் கொண்டுவர வேண்டும் என்று முஸ்லீம் பிரதர்ஹுட் விரும்புகிறது. ஆர்.எஸ்.எஸ்., ஸ்வாமி விவேகாந்தர் விரும்பிய வண்ணம் அனைத்து தரப்பினரையும் ஏற்றுக்கொண்ட, உலகனைத்தும் ஓர் குடும்பம் என்ற சித்தாந்தத்தை பேணும் உன்னதமான ஹிந்து ராஷ்ட்ரத்தை காண விரும்புகிறது. இவ்வாறு இருக்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கொண்ட முஸ்லீம் பிரதர்ஹுட் அமைப்பையும், உலகனைத்தும் ஓர் குடும்பம் எனும் கொள்கையை ஏற்றுக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் ஒப்பீடு செய்வதை எவ்வாறு ஏற்க முடியும்? 

சில ஆண்டுகள் முன்பு, ஒரு பிரபல எழுத்தாளர் என்னிடம் கூறும்பொழுது "எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்கிற நோக்கில், கம்யூனிஸ்ட்கள் துணையுடன் விஷம பிரச்சாரத்தை காங்கிரஸ் செய்து வருகிறது. அவர்களின் தேசிய சிந்தனை மறைந்துக்கொண்டே வருகிறது" என்று குறிப்பிட்டார். 

சுதந்திரத்திற்கு முன்பு ஹிந்து மஹாசபா, புரட்சியாளர்கள், மிதவாதிகள் என்று பலரையும் உள்ளடக்கியதாக காங்கிரஸ் இருந்தது. அது ஒரு அரசியல் இயக்கமாக உருவான பின்பு, சகிப்புதன்மை குறைந்து, மாற்று கருத்து கொண்டோரை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தது. சுதந்திரத்திற்கு பிறகும் கூட மாற்று கருத்து கொண்டோரை மதிக்கும் போக்கு அவ்வப்பொழுது இருந்தது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கடுமையாக எதிர்த்த பண்டித ஜவஹர்லால் நேரு, சீனாவுடனான போரில், நமது தேசத்திற்கு சிறந்த சேவையாற்றிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பை 1962ம் ஆண்டு, குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அதற்கு சில ஆண்டுகள் முன்பே, சர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ். அன்பர்கள் காங்கிரசில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 

1965ல் பாரதத்தின் மீது பாகிஸ்தான் படை எடுத்தபொழுது, அப்பொழுதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த குருஜி கோல்வால்க்கரை அழைத்து ஆலோசனை கேட்டார். இந்த சந்திப்பில் ஒரு கம்யுனிஸ்ட் தலைவரும் இருந்தார், அவர் சாஸ்திரியை பார்த்து "இந்தியாவிற்குள் சீனா நுழைந்தபொழுது உங்கள் ராணுவம் என்ன செய்துக்கொண்டிருந்தது" என்று கேட்டார். அதை கண்ட குருஜி அந்த தலைவரை பார்த்து "நமது ராணுவம் என்று கூறமாட்டீர்களா, உங்கள் ராணுவம் என்று கூறும் நீங்கள் வேறு நாட்டவரா என்ன"? என்று கேட்டார். 

1970களுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கம்யூனிச சிந்தனைகள் விளைந்தன. மோதல்களை உருவாக்கும் கருத்துக்கள் பரப்பப்பட்டன. பாஜக தவிர அநேகமாக அனைத்து கட்சிக்குள்ளும் கம்யூனிச சித்தாந்தங்களின் தாக்கம் இருக்கிறது. குறுகிய கண்ணோட்டத்துடன், அரசியல் லாபங்களுக்காக தேசத்தை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளுக்கு ஆதரவு அளிக்கும் போக்கும் நிலவி வருகிறது. தேசியத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, முற்றிலும் கம்யூனிச சிந்தனைகளை கொண்ட கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது. ராகுலின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த எழுத்தாளர்கள் எல்லோருமே இந்த கம்யூனிச பிற்போக்கு சிந்தனை கொண்டவர்களே. 

அல்லாஹ்வின் அருளால் பாரதத்தை உடைப்போம், அப்சல் குரு உங்கள் புகழ் நிலைக்கட்டும், போன்ற கோஷங்களை எழுப்புவோருக்கு காங்கிரஸ் ஆதரவு தருவது மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம். பாராளுமன்றத்தை தகர்க்க முயற்சித்த தீவிரவாதிகளுக்கு முக்கிய மூளையாக செயல்பட்டவன் அப்சல் குரு. உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவன். இவனது செயல்களை புகழ்வோருக்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என்றால், மாவோயிச சிந்தனைகளே தற்பொழுது காங்கிரஸ் கட்சியை வழிநடத்துகிறது என்று நினைக்க தோன்றுகிறது. நகர்ப்புற நக்சல்களின் சதி வேலைகள் குறித்தும் பல்வேறு ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவர்களின் செய்லகளை நியாயப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் போக்கு கவலையளிக்கிறது. ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும், காங்கிரஸ் கட்சியில் இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் நல்ல தேசிய சிந்தனையுடன் இருந்தார்கள், தேசத்திற்கு எதிராக பேசும் யாருக்கும் ஆதரவு அளித்தது இல்லை, ஆனால் இன்றைக்கு இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் தேச நலன் குறித்து சிந்திக்காமல் இருக்கிறார்கள். 

மிக பழமையான காங்கிரஸ் கட்சி, தேச விரோதிகளுடன் நேசக்கரம் நீட்டுவது என்பது மிகவும் அபாயகரமானது, கவலை அளிக்கக்கூடியது. இதன் காரணமாகவே அந்த கட்சி பலவீனம் அடைந்து வருகிறது. 125 ஆண்டுகள் முன்பு, அயல் நாடுகளில் நமது பாரம்பரியத்தை நிலை நாட்ட ஸ்வாமி விவேகானந்தர் கடல் கடந்து சென்றார். இன்றோ இந்திய அரசியல் தலைவர் ஒருவர் வெளிநாடு சென்று நமது பாரம்பரியத்தை முஸ்லீம் பிரதர்ஹூட் அமைப்புடன் ஒப்பிட்டு, நமது கலாச்சாரத்தை இழிவுபடுத்துகிறார். 

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு நிச்சயம் இடம் உண்டு, ஆனால் தேச நலன் என்று வரும்பொழுது இந்த வேறுபாடுகளை களைந்தால் மட்டுமே, தேசத்தின் நலம் காக்கப்படும். அரசியல் லாபங்களை கடந்த ஒருமையுணர்வு வந்தால் மட்டுமே, நமது நாட்டில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும், அப்பொழுது தான் ஸ்வாமி விவேகானந்தர் விரும்பிய புகழோங்கிய பாரதம் பிறக்கும். 

– டாக்டர் மன்மோகன் வைத்யா.

Post a Comment

0 Comments