RSS Tamilnadu Press Release - Full Text

தமிழக ஆர்.எஸ்.எஸ். அறிக்கை பிரசுரத்திற்காக
*****************************************************
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS) மாநில செய்தித் தொடர்பாளர் திரு.என்.சடகோபன் மற்றும் சென்னை மாநகர ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு.துரை.சங்கர் ஆகியோர் சென்னையில் (31/10/2014) நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கை.

ராஜேந்திர சோழனின் 1000 மாவது முடிசூட்டிக் கொண்ட வருடத்தினை முன்னிட்டு வருகிற நவம்பர் 9 ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பேரணி நடைபெற உள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத செயற்குழு கூட்டம் உத்திரபிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் அக்டோபர் 17-19 முடிய நடைபெற்றது. அதில் ராஜேந்திரசோழன் மூடிசூடிய 1000 மாவது ஆண்டினை நாடெங்கிலும் கொண்டாடிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலாளர் பூஜ்ய ஸ்ரீ.சங்கரானந்த சுவாமிகள், தொழிலதிபர் பத்மபூஷன் பொள்ளாச்சி என்.மகாலிங்கம், இசைக்கலைஞர் மாண்டலின் யூ.ஸ்ரீநிவாசாஸ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். கிளைகள் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இருந்ததைவிட 4,500 (ஷாகாக்கள்) அதிகரித்துள்ளது. நாடெங்கிலும் தற்போது 43,748 தினசரிக் கூடுதல்கள் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர 20,101 இடங்களில் வாராந்திர, மாதாந்திரக் கூடுதல்கள் நடைபெற்று வருகிறது. நாடெங்கிலும் 1,60,000 க்கும் மேற்பட்ட சேவைப் பணிகள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சேவாபாரதி, சார்பில் நடைபெற்று வருகிற
து.

ராஜேந்திர சோழனும் - ஆர்.எஸ்.எஸ்.ஸும்

இமயம் முதல் குமரி வரை விரிந்து பரந்துள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அன்றாட நடைமுறையில் தினசரி சொல்லப்பட்டுவருவது 'ஏகாத்மதா ஸ்தோத்ரம்'. அதாவது பாரதமாதா பக்திப்பாடல். நமது நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வார நாட்களில் சுமார் 5 லட்சம் பேரும், ஞாயிறுக்கிழமைதோறும் 10 லட்சம் பேரும் ராஜேந்திர சோழனின் பெயரை பக்தியுடனும் பெருமையுடனும் உச்சரித்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடை முறையில் இருந்து வருகிறது.

அதில் பாரத நாட்டின் அனைத்து பகுதியிலும் வாழ்ந்த மகான்கள், ரிஷிகள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், தேசபக்தர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக சேவகர்கள் எனப் பலரின் பெயர்களின் தொகுப்புப் பட்டியலே அப்பாடலாகும். அதில் தமிழகத்தை சேர்ந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பர், வள்ளுவர், பாரதி, ராமானுஜர், கண்ணகி, கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜம், சர்.சி.வி.ராமன் என பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது. அப்பட்டியலில் ராஜேந்திர சோழனின் பெயரும் உள்ளது.

அவரது ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட வெற்றித் தூண்கள் பாரதத்தில் மட்டுமல்ல ஸ்ரீலங்கா, மற்றும் பல தென்கிழக்காசிய நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. அவைகள் இன்றும் கூட காலத்தைவென்று நமது கலாச்சாரத்தின் பெருமைகளை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவரது ஆட்சியில் எண்ணற்ற கல்விச்சாலைகள் திறக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான மிகச் சிறந்த தமிழ், சம்ஸ்க்ருத நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவைகள் பல பாகங்களைக் கொண்டுள்ளன. கட்டப்பட்ட மிகப் பிரம்மாண்டமான பல ஆலயங்கள் கம்பீரமாக இன்றும் நிலைத்து நிற்கின்றன.

ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதத்தில் மொழிகளில் எழுதப்பட்டுள்ள 21 செப்புத்தகடுகள் அவரது நற்குணங்களையும், பராக்ரமத்தையும் உலகிற்கு உணர்த்துகிறது. அதன் துவக்கத்தில் பகவான் விஷ்ணுவைப் பற்றி புகழ்ந்து எழுதப்பட்டுள்ள புகழ் மாலைகள் காணப்படுகின்றன. அச்செப்புத்தகடுகள் நெதர்லாந்து நாட்டில் உள்ள (Leiden University of Netherlands) லேடன் பல்கலைக்கழக அருங்காட்சி யத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவரது சாம்ராஜ்யத்தின் எல்லை கங்கைக் கரையில் துவங்கி முழு தென்பாரதம் வரைப் பரவியிருந்தது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இருக்கின்ற ஸ்ரீலங்கா, லட்சத்தீவு, மாலத்தீவு, மியான்மார் (பர்மா), இந்தோனேஷியா, மலேஷியா, லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம்வரை பரவி இருந்தது. சீனாவுடன் ராஜீய உறவுகளை மேம்படுத்திட வேண்டி அக்காலக் கட்டத்திலேயே தூதரை நியமனம் செய்துள்ளார்.

கங்கை நீரை எடுத்து வருவதற்காக தனது தளபதி ஆர்யன் ராஜராஜன் என்பவரை அனுப்பி வைத்ததும் அல்லாமல் அந்நீரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று அந்நீரினை தான் வெட்டிய பிரம்மாண்டமான ஏரியில் கலந்து புனிதப்படுத்தினார். அதனாலேயே அவர் கங்கைகொண்ட சோழன் என்ற பட்டப் பெயரில் அழைக்கப்படுகிறார்.

வேதங்கள், உபநிஷத்துகள், தர்ம சாஸ்திரங்கள் மற்றும் பல கல்விகளைக் கற்றிட தமிழகத்தில் எண்ணாயிரம் என்கிற ஊரில் பல்கலைக்கழகம் ஒன்றினைத் துவக்கியவர் இவர்.

ராஜேந்திர சோழனின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அதே காலக் கட்டத்தில்தான் நமது நாட்டின் வடமேற்கு எல்லைப் புறத்தில் முகமது கஜினியின் படையெடுப்புத் துவங்கியது. ஆனால் அக்காலக் கட்டத்தில் ராஜேந்திர சோழனின் சாம்ராஜ்யம் முழுவதும் அமைதி நிலவி வந்தது, கடல் கடந்த வாணிபமும் சிறப்பாக நடந்து வந்தது.

முதலாவது ராஜேந்திரசோழன் கி.பி.1014 ஆம் ஆண்டு முடிசூட்டிக் கொண்டார். இவ்வருடம் அவர் முடிசூடிய 1000வது வருடம் என்பதால் அவரது பெருமைகளை, நிர்வாகத்திறனை, நல்லாட்சியின் சிறப்பம்சங்களை கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், மாநாடுகள், அனைத்து இந்திய மொழிகளிலும் அவரைப் பற்றிய நூல்கள் வெளியிடுதல் போன்ற பல நிகழ்ச்சிகளின் வாயிலாக ராஜேந்திர சோழனின் பெருமைகளை நாடு முழுவதும் எடுத்துரைத்திட ஆர்.எஸ்.எஸ். செயற்குழு முடிவெடுத்துள்ளது.
 

Post a Comment

0 Comments